“நான் தியானம் செய்ய விரும்புகிறேன்,” என்று ஒருவர் என்னிடம் ஒருநாள் கூறினார், “ஆனால் அது என்னால் எளிதாக முடியக் கூடியதாக எனக்குத் தெரியவில்லை. தியானம் மட்டுமே சுய உணர்தலுக்கான ஒரே பாதையா?”
“நிச்சயமாக இல்லை, நீங்கள் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடந்தும் உங்கள் உண்மையை அடையலாம்,” என்று நான் பதிலளித்தேன்.
“ஆனால் உங்கள் சொந்த உண்மையைக் கண்டுபிடியுங்கள் (Discover your own truth) என்று நீங்கள் சொல்வதன் அர்த்தம் என்ன? அதை எப்படித் தெரிந்து கொள்வது?” என்று என் வீடியோ உரையாடலின் கீழே சேர்க்கப்பட்டுள்ள வரியைக் காண்பித்து அவர் கேட்டார்.

இது ஒரு சரியான கேள்வி என்று நான் நினைத்தேன், கடந்த காலத்தில் இதே போன்ற கேள்விகளை முன்வைத்த பலரைச் சந்தித்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இரைச்சல் நிறைந்த இந்த உலகில், எண்ணற்ற பாதைகள் மற்றும் முடிவிலாத் தேர்வுகள் உள்ளன, எது உங்களை உங்களுடைய இலக்குவரைக் கொண்டு செல்லும் என்று எப்படி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்? அது தொடக்கத்தில் தோன்றுவது போல் அவ்வளவு கடினமானது இல்லை. வாழ்க்கையின் எளிமையான சத்தியங்களைச் சிக்கலான வடிவமைப்புகளால் உணர முடியாது என்பதைப் புரிந்து கொள்வதே முக்கியமானதாகும். இந்த நபரின் கேள்வி ஒரு ஜென் கதையை எனக்கு நினைவூட்டியது.

புதிதாகச் சேர்ந்த ஒரு துறவி, இரண்டு மூத்த துறவிகளுடன் ஒரு ஏரி அருகே, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்திருந்தார். அந்தப் புதிய துறவி வேறு ஒரு குருவின் கீழே பல ஆண்டுகளாகத் தியானத்தில் பயிற்சி பெற்றவர், ஆனால் இந்த மடாலயம் பற்றிய நல்ல விஷயங்களைக் கேட்டு, அவர் இங்கு மாற முடிவு செய்தார்.

பாதி தியானத்தில், மூத்த துறவிகளில் ஒருவர் எழுந்து, “சூரிய ஒளி அதிகமாகப் பிரகாசிக்கிறது, நான் என் குடையைக் கொண்டு வருகிறேன்,” என்று சொல்லி அவருக்கு முன்னால் இருந்த நீரின் மேல் நடந்து ஏரியைக் கடந்து, சமவெளியில் இருந்த தனது குடிலுக்குச் சென்றார்.

அவர் திரும்பி வந்தவுடன், இரண்டாவது துறவி, “எனக்குத் தாகமாயிருக்கிறது. என் தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வருகிறேன்,’’ என்று கூறினார். அவரும் தண்ணீரில் வழக்கமாக நடப்பதைப் போல் நடந்து சென்று விட்டு, அதே வழியில் திரும்பி வந்தார்.

புதிய துறவி, வியப்பு மேலிட, தானும் சளைத்தவன் அல்ல என்று காட்டிக் கொள்ள, “நானும் பல ஆண்டுகளாகத் தியானம் செய்திருக்கிறேன். இது எளிதானது. என்னைப் பாருங்கள்!” என்று கூறி அவர் தண்ணீரை நோக்கி நடந்தார், ஆனால் விரைவில் ஏரியில் விழுந்துவிட்டார். அவர் வெளியே வந்து, மீண்டும் முயன்றார், ஆனால் மீண்டும் மீண்டும் அவர் இடுப்பு-உயர நீரில் விழுந்தார்.

“கால் வைக்கும் கற்கள் எங்கு உள்ளன என்று அவருக்குச் சொல்லலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று மூத்த துறவி மற்றவரிடம் கேட்டார்.

வாழ்க்கையின் ஆழ்ந்த சத்தியங்களும் இதைப் போன்றதே ஆகும். பெரும்பாலான ஆன்மீகத் தேடுதல் உள்ளவர்கள், உள்நோக்குகள் மர்மமான முறையில் அல்லது சில இயற்கைக்கு மாறான கட்டமைப்பில் இருக்கின்றன என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில் நம்முடைய அன்றாட வாழ்வில், நாம் செய்யும் (அல்லது செய்யாத) சிறிய காரியங்களில் உள்ளது. அதற்குத் தண்ணீர் மீது நடக்கப் பயிற்சி தேவையில்லை ஆனால் கால் வைக்கும் கற்கள் எங்கே உள்ளன என்று தெரிய வேண்டும். உண்மையில், அசாதாரணமானவற்றின் மீதான நமது ஆர்வம், நம்மைச் சுற்றி உள்ள சாதாரணமானவற்றில் உள்ள அழகுச் செல்வத்தை இழக்க வைக்கிறது.

பெஞ்சமின் ஹாஃப், ‘த டாவோ ஆஃப் பூஹ்’ (The Tao of Pooh) என்ற தனது அழகிய புத்தகத்தில், இதைச் செதுக்கப்படாத பாளம் (Uncarved Block) என்று அழைக்கிறார். “செதுக்கப்படாத பாளத்தின் சாரம் என்னவென்றால், பொருட்கள் அதன் அசலான எளிமையில் தங்களின் இயற்கையான சக்தியுடன் உள்ளன, அந்த எளிமை மாற்றப்படும் போது அதன் சக்தி எளிதில் கெட்டுப்போகிறது மற்றும் சக்தியை இழந்து விடுகிறது,” என்று அவர் எழுதி இருக்கிறார்.

அதே புத்தகத்தில், பூஹ்ஹின் (Pooh) வார்த்தைகளில் டாவோவின் தத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார்: “ஒருவரை உண்மையிலேயே வித்தியாசமாக, தனித்துவமாக ஆக்கும் ஒரு விஷயம், புத்திசாலித்தனத்தால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று” என்று அவர் கூறுகிறார். நம்முடைய அசல் எளிமைக்குத் திரும்ப வேண்டும் என்றால், நாம் நமது இயற்கையான இயல்பைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அவர் அதை காட்டில்ஸ்டன் பை (pie) என அழைக்கிறார், இதில் பூஹ் தனித்துவத்தின் கொள்கையை விளக்குகிறது (ஏ.ஏ.மிலேனின் வின்னீ-த-பூஹ் என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது).

காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie),
ஒரு பூச்சியால் பறவை ஆக முடியாது,
ஆனால் ஒரு பறவையால் பறக்க முடியும், பூச்சியைய் போலவே.
என்னிடம் ஒரு புதிரைக் கேள், நான் பதில் சொல்கிறேன்:
“காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie).”

காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie),
ஒரு மீனால் விசில் அடிக்க முடியாது,
என்னாலும் முடியாது.
என்னிடம் ஒரு புதிரைக் கேள், நான் பதில் சொல்கிறேன்:
“காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie).”

காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie),
ஒரு கோழி ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறது,
எனக்கும் ஏன் என்று தெரியாது.
என்னிடம் ஒரு புதிரைக் கேள், நான் பதில் சொல்கிறேன்:
“காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie).”

“ஒரு பூச்சியால் பறவை ஆக முடியாது, ஆனால் ஒரு பறவையால் பறக்க முடியும், பூச்சியைய் போலவே.” இது மிகவும் எளிமையானது. இது தெளிவானது, இல்லையா? ஆனாலும், எத்தனை மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் இந்த எளியக் கொள்கையை மீறுகிறார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், மேலும் ‘விஷயங்கள் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கின்றன’ என்ற தெளிவான உண்மையைப் புறந்தள்ளி, சதுரக் கட்டைகளை வட்டத்திற்குள் பொருத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

விஷயங்களை, அவற்றுக்குப் பொருந்தாத வேறு வழியில் செய்ய முயற்சிப்பது பயனற்றதாகும். மனிதர் உட்பட எல்லாவற்றுக்கும், ஒரு சொந்த இடம் மற்றும் செயல்பாடு உள்ளது, அவர்கள் அதை உணரவில்லை என்பதால்தான், அவர்கள் தவறான வேலைகளை ஏற்கிறார்கள் அல்லது தவறான திருமணம் அல்லது உறவுகளில் தங்கியிருக்கிறார்கள். உங்களது இயற்கையான இயல்பைப் புரிந்துகொள்ளவும், மதிக்கவும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்யும்போது, நீங்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர், அல்லது எந்த இடத்தைச் சேராதவர் என்பது உங்களுக்கே தெரியும்…

“ஒரு மீனால் விசில் அடிக்க முடியாது, என்னாலும் முடியாது.” ஞானமுள்ள மனநிலையிலிருந்து வரும் அத்தகைய அறிக்கையின் அர்த்தம், “எனக்குச் சில வரம்புகள் உள்ளன, அவை என்னவென்று எனக்குத் தெரியும்,” என்பதாகும். அத்தகைய மனது அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளும். விசில் அடிக்க முடியவில்லை என்றால், அதில் எந்தத் தவறும் இல்லை, அதுவும் நீங்கள் ஒரு மீனாக இருந்தால். ஆனால் உங்களுக்கென்று வடிவமைக்கப்படாத ஒன்றைக் கண்மூடித்தனமாக நீங்கள் செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால், பல விஷயங்கள் தவறுதல் ஆக முடியும். மீன்கள் மரங்களில் வாழ்வதில்லை, பறவைகள் தண்ணீருக்குள் நிறைய நேரம் செலவழிப்பதில்லை… அதற்காக நாம் மாறுவதை மற்றும் மேம்படுதலை நிறுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அதன் அர்த்தம், என்ன உள்ளது என்பதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்… ஞானிகள் தங்கள் வரம்புகளை அறிந்திருக்கிறார்கள், அறிவிலிகள் அதை அலட்சியம் செய்கிறார்கள்…

“ஒரு கோழி ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறது, எனக்கும் ஏன் என்று தெரியாது”. ஒரு கோழி என்ன செய்கிறதோ அதை அது ஏன் செய்கிறது? உனக்குத் தெரியாதா? நமக்கும் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது… மரபணுக்கள், டி-என்-ஏ? உள்ளுணர்வு? அப்படியென்றால் இது நமக்குத் தெரியாது என்பதாகும். முக்கிய விஷயம் என்னவென்றால், இதை நாம் உண்மையில் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை… நாம் ‘புலனாகாத தத்துவஞானியாக’ இருக்கத் தேவையில்லை, தேவையற்ற கேள்விகளைக் கேட்டு, அர்த்தமற்ற பதில்களைப் பெறத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நமது ‘இயற்கை உள்ளார்ந்த தன்மையைப்’ புரிந்து கொண்டு, அந்த விஷயங்களில் வேலை செய்ய வேண்டும்.

காட்டில்ஸ்டன் பை (pie) நமது உள்ளார்ந்த தன்மையைக் குறிக்கிறது, இது தினசரி நாம் சந்திக்கும் பெரும்பாலான விடுகதைகளுக்குப் பதிலாக இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் கைப்பந்தை அனுபவிக்கும்போது, ஏன் அவருக்குக் கால்பந்து பிடிக்கிறது. உங்கள் நண்பர் காலை உணவில் இனிப்பு சாப்பிடுவதை விரும்புகிறபோது நீங்கள் ஏன் காரவகையை விரும்புகிறீர்கள்?

தியானம் அல்லது ஒரு குறிப்பிட்ட பயிற்சியே உங்கள் உண்மையை அடைய ஒரே வழி அல்லது நிச்சயமான ஒரு வழி என்று யாரோ ஒருவர் உங்களிடம் கூறினால், அது உங்கள் செலவில் அவர்களுடைய ஒரு அறியாமைக் கூற்றாக இருக்கலாம். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், உண்மை என்னவென்றால், வேறு எவரையும் விட உங்களை நீங்களே நன்கு அறிந்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். அந்த சுய-உணர்தல் மற்றும் விவேகத்தினால் மட்டுமே, உங்கள் வாழ்க்கையில் அல்லது உங்கள் வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் அதை அறிந்தவுடன், அதற்கேற்ப ஒரு வழிகாட்டியை அல்லது குருவைத் தேடலாம். நீங்கள் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் தேடிச் சென்றால், உங்களுக்குப் பயனற்ற வாக்குறுதிகளை அளிக்கும் ஒருவரின் ஆதரவில் இருக்கும்படியாக ஆகிவிடும்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட சுபாவத்துடன் பிறக்கிறோம், நமது வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் சீரமைப்பு ஆகியவற்றால் நாம் ஒரு குறிப்பிட்ட வழியில் வடிவமைக்கப்படுகிறோம், நமது இலட்சியங்கள் மற்றும் ஆசைகளின் அடிப்படையில் பல்வேறு விஷயங்களுக்கு நாம் போராடுகிறோம். எனவே, நம் குறைபாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நமது பலத்தைப் பயன்படுத்துகின்ற ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தால், அதற்கு மிகவும் குறைவான முயற்சியே தேவைப்படும். ஏனென்றால், உங்கள் தேவை, உங்களுடனேயே தொடர்ந்து போராடுவது அல்ல, பதிலாக உங்களுடன் சேர்ந்து உழைப்பதே ஆகும்.

‘உங்கள் சொந்த உண்மையைக் கண்டுபிடியுங்கள்’ என்று நான் சொல்லுவதன் அர்த்தம் இது தான். நான் அல்லது வேறு யாரோ உங்களிடம் (முதலில் உங்களை நீங்களே நன்கு புரிந்துகொள்வதற்கு உதவாமல்) தியானம் செய்யுங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும் அல்லது மந்திர உச்சாடனம் செய்யுங்கள் அனைத்தும் வேலை செய்யும் என்று சொன்னால், ஒரு நாள் அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நீங்களே கண்டுபிடிப்பீர்கள். ஒரு குருவின் வேலை, பிரசங்கம் செய்வதோ அல்லது கட்டளையிடுவதோ அல்ல, உங்களை நீங்களே அறிந்து கொள்ள உதவி செய்து, உங்களைச் சிறந்தவர்களாக ஆக்கிக்கொள்ள வழிநடத்துகின்ற சிறந்த பாதையில் உங்களையே நடக்கச் செய்வதாகும்.

“இது உண்மையா அப்பா, உலகின் சில பகுதிகளில் ஒருவர் தன் மனைவியைத் திருமணம் செய்துகொள்ளும்வரை அவர் தன் மனைவியை அறிந்திருப்பதில்லை?” என்று ஒரு மகன் தன் தந்தையிடம் கேட்டான்.
“மகனே, எல்லா இடங்களிலும் உண்மை அதுதான்,” என்று அப்பா பெருமூச்சுடன் சொன்னார்.

நீங்களே உங்களுடன் தொடர்பு கொள்ளும் வரை, உங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் என்னவாக இருக்க முடியும் என்பதைவிட, நீங்கள் யார் என்பதை அறிவதே அளவிடமுடியாத ஆற்றல் மிக்கதாகும். இதுவே சுய உணர்தலின் முழுப் பயணமும் ஆகும்: நீங்கள் உங்களைத் தெளிவாகப் பார்க்கும் மற்றும் புரிந்துகொள்ளும் ஒரு கட்டத்தை அடைதல். உங்களுடைய நிர்வாணம், உஷ்ணமாகச் சுட்டெரிக்கும் தெருக்களில் உள்ள ஏழைகளுக்கு உணவளிப்பதா அல்லது இமாலயத்தில் ஒரு மரத்தின் நிழலில் தியானிக்கிறதா என்பது உங்களுக்குப் புலப்படும்.

காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie),
ஞானமடைந்த ஆத்மா பேரானந்தத்தில் களிப்படைகிறது,
எப்படி அந்த உயர்ந்த உணர்வினைப் பெறுவது?
ஒருமுறை என்னைக் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன்:
காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie).

காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie),
நான் தியானிக்க வேண்டுமா அல்லது மந்திரம் சொல்ல வேண்டுமா?
உங்கள் பாதை பக்தியா அல்லது சேவையா?
என்னை மீண்டும் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன்:
காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன், காட்டில்ஸ்டன் பை (pie).

உங்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள், அதன்பிறகு நீங்கள் அதற்காகவே உழையுங்கள். உங்கள் சொந்த உண்மையைக் கண்டறியுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email