ஒரு சமயம் ஒரு ஆராய்ச்சியாளர் இருந்தார். அவர் ஒரு மடத்தில் வாழ்ந்து வந்தார். அவரிடம் புத்தகத்திலிருந்து கிடைத்த அறிவுச் செல்வம் இருந்தது. நூல் மற்றும் மத விஷயங்களில் எந்த விவாதத்திலும் அவரை எதிர்த்து யாரும் வெற்றி பெற்றதில்லை.
அவர் கடவுளிடத்தில் பிடிவாதமான அன்புடனும், சுய உணர்தலுடனும், பல்வேறு மத நூல்களைப் படிப்பதில் தனது முழு நேரத்தையும் செலவழித்தார். அவர் அலட்சியமான மற்றும் மேன்மையான உணர்வுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு எல்லாமே கடவுள், தியானம் மற்றும் தன்னை உணர்தல் பற்றியதாகவே இருந்தது. அவர் சம்ப்ரதாய சடங்குகளைப் பிழையில்லாமல் நிறைவேற்றுவார். யாராவது பசியால் தவித்தாலும் அல்லது யாருக்காவது ஒரு சிறிய உதவித் தேவைப்பட்டாலும் அவர் அதை வழங்க மாட்டார். எது பற்றியும் அவரால் கவலைப்பட முடியவில்லை என்றும் தனது முக்திக்குத் தான் முன்னுரிமை கொடுப்பதாகவும் அவர் உணர்ந்தார். அவர் நன்கு படித்து இருந்தும், சிறிய உராய்வு ஏற்பட்டாலும், எரிச்சலடைவார். மிகச் சிறிய அவமானம் ஏற்பட்டாலும் காயமடைவதை உணர்ந்தார்.

அவரது குரு, தனது சீடரின் கவனம் பற்றி பாராட்டினாலும், தனது சீடர் இருக்கும் தற்போதைய மனநிலையில் விடுதலைக்கான மாற்றத்தை அடைய முடியாது என்று தெளிவாக உணர்ந்தார். பல முறை கருணை, பணிவு மற்றும் பல விஷயங்களின் முக்கியத்துவம் பற்றி கற்றுக் கொடுக்க முயற்சித்தார். ஆனால் சீடரின் புத்திசாலித்தனமான வாதங்கள், தன்னைப்பற்றித் தானே அறிவித்துக்கொண்ட மேன்மைத்தன்மை ஆகியவற்றால், அவரது முகத்திரையை ஊடுருவிச் செல்ல குருவால் முடியவில்லை.

குரு மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து தியானம் செய்ய இமயமலைக்குச் செல்ல முடிவு செய்தார்; இந்தத் துறவியையும் தனது சேவைக்காக அவர் அழைத்துச் சென்றார்.

பனிமலைகள் அதிகம் உள்ள, நீர்வீழ்ச்சிகளின் மத்தியில் உயரமான மரங்கள் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட, காட்டு விலங்குகளின் மத்தியில், அவர்கள் இருவருக்கும் போதுமானதாகவும், பொருத்தமானதாகவும் மலையின் இடைவெளியில் இருந்த ஒரு பெரிய குகையைத் தேர்ந்தெடுத்தனர். அருகில் ஒரு நதியும் பாய்ந்து கொண்டிருந்தது. அடிப்படைத் தேவைகளான சமையல் பொருட்கள் மற்றும் விறகு ஆகியவற்றை அடுக்கி வைத்தனர். சில நாட்கள் சென்ற பின் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே குறைந்து மிகுந்த பனி பெய்யத் தொடங்கியது.

ஒரு நாள் சீடர் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர வெளியே போக வேண்டியிருந்தது. மலையிலிருந்து கீழே இறங்கிச் சென்ற போது அவர் வழுக்கி, பிடிப்புக்காகப் போராடி, சமநிலையில் இருக்க முயற்சித்தும் கீழே விழுந்து விட்டார். வாளி ஆற்றை நோக்கி உருண்டது. துரதிருஷ்டவசமாக, பனியில் மறைந்திருந்த கூர்மையான கல்லினால் அவரது வலது கையில் அடி பட்டது. ஏற்கனவே குளிரினால் மறத்துப் போயிருந்த கைகளில் இப்பொழுது அடிபட்டதினால் வேதனை இன்னும் பன்மடங்கு அதிகமானது. தாங்க முடியாத வலியில் அவர் உரத்த குரலில் சத்தமிட்டு, எழுந்து திரும்பி குகைக்குச் சென்றார். கடுமையான வலியினால் அமைதியை இழந்து, கைவசம் வேறு ஒரு வாளி இருந்த போதும் இழந்த வாளியைப் பற்றிய கவலையுடன் கடுமையான வானிலை குறித்து மிகக் கோபமாக இருந்தார். குகைக்கு வந்தவுடன் தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளைக் குருவிடம் விவரித்தார்.

குரு, நீலமாகிக் குத்தும் வலியில் துடித்த சீடரின் கையை ஆய்வு செய்து கொண்டே, இது மிக மோசமாக உள்ளது. நான் இளஞ்சூடான நீர் ஊற்றிப் பார்க்கிறேன் என்றார். நீர் சூடாகிக் கொண்டிருக்கும் போது, மிகவும் குளிராக இருக்கும் போது வலி மேலும் அதிகமாகிறது இல்லையா என்று வினவினார்.
ஆம், குருவே.
அவர் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், வலியைக் குறைக்கவும் சீடரின் கையின் மேல் இளஞ்சூடான நீரை ஊற்றினார். இது நன்றாக உள்ளது. இது குணப்படுத்துவதாகவும், அரவணைப்பாகவும் இருப்பதாகச் சீடர் கூறினார்.
வெதுவெதுப்பு எப்போதும் அப்படித்தான் இருக்கும், மகனே என்றார்.

சீடர் தன்னை சுதாரித்துக் கொண்ட பின்னர், குரு ஆற்றின் அருகே கிடந்த வாளியை எடுத்துக்கொண்டு குகைக்குத் திரும்பி வந்து மீண்டும் தொடர்ந்தார்:
“மதமும், சடங்குகளும் இந்த உடைந்த வாளியைப் போன்றவையாகும். எந்த ஒரு நாளிலும், அது ஒரு உயிரை விட முக்கியமானதாக இருக்க முடியாது. வாளியானது ஒரு தேவையைப் பூர்த்தி செய்யவே அன்றி அதுவே இலக்காகாது. நீங்கள் ஏன் மற்றவர்களால் எரிச்சல் அடைகிறீர்கள் தெரியுமா? ஏனென்றால் உங்களிடம் குறிப்பிட்ட விறைப்பு உள்ளது. குளிர்ச்சி அதிகமாகும் பொழுது அது நம்மைக் காயப்படுத்துகிறது. குளிர் காற்று தொடர்ந்து வீசும் போது, சுற்றி உள்ள பனி அனைத்தும் கடினமான, உடையக்கூடிய தன்மை வாய்ந்த பனிக்கட்டியாக மாறுகிறது. விறைப்பை இதயத்தில் தக்க வைக்கும் போது அது கடினமாகிறது. ஒரு அடி விழுந்ததும் நீங்கள் உடைகிறீர்கள். உபதேசமும் சில நேரங்களில் பனிக்கட்டியைப் போல் உள்ளது. கருணை எப்போதும் இளஞ்சூட்டினைப் போல் இதமானதாகும். இந்த விறைத்த உலகிற்கு இதமான மக்களும், கருணை உள்ளம் கொண்ட மனிதர்களும் தேவைப்படுகின்றனர்.”

“இந்த குளிர்ந்த உலகம், சில இதமான மக்களாலும், கருணை உள்ளம் கொண்ட மனிதர்களாலும் இயங்க முடியும். முடிவில்லாமல் புனித நூல்களைப் படிப்பதால் என்ன நன்மை விளையும்? நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் மோட்சத்திற்காக உழைப்பது மட்டுமே, உலகத்திற்கு எம்முறையில் உதவ முடியும்? மேலும் எது அவசரமான தேவை, வாழும் உயிர்களின் வலியைச் சமாளிப்பதா அல்லது உயிரற்ற உடைமைகளைப் பற்றி கவலைப்படுவதா? சந்தேகமே இல்லை, தியானம், சுய ஆய்வு ஆகியவை முதன்மையானவையே. ஆனால் அவை முடிவை அடைய ஒரு வழிமுறையாகும், அவை சாந்தம் மற்றும் பாரபட்சமில்லாமல் நடு நிலையில் இருக்க உங்களை வழிநடத்தும் வழிமுறையாகத் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை உங்களுக்கு அமைதியைக் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட துரியநிலை என்பது நீங்கள் குளிர்ச்சியாக மற்றும் அசட்டையாக ஆக வேண்டும் என்று அர்த்தமில்லை. உண்மையில், நீங்கள் தெய்வீகமான கருணையுடனும், நிபந்தனையற்ற இதமான அரவணைப்புடனும் ஆக வேண்டும் என்பதாகும். அது மற்றவர்களின் வலி, துக்கங்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு உதவ என்ன வழி என்ற உணர்வைத் தூண்ட வேண்டும் என்று பொருள். இது தான் சுய உணர்தல் என்பதாகும்.”

அந்தச் சீடர் குரு என்பவர் எப்படி குருவாக இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார். தனிப்பட்ட பண்புகளான அரவணைப்பும், இரக்கமும் ஒரு தனி மனிதன் எவ்வளவு பரிணமித்திருக்கிறான் என்பதற்கான உறுதியான அறிகுறிகளாகும் என்றும், அவை புலமையை விட அளவிட முடியாத அளவு மிக முக்கியமானதாகும் என்றும், புனித நூல்களிலிருந்து கிரகித்த வெறும் அறிவு ஒருவர் விடுதலை அடைந்ததற்கான அறிகுறி இல்லை என்றும், அந்தச் சீடர் புரிந்து கொண்டார். உங்களின் வாழ்வில் வலியைக் கொடுத்த நிகழ்வுகள், மனிதர்கள், சூழ்நிலைகள் இவற்றின் பட்டியலைத் தயாரித்து, பின்பு அதை விட்டுத்தள்ளி, எரித்து விடலாம் அல்லது நிராகரித்து விடலாம். அவற்றை உள்ளேயே வைத்துக் கொண்டால் அது உங்களை விறைத்தவராக ஆக்கி விடும். அதன் விளைவாக, மற்றவர்களும், நீங்களும் இனி, உங்களின் இதமான தன்மையை உணர முடியாமல் போகலாம். இதமான அரவணைப்பு ஆறுதலளிக்கிறது மற்றும் அதிக குளிராக இருக்கும் போது அது காயப்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெதுவெதுப்பாக இருங்கள், அதிக சூடாக அல்ல; குளிர்ந்திருங்கள், விறைப்பாக அல்ல!

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone