நீங்கள் விரும்புவதைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டது என்றால், கேட்டதையெல்லாம் கொடுக்க வல்லவர் ஒருவர் இருந்தால், அவரிடமிருந்து நீங்கள் என்ன கேட்டுப் பெறுவீர்கள். நிச்சயமாக, விழிப்புணர்வு பூர்வமான, நன்கு கட்டுப்பாட்டிற்கு பழக்கப்பட்ட இந்த மனம் உடனடியாக களத்திற்கு வந்து விருப்பங்களை மதிப்பீடு செய்யத் துவங்கும் வாய்ப்பு உள்ளது.

அவரால் எவ்வளவு கொடுக்க முடியும். என்னவெல்லாம் கொடுக்க முடியும். இதை ஏன் என்னிடம் கொடுக்கிறார். நான் அதைப் பெற்ற பின் என்னவெல்லாம் செய்வேன். எவருடனெல்லாம் நான் அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று மேலும் மேலும் யோசிப்போம். ஆழ்மனம் பலவற்றையும் கணக்கிடத் தூண்டும். ஆனால் உணர்ச்சிகள் கணக்கீட்டின் அடிப்படையில் யோசிக்காமல் உடனடியான புறத்தூண்டுதல் அற்ற இயல்பான எதிர் விளைவால் நடப்பதாகும். ஒரு சிறு குழந்தைக்கு கிச்சுகிச்சு மூட்டினால், அது உடனே சிரிக்கும். அங்குக் கணக்கீடு எதுவும் இல்லை. யாராவது உங்களை அணுகி நீங்கள் விரும்பிய எதையும் கொடுக்க முடியும் என்று கூறினார் என்றால், அவரிடமிருந்து நீங்கள் என்ன வாங்கிக்கொள்வீர்கள். அவரால் உலகத்தில் உள்ள பொருட்களிலிருந்து மட்டும் தான் கொடுக்க முடியும் என்றால், பணம் கொடுங்கள். ஒரு மூட்டைக் கொடுங்கள் என்று கேட்பீர்களா? அடுத்தது என்ன கேட்பீர்கள்?

நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்பும் பொருட்களின் பட்டியலைத் தயாரிப்பது மிக எளிது. இது ஒரு பழக்கமான செயல். ஆனால் இந்த அட்டவணையைத் திருப்ப, ஒரு கணம் என்னை அனுமதியுங்கள். உங்களால் என்னவெல்லாம் கொடுக்க முடியும்? எதுவும் இல்லையா; கொஞ்சமா; நிறையவா; எல்லாமா? என்னவெல்லாம் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றும், என்னவெல்லாம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், இரண்டு பட்டியலைத் தயாரியுங்கள். கேட்கும் பட்டியல், கொடுக்கும் பட்டியலை விட நீளமானதாக இருந்தால், உங்கள் தகுதிக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் — வெறுப்பு மற்றும் குறை படுதல். இரண்டு பட்டியலும் சம நீளத்தில் இருந்தால், நீங்கள் பாராட்டுக்குத் தகுதியானவர். ஒரு சீரான வாழ்க்கையை வாழ உங்களுக்குத் தெரியும். கொடுக்கும் பட்டியல் அடுத்த பட்டியலை விட நீளமானதாக இருந்தால், நீங்கள் மரியாதைக்குத் தகுதியானவர். நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்புவதை விட மதிப்பு வாய்ந்த எதுவோ உங்களிடம் இருக்க வேண்டும்.

எடுத்துக் கொள்ள நினைக்கும் பட்டியல் காலியாகவும், கொடுக்கும் பட்டியலில் அனைத்தும் இருந்தால், நீங்கள் தலை வணக்கத்திற்குத் தகுதியானவர். நீங்கள் மனித உடலில் நடமாடும் தெய்வம். இதைப் பற்றி மறுபடியும் யோசியுங்கள். உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலும், மிகப் பெரிய அளவில் நினைவில் நிற்பவர்கள் உலகத்திற்கு என்ன அளித்துள்ளார்கள் என்பதை வைத்தே ஆகும். அவரவரின் முன்னோடியாக இருப்பவர், கொடுத்தது அல்லது கைவிட்டதைப் பொறுத்தே அனைவரும் உத்வேகம் அடைகிறார்கள். கொடுத்தல் வலிமையை உருவாக்குகிறது. ஆன்மாவை வளப்படுத்துகின்றது. இரண்டு பட்டியலும் காலியாக இருந்தால் நீங்கள் வருத்தம் தரும் நிலையில் இருக்கிறீர்கள்.

ஒரு ஜென் துறவியின் பிரபலமான கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்:

ஸீஸேட்ஸு என்ற ஜென் துறவியை ஒரு பெரிய கூட்டம் பின்பற்றியது. வளர்ந்து வரும் கூட்டத்திற்கு தற்பொழுது இருந்த மடம் போதுமானதாக இல்லாமல் சிறியதாக இருந்ததால், மடத்திற்கு ஒரு பெரிய வளாகம் தேவைப்பட்டது. அவரது சீடர்களில் உமேஷூ என்ற ஒரு பணக்கார வணிகர் இருந்தார். அவர் உதவ முன் வந்தார். ஒரு குடும்பத்தின் சராசரி வருடாந்திர செலவு மூன்று தங்க நாணயங்களுக்கு மேல் இல்லை என்று இருந்த காலம் அது.

ஐந்நூறு தங்க நாணயங்கள் கொண்ட ஒரு பையை உமேஷூ, தன் தரப்பிலிருந்து கொடுத்து உதவுவதாகக் கூறினார். அனைத்து கட்டுமானத் தேவைகளுக்கும் இது போதுமானதாக இருக்கும் என்றார்.ஸீஸேட்ஸு ஒரு சுமையை ஏற்றுக் கொள்வது போல், வெற்றுத் தொனியில் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

உமேஷூவின் கர்வம் காயம் அடைந்தது. அந்தச் சாது பணத்தை ஏற்றுக் கொண்ட முறை முரட்டுத்தனமாகவும் நன்றியற்ற முறையிலும் இருப்பது போல் உணர்ந்தார். பயத்திற்கும் அறியாமைக்கும் இருக்கும் உறவு போல் கர்வத்திற்கும் பணத்திற்கும் ஒரு விசித்திரமான மற்றும் இயற்கையான உறவு ஒன்று உள்ளது. பின்னால் உள்ளது முன்னால் உள்ளதை எரியூட்டுகிறது.

தனது தொண்டு மற்றும் நிலை பற்றி சுட்டிக் காட்ட எண்ணி அந்தப் பையில் ஐந்நூறு தங்க நாணயங்கள் உள்ளன என்று முணுமுணுத்தார்.ஸீஸேட்ஸு, நீங்கள் ஏற்கனவே என்னிடம் கூறி விட்டீர்கள் என்றார். சாதுவிற்கு ஆரம்பத்தில் சரியாகக் கேட்கவில்லையோ என்ற சந்தேகத்தால் எழுந்த உமேஷூவின் சிறியதான முந்தைய வருத்தம் இப்பொழுது சீற்றமாக மாறியது.ஒரு பணக்கார வணிகருக்குக் கூட ஐந்நூறு தங்க நாணயங்கள் என்பது நிறைய பணமாகத் தோன்றுகிறது என்று ஆச்சரியமாகக் கூறினார்.இதற்கு நான் நன்றி கூற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா என்று ஸீஸேட்ஸு ஏளனமாகக் கேட்டார்.ஆம் நீங்கள் கூற வேண்டும் என்று, எதிர்பார்ப்புடன் உடனடியாக உமேஷூ பதிலளித்தார். நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும். கொடுப்பவர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்று ஸீஸேட்ஸு அலட்சியமாகக் கூறினார்.

எவ்வளவு அழகாகக் கூறினார். கொடுப்பவர்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். உண்மைதான், கொடுப்பதற்கு இயற்கை உன்னை ஒரு கருவியாகத் தேர்ந்து எடுத்ததற்கு உண்மையிலேயே நீங்கள் நன்றியுடையவராக இருக்க வேண்டும். வாங்கிக் கொள்பவரும் நன்றியில் குறைவில்லாமல் இருக்க வேண்டும். ஆகையால் கொடுப்பவராக நீங்கள் செயல்படும் போது நன்றியுடையவர்களாகவும், பெறுபவராக நீங்கள் செயல்படும் போது ஏற்றுக் கொள்ளத்தக்க இனிமையானவராகவும் இருக்க வேண்டும்.

இறுதியாக ஒருவரும் கொடுப்பதுமில்லை அல்லது எடுப்பதுமில்லை. அனைவரும் ஒரு கருவியே. நன்றி என்பது ஒரு தெய்வீக உணர்வு. அதை ஏற்றுக் கொள்வதும், நடைமுறைப் படுத்துவதும் போற்றத்தக்கதாகும். சரியான நபருக்குக் கொடுக்கிறீர்களா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email