சில நேரங்களில் [உண்மையில், மிகவும் அடிக்கடி], ஒற்றையாக இருப்பவர்களை நான் சந்திக்கிறேன். பொதுவாக இவர்கள், தங்கள் வாழ்க்கையைச் சேர்ந்து கழிக்கத் துணையாக ஒரு சரியான நபரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது இன்னும் சரியான ஒரு துணையைக் கண்டு பிடிக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது காலியாக உள்ள அவர்களது வீட்டில் அவர்களுக்காக யாரும் காத்துக் கொண்டு இருப்பதில்லை. அவர்கள் அருகில் யாரும் இல்லாததால், தானாகவே எழுந்திருக்கிறார்கள். தனிமையும் மற்றும் முதுமையிலும் தனியாகவே இருந்து விடுவோமோ என்ற எண்ணமும் அவர்களை எப்போதும் வாட்டி வதைக்கின்றன. அவர்கள் விரும்பும் அனைத்தும், அவர்களது அன்பைக் காட்டவும் அவர்களை நேசிக்கவும் ஒருவர், ஆனால் அப்படி ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர்கள் என்னிடம் சொல்லுகிறார்கள்.

பின்னர், திருமணம் ஆனவர்களையும் நான் சந்திக்கிறேன். அவர்கள் தங்கள் குடும்பத்தை நேசிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அமைதி மற்றும் ஓய்வான ஒரு கால கட்டத்திற்காக ஏங்குகிறார்கள். அவர்கள் தங்களுடைய பொறுப்புக்களால் கட்டுண்டு இருப்பதாக உணர்கிறார்கள். சமரசம் என்பதன் ஒரு பொருள் திருமணம் என்றும், தினசரி அனைத்து மட்டங்களிலும் மிகப்பெரிய தியாகம் தேவைப்படுகிறது என்றும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க, அவர்களது வீட்டைச் சுற்றியும், அவர்களது துணையிடமும், அவர்களது குழந்தைகளிடமும், இதுபோல் இன்னும் பலவற்றிலும் மாற்றங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களது அன்பைக் காட்டவும், அவர்களை நேசிக்கவும் ஒருவர். இந்த எண்ணத்தில் தான் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பொருத்தமற்றவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதாக இப்போது உணர்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.

உண்மையான அன்பின் தேடுதலில், என்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு சந்திப்பின் விளைவும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் இரண்டு பகுதிகளாக உள்ளன:

1. தில்லியின் நகராட்சித் தொட்டியின் நீர் குறையும் நேரத்தை விட வேகமாக என்னுடைய பெட்டியில் உள்ள துடைக்கும் காகிதங்கள் காலியாவதைப் பார்க்கிறேன்.
2. ஏன் இப்படி? எனக்கு ஏன்? ஏன் அவன் / அவள் உணர்வதில்லை? நான் ஏன் அவதிப்படுகிறேன்? எப்படிக் கடவுள் இதை எனக்குச் செய்ய முடியும்? இதே கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள்.

துடைக்கும் காகிதங்களின் பிரச்சினை எளிதானதாகும். கண்ணீரைக் கையாள ஒரு புதிய பெட்டியை நான் வைத்து விடுவேன். நாம் கண்ணீர் விடுகிறோம், நம்மால் அதைத் துடைக்கவும் முடியும். எனினும் இரண்டாவது விஷயம் கொஞ்சம் சிக்கலானதாகும். என்னுடைய கண்ணோட்டத்தை வழங்குவதற்கு முன் ஒரு சிறிய கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

முகலாய மன்னர் அக்பர் ஒரு முறை தனது மந்திரிகளிடம், கடவுள் மற்றும் அக்பர் ஆகிய இருவருள் சக்தி வாய்ந்தவர் யார் என்று கேட்டார். மந்திரிகளுக்குக் கடவுள் தான் என்று தெளிவாகப் பதில் தெரியும், ஆனால் ராஜாவை விட யாரையாவது சக்தி வாய்ந்தவர் என்று கூறினால் தலையைச் சீவி விடுவார்கள் என்பதால் அமைச்சர்கள் தடுமாற்றத்தில் இருந்தனர். தவறான பதிலைக் கொடுத்தாலும் அது ஒரு அப்பட்டமான புகழ்ச்சி என்று கூறப்பட்டு அதே தண்டனை தான் கிடைக்கும். ஒருவர் பின் ஒருவராக உண்மையைப் பேசத் தீர்மானித்துத் தங்களது பேரரசரை விடக் கடவுளே அதிக ஆற்றல் உள்ளவர் என்று, ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும் கூறினர்.

அரசவையில் மாபெரும் ஞானியான பீர்பால், அக்பரே உண்மையில் கடவுளை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பிரகடனப்படுத்தினார். பீர்பல் மாட்டிக் கொண்டதைப் பார்த்து அமைச்சர்கள் ரகசியமாகச் சந்தோஷப்பட்டார்கள். இறுதியாகப் பீர்பல் அரசருக்கு ஜால்ராப் போடுவது வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது என்று அவர்கள் நினைத்தார்கள்.

“நிச்சயமாக, என்னை ஈர்க்க வேண்டும் என்பதே உங்களது விருப்பம், பீர்பால், உங்களது இந்த மதிப்புக் கேடான பதிலால் நான் வெறுப்பு அடைந்துள்ளேன். கடவுளை விடச் சக்தி வாய்ந்தவனாக நான் எப்படி இருக்க முடியும்?” என்று ராஜா தலையை ஆட்டிக் கொண்டே கண்டிப்பாகப் பேசினார்.

“மேதகு மன்னரே, உண்மையில் எங்கள் பேரரசரே கடவுளை விடச் சக்தி வாய்ந்தவர். கடவுள் பாகுபாடு மற்றும் பாரபட்சத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர். கடவுளுடைய ஒவ்வொரு செயலும், மிக உன்னிப்பாக வேலை செய்கின்ற, இந்த எல்லையற்ற பிரபஞ்சத்துடன் ஒன்றுபட்டு இருக்கிறது. ஆனால், அரசர் எந்தச் சட்டத்தினாலும் கட்டுப்படுத்தப்பட்டவர் இல்லை. நீங்கள் யாரையும் தண்டிக்க முடியும், நிரபராதியைக் கூட. கடவுளால் அவ்வாறு செய்ய முடியாது,” என்று பீர்பால் விடை உறைத்தார்.

பீர்பலைப் பாராட்டி அக்பர் போதுமான பரிசினை வழங்கினார். நீதிமன்றத்தில் நடந்தவற்றைக் கேள்விப்பட்ட பீர்பாலின் மனைவி அன்று மாலை, பீர்பாலிடம் எதிர்காலத்தில் இது போன்ற ஆபத்தான பதில்களைக் கொடுக்க வேண்டாம் என மெதுவாக எதிர்ப்புத் தெரிவித்தாள். மற்றும் ‘ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என்றாள்.
“ஏனெனில் அது ஒரு விவேகமற்ற கேள்வியாகும்,” என்று பீர்பால் அமைதியாகப் பதில் அளித்தார்.

நான் முழு மனதுடன் பீர்பலுடன் உடன்படுகிறேன். மேலே உள்ள யாரோ ஒருவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக அவரை அழைக்கிறீர்கள் என்ற அடிப்படையில், உங்களுக்குத் தண்டனையோ அல்லது வெகுமதியோ கொடுக்கிறார் என்று உண்மையிலேயே நீங்கள் நினைக்கிறீர்களா? நான் சந்தேகிக்கிறேன்.

கடவுளால் நமது உறவுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. ஏனெனில் அவர் அவற்றை உருவாக்கவில்லை. கடவுள், பிரபஞ்சம், இயற்கை அல்லது வேறு என்ன பெயர் நீங்கள் கொடுக்க விரும்பினாலும், அதற்கும் பிரச்சனைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம்மால் நம்மை, நமது உணர்வுகளை மற்றும் நமது சூழ்நிலைகளைக் கையாள முடியாத போது நாம் கஷ்டப்படுகிறோம்.

என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். கடவுள் இருப்பதை நான் நம்புகிறேன். இருப்பவை அனைத்தும் கடவுளே ஆகும். நான் கடவுளை முடிவற்ற பிரபஞ்சம் வழியாகப் பாய்கிற, எல்லையற்ற கருணை, அழகு மற்றும் மகிழ்ச்சியாகப் பார்க்கிறேன். ஆனால், ஒரு காதல்-குரு, தரகர் அல்லது நீதிவான் ஆக இருப்பது, அவரது வேலையின் ஒரு பகுதியாக உள்ளது என்று நான் நினைக்கவில்லை. இயற்கை அதிகமாகப் பகுத்தறியாமலும், உணர்ச்சி வசப்படாமல் மிகுந்த பற்றின்மையுடனும் அதன் போக்கில் இயங்குகிறது.

ஒருவர், ஒரு வாரத்திற்கு முன்னர் தைக்கக் கொடுத்த தனது ஆடையைப் பெறுவதற்காகத் தையல்காரரிடம் சென்றார்.
“இல்லை ஐயா, அது இன்னும் தைக்கப்படவில்லை, கடவுள் விரும்பினால், அது 3 நாட்களில் தயாராகி விடும்,” என்று தையல்காரர் கூறினார்.
ஏமாற்றம் அடைந்த அந்த வாடிக்கையாளர் மூன்று நாட்களுக்குப் பின்னர் திரும்பி வந்த போதும் அவருக்கு அதே பதில் கிடைத்தது. “கடவுள் விரும்பினால், நான் நிச்சயமாக ஒரு வாரக் காலத்தில் முடித்து விடுகிறேன்.” என்று தையல்காரர் கூறினார்.

வாடிக்கையாளர் தையல்காரரைத் திட்டிவிட்டு அதிருப்தியுடன் திரும்பிச் சென்றார். அவர், துயரம் கொள்ளும் விதமாக, ஒரு வாரம் கழித்தும் தையல்காரர் அதைத் தைத்து முடிக்கவில்லை.

“கடவுள் விரும்பினால், கண்டிப்பாக அது 4 நாட்களில் தயாராகி விடும் ஐயா,” என்று தையல்காரர் மன்றாடினார்.
“கேட்டுக்கொள்ளுங்கள் நண்பரே, கடவுளை இதிலிருந்து வெளியே எடுத்துவிடுங்கள். கடவுளுக்கு விருப்பம் இல்லாவிடில் இதைத் தைத்து முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சொல்லுங்கள்,” என்றார்.

வெளிப்புறத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று கற்பனை செய்து கொண்டால், உங்கள் மகிழ்ச்சியை எப்படிக் கண்டறிந்து கொள்வீர்கள்? உங்களிடம் உண்மையைக் கூற வேண்டுமானால், நம் வாழ்வில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது தான், கடவுளின் அருள் என்பதன் அர்த்தம் என்று நான் நினைக்கவில்லை. நாம் பிரார்த்தனை செய்வதோ அல்லது மதச் சார்புடன் இருப்பதோ, கடவுளிடம் பேசி அவரை நமது ஆசைப் பொறிகளில் சிக்கவைப்பதற்குத் தான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நீங்கள் தேடுவது மகிழ்ச்சி என்றால், அதை உங்களுக்கு வேறு யாராலும் கொடுக்க முடியாது என்ற அனுமானத்துடன் தொடங்குங்கள். எவரேனும், தனக்கு நிறைவான உணர்வை உண்டுபண்ண வேறு ஒருவர் தேவை என்று விரும்பினால், அவர் பெரும்பாலும் இன்னும் அதிகமான அதிருப்தியையே அடைகின்றார்.

“எந்த மனிதர் தன்னைத் தானே வெற்றி கொள்கிறாரோ, அவர் அனைத்து உயிரினங்களையும் இணைக்கும் சக்தியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார்,” என்று கோதே ஒரு முறை கூறினார்.

நமது துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி நம்மையே வெற்றி கொள்வதாகும். நம் வாழ்வில் உள்ள மற்ற அனைவரும், நமக்குள் நாம் ஏற்கனவே சுமந்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கான வடிவமைப்பாளர் அல்லது தூண்டுகோலாய் இருப்பவர் மட்டுமே. நம் வாழ்க்கையையே நம்மால் சுமுகமாக அணுக முடியாத இயலாமையின் மற்றொரு பெயரே துன்பம் ஆகும். உள் அமைதி என்று வரும் போது, நமது சூழ்நிலைகளை மற்றும் நம்மைச் சுற்றி உள்ள மக்களை எவ்வளவு அதிகமாக ஏற்றுக் கொள்கிறோமோ மற்றும் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவு அமைதியாக நாம் இருக்கிறோம்.

பேரின்பத்திற்கும் அமைதிக்குமான பாதை, பொறுப்பிலிருந்தே தொடங்குகிறது. பொறுப்பான நடவடிக்கைகளை எடுங்கள், பொறுப்பான வார்த்தைகளைப் பேசுங்கள், பொறுப்பாகச் செயல்படுங்கள். சீக்கிரமாகவே, உங்களது உள் உணர்வுக்கு அப்பாற்பட்ட, பூத்திருக்கும் மரங்களுக்கு ஊடாக வசந்தக் காற்று வீசுவதைப் போன்ற, உங்கள் ஆன்மாவை வருடுகிற, உங்களது கோப்பையை நிரப்புகிற உள்மன அமைதியின் சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பீர்கள். வெயில் காலத்தின் ‘ஆசைகள்’ என்ற உலர்ந்த புல்லில் இருந்து மிகவும் விரும்பி ஒலி எழுப்பும் சில் வண்டுகளின் (சிக்காடா) ஒரு சலசலப்பைப் போன்ற ‘எதிர்பார்ப்புகளின்’ சத்தத்தில் இருந்து, மென்மையான குளிர்காலத்தின் இதமான கதகதப்பில் ஓடும் மென்மையான மலை நீரோடையைப் போன்று உங்களது முழு இருப்பும் பேரானந்தத்தால் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.

பொறுப்புள்ளவராக இருங்கள். மென்மையாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.

மற்றும் ஓர் குறிப்பு – சில நாட்களுக்கு முன்பு, சிட்னியில் ஒரு சிறிய பக்தர்கள் கூட்டத்தில் நான் ஒரு சொற்பொழிவு செய்தேன். அந்த அழகான மாலையில் நாங்கள் ஸ்ரீ ஹரியின் ஆரத்தியை ஒன்றாகப் பாடினோம். நீங்கள் கீழே உள்ள பொத்தானை அழுத்தி (கிளிக் செய்து) அதைக் கேட்கலாம்:

அல்லது, நீங்கள் சவுண்ட்-க்லௌடில் (Soundcloud) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (இங்கே). ஆரத்திப் பாடலின் வரிகளும் அதே பக்கத்தில் உள்ளன.

நான் ரமோனா போர்த்விக் (Ramona Borthwick) என்பவருக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். அவர், நான் அறிந்த மிகவும் திறமையான மற்றும் சிறந்த பியானோ ஆசிரியர்களுள் ஒருவர் (இங்கே). நான் எப்போதும் வாசிக்க வேண்டும் என்று விரும்பிய பியானோவைக் கையாள, அவர் பொறுமையாக எனக்குக் கற்றுத் தந்தார். ரமோனாவே ஆரத்திப் பாடலுக்குப் பியானோவில் இசை அமைத்து உழைத்தவர். நான் அவர் கூறியபடி வாசித்து இருக்கிறேன். அவர்கள் இல்லை என்றால், பியானோவிற்கும் ஒரு தட்டச்சு இயந்திரத்திற்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்திருக்காது. இது ஒரு முன்னேற்பாடற்ற பதிப்பாகும். நீங்கள் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

Peace.
Swami

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email