கோபம் என்பது அன்பின் மறு பக்கமா? உண்மையில் இல்லை. இது ஏற்பின் மறுபக்கம், அமைதியின் எதிர்மறை. நீங்கள் உங்களுடனேயே மனதில் சமாதானமில்லாமல் இருக்கும் போது தான் கோபப்படுகிறீர்கள். சிலுவையில் இருந்த போதும் கூடக் கிறிஸ்து கோபம் அடையவில்லை, புத்தர் மீது காறி உமிழ்ந்த போதும் அவர் கோபப்படவில்லை. சீக்கியர்களின் ஐந்தாம் குருவான குரு அர்ஜன் தேவ், சூடான தட்டின் மீது உட்கார வைக்கப்பட்டுக் கொதிக்கும் மணல் அவரது உடல் மீது கொட்டப் பட்டது. அப்பொழுதும் அவர் கோபப்படவில்லை. இவர்களை இந்த வேதனையில் உட்படுத்தப்பட்டது, சரி தான் என்றோ அல்லது எப்படியோ மிகப் பொருத்தமானது தான் என்றோ அர்த்தமா? நிச்சயமாக இல்லை. மிகச்சிறந்த துறவிகளில் பலர் கோபத்தைத் தவிர்த்து, எல்லாவற்றிற்கும் மேலே அமைதியைத் தேர்வு செய்ததில் ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும்.

மற்ற நபரை அல்லது அவரது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது, அவர்களுடன் உடன்படுவதாக அர்த்தம் இல்லை, நமக்கு அதைப்பற்றியான எந்த ஒரு அபிப்ராயமும் இல்லை என்று பொருள். உங்களுடைய சொந்த மனஅமைதிக்காக, ஆழ்மனதின் அமைதியைத் தக்க வைத்துக் கொள்ள, மௌனமாக இருக்க, தவறு என்று நீங்கள் உணரும் போது, கோபம் உங்களை ஆட்டிப் படைக்காமல் இருக்க, இரண்டு தேர்வுகளே உள்ளன. அவை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது புறக்கணித்தல். புறக்கணித்தல் நடைமுறையாக இருக்கலாம் ஆனால் ஏற்பது தெய்வீகமானது. ஏற்றுக்கொள்ளுதல் போலியாக இருக்க முடியாது. அது உறுதிப்படுத்தும் ஒரு விஷயம் மட்டும் அல்ல. மற்றவர்களின் நடவடிக்கைகளை, குறிப்பாக மற்றவர் செய்வது தவறு என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியும் போது, ஏற்றுக் கொள்வதாகக் கூறி உங்களை அமைதியாக்கிக் கொள்ள முடியாது.

என்னுடைய செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் முன், நான் கேட்ட கதைகளுள் மிகவும் அழகான ஒரு கதையை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஒரு முனிவர் தனது சீடர்களுடன், கடவுள் நாமத்தைக் கூறிக் கொண்டே கங்கை நதிக்கரையில் உலவிக்கொண்டிருந்தார். அப்பொழுது தூரத்தில் ஒரு தம்பதி, மன உளைச்சலில், ஒருவர் மீது ஒருவர் கத்திக்கொண்டு இருந்தனர். அந்த மனிதரின் மனைவி கங்கையில் மூழ்கி எழும்போது தன் தங்கச்சங்கிலியை ஆற்றில் தொலைத்து விட்டார் என்பது தெரிந்தது. அவரது கணவர் இழிந்த வார்த்தைகளால் அவரைத் திட்டிக்கொண்டிருந்தார், மனைவியும் அவருக்கு ஈடாகத் திரும்பக் கத்திக்கொண்டிருந்தாள்.

துறவி நின்று, தன் சீடர்களைப் பார்த்து, “ஏன் மக்கள் கோபத்தில் கத்துகிறார்கள்?” என்று கேட்டார்.
“நாம் நமது அமைதியை இழக்கும் போது கத்துகிறோம்,’’ என்று சீடர்களில் ஒருவர் பதிலளித்தார்.
“உண்மைதான். ஆனால், மற்றவர் அருகிலேயே இருக்கும்போது ஏன் உங்கள் குரலை உயர்த்த வேண்டும்? அப்படிச் செய்தால் தான் நன்றாகக் கேட்கும் என்று இல்லை. நீங்கள் உங்கள் குரலை உயர்த்தாமலேயே, உங்களது கருத்தை விளக்க முடியும்,” என்று துறவி கூறினார்.

அவர்கள் பல்வேறு பதில்களை அளித்தனர், எதுவுமே சரியான விளக்கமாக இல்லை.

இறுதியாக, அந்த முனிவரே பேசினார்:

“கோபம் உடனடியாக ஒரு தூரத்தை உருவாக்குகிறது. இருவர் கோபப்படும்போது அவர்களுடைய இதயங்கள் இனியும் நெருக்கமாக இருப்பதில்லை, அவர்களின் உணர்வுகள் பிரிக்கப்படுகின்றன, இருவரும் பல மைல்களுக்கு அப்பால் விலகிவிடுகிறார்கள். அந்தத் தூரத்தைக் கடப்பதற்காகக் கத்துகிறார்கள். கோபம் அதிகமானால், அவர்கள் அதிக சத்தமாகவும் கத்துகிறார்கள். அவர்கள் இனியும் அன்பின் வழி, ஏற்கும் தன்மை, அருகாமையை உணரும் நிலையில் இல்லை. அவர்களால் ஒருவருக்கொருவர் கூறுவதைக் கேட்க முடியவில்லை, கத்தினால் தான் அவர்கள் கூறுவதை மற்றவர் கேட்க முடியும் என்று நம்புகிறார்கள்.
“மேலும்! இருவர்க் காதல் வயப்படும் போது என்ன நடக்கிறது? அவர்கள் ஒருவருக்கொருவர் உரத்தகுரலில் பேசுவது இல்லை, மெல்லப் பேசுகிறார்கள், கிட்டத்தட்ட முணுமுணுக்கிறார்கள், காரணம் அவர்களின் இதயங்கள் மிக நெருக்கமாக இருக்கின்றன. அவர்களுக்கு இடையே சிறிய இடைவெளி அல்லது இடைவெளியே இல்லை.
“அவர்கள் இன்னும் அதிகமாக ஒருவரை ஒருவர் நேசிக்கும் போது, அவர்கள் இன்னும் குறைவான வார்த்தைகளையே மென்மையாக மிகவும் மெதுவாக, மெல்லிய தொனியில் பரிமாறிக் கொள்கிறார்கள்; இருந்தாலும் அவர்களுக்கு நன்றாகக் கேட்கிறது, அவர்களது பிணைப்பு வலிமையாகிறது, அன்பு இன்னும் அதிகமாகிறது. இறுதியாக, அவர்கள் மெதுவாகக் கூடப் பேசுவதில்லை, ஒருவரை ஒருவர் பார்க்கிறார்கள், பேச்சை விட மௌனம் அதிக ஆற்றல் மிக்கதாக ஆகிறது. காதலிக்கும் போது இருவர் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியும்.
“எனவே நீங்கள் விவாதிக்கின்ற போது, உங்கள் காதல் பந்தத்தை உடைத்துவிடும், மற்றும் உங்களுக்கு இடையில் அதிக தூரத்தை ஏற்படுத்தும், சொற்களைப் பேசாதீர்கள்.”

கோபம் பெரும்பாலும் மனவிரக்தியில் இருந்து எழுகிறது, பொதுவாக மனவிரக்தி நிறைவேறாத எதிர்பார்ப்புகளால் ஏற்படுகிறது. நான் உங்களது ஏமாற்றத்தை அல்லது எதிர்பார்ப்புகளைச் சரியானது அல்லது தவறானது என்று முத்திரை குத்தவில்லை, நீங்களே உங்கள் சொந்த நீதிபதியாக இருங்கள். மற்றவரிடமிருந்து உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும் போது, அவை நிறைவேற்றப்படாவிட்டால், அது உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனினும், காரணம் எதுவாக இருந்தாலும் நீங்கள் கோபம் அடையும் போது, முடிவெடுக்கும் திறனை உடனடியாக இழக்கிறீர்கள், நீங்கள் நீங்களாக இனியும் இருப்பதில்லை. வார்த்தைகளால் ஏற்பட்ட சேதம் காலப்போக்கில் குணமடையலாம் ஆனால் அது திரும்பப் பெற முடியாத, சீர்ப்படுத்த முடியாததாகத் தங்கி விடுகிறது.

இரண்டு பேர் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்க முயற்சிக்கும் போது, ஒருவர் மேல் ஒருவர் முழு கவனத்தையும் செலுத்தும் போது, அவர்கள் ஒரே பரஸ்பர நிலையில் இருக்கும் போது, தானாகவே இடைவெளி குறைகிறது. அவர்களது மனம் இனியும் அதிக தூரத்தில் இல்லாததால், கத்த வேண்டிய தேவை மறைந்து விடுகிறது. இப்போதும் வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியவை இருக்கலாம், ஆனால் அவற்றின் தாக்கம் பெரிதும் குறைகிறது.

அடிப்படையில் கோபம் உங்களது கொதிநிலைப் புள்ளி ஆகும். நீர் ஒரு எரியும் அடுப்பில் இருந்தால், கொதித்தல் அதன் இயற்கை விளைவு ஆகும். சூட்டைத் தணித்து அதன் இயல்பு நிலைக்கு அதை மீட்க அடுப்பை அணைக்கவேண்டும். நீங்கள் கொதிக்கும் போது, கட்டுப்பாட்டு விசை உங்கள் கையில் தான் உள்ளது. மற்ற நபர் நன்கு எரிபொருளைப் போடலாம், வெப்பநிலையை வேண்டிய அளவிற்கு நீங்கள் தான் விசையைக் கொண்டு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் மிதமான, சூடான அல்லது கொதிக்கும் நிலை, ஆகிய ஏதாவது ஒன்றில் இருக்கத் தேர்வு செய்யலாம்.

இறுதியில், வெப்பம் உங்களை ஆவியாக்கி விடும், பொருளின் அளவைக் கீழே கொண்டு வந்து விடும், நீரின் அளவைக் குறைத்து விடும். இது தேர்வைப் பொருத்த விஷயம். ஏற்பு, உண்மையிலேயே கடினமானது மற்றும் சில நேரங்களில் நடைமுறையில் சாத்தியமற்றதாகக் கூட இருக்கலாம். எனவே, உங்களை இசைவாக வைத்துக் கொள்ள நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் மேல் என்ன எறியப்பட்டாலும் அசையாமல் திடமாக இருக்கும் உன்னத நிலையை அடையும் வரை, நீங்கள் கடைப்பிடிக்கக் கூடியது ஏதாவது இருக்கிறதா? பதில்: ஆமாம், உள்ளது.

எனினும், நாம் அதற்கு முன், இரண்டு வகையான கோபத்தை தெளிவுபடுத்துவது பயனுள்ளதாக இருக்கலாம். எல்லாவற்றையும் புரிந்து கொண்டால் அவற்றைச் சமாளிப்பது எளிதாக இருக்கும். நான் எனது அடுத்த இடுகையில் அதைப் பற்றி எழுதுவேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email