ஒரு நாள், புத்தர் தனது துறவிகளுடன் ஒரு அமைதியான தருணத்தில் இருந்த போது, ஒரு மனிதர் அவரை அணுகி, “நீங்கள் குறைந்த வார்த்தைகளைக் கொண்டு எனக்கு மிகப் பெரிய ஞானத்தைக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார்.

புத்தர் அந்த மனிதரின் இருப்பையும், அவரது கேள்வியையும் புரிந்து கொண்டு, மென்மையான புன்னகையுடன் அதை ஒப்புக் கொண்டு அமைதியாகவே இருந்தார்.

சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு, புத்தரை வணங்கி, “மிகவும் நன்றி. எனக்கு உங்களிடமிருந்து செய்தி கிடைத்துவிட்டது. நான் இப்போது செல்கிறேன்,” என்று கூறினார்.

புத்தரிடம் கேள்விகளைக் கேட்கத் தயங்காத, மிகவும் கீழ்ப்படிதல் இல்லாத துறவிகளில் ஒருவரான ஷரிபுத்ரா, வந்திருந்த மனிதர் சென்ற உடனேயே, “எப்படி இந்த மனிதர் உங்களுக்கு நன்றி கூறுகிறார், நாங்கள் பார்க்க முடியாத ஒன்றை இவர் எவ்வாறு பெற முடியும்?” என்று கேட்டார்.
“ஷரிபுத்ரா, ஒரு நல்ல குதிரை ஒரு சவுக்கின் நிழலில் கூட இயங்கும். அந்த மனிதர் தயாராக இருந்தார்,” என்று புத்தர் பதிலளித்தார்.

இருப்பினும், ஷரிபுத்ராவிற்கு இன்னும் புரியவில்லை. புத்தர் தனது இருக்கையிலிருந்து எழுந்து பிற்பகல் ஓய்விற்காகச் சென்ற போது, ஷரிபுத்ரா மற்ற துறவிகளிடம் அவர்களுக்கு ஏதாவது புரிந்ததா என்று கேட்டார். அவர்களில் யாருக்கும் புரிந்திருக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. மாலை சொற்பொழிவின் போது அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, மிகுந்த ஞானத்தை வேண்டலாம் என்று முடிவெடுத்தனர்.

“எதுவுமே கூறாமல், கொஞ்சம் அறிவு, கொஞ்சம் ஞானம், கொஞ்சம் நுண்ணறிவு ஆகியவற்றை எங்களுக்குக் கொடுக்க முடியுமா?— குறைந்த வார்த்தைகளைப் பற்றிக் கூடக் கவலை வேண்டாம் — ஒருவேளை எங்களில் ஒருவர் கூடத் தயாராக இருக்கலாம்,” என்று அவர்கள் புத்தரிடம் கேட்டார்கள்.

புத்தர் அவரது அருகில் இருந்த ஒரு மலரைத் தூக்கி, ஒரு சில நிமிடங்கள் தனது கையில் பிடித்திருந்தார். அவர் எதையும் சொல்லவில்லை. அவர் கண்கொட்டாமல் அந்த மலரைப் பார்த்தார். ஒரு பெரிய ஞானத்தை வழங்க, தியானத்தின் மிகச் சிறந்த வழியைக் காட்ட, மிகப் பெரிய நுண்ணறிவை வழங்க, எதையும் கூறாமல், புத்தர் இவ்வாறு செய்தார். அவர் அந்த மலரையே பார்த்துவிட்டு, பின் தனது கண்களை உயர்த்திப் புன்னகைத்தார். அவரது சீடர்களில் ஒருவரான மகாகஷ்யப்பாவைத் தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை. இதுவே ஜென் முறையில் பரப்பப்பட்ட, புத்தரின் முதல் ஆவணமாக்கம் ஆகும். இங்குதான் எல்லாமே துவங்கியது.

மகாகஷ்யப்பா புன்னகைத்தார், ஏனென்றால் புத்தர் அந்த மலரைக் கொண்டு, எதுவுமே பேசாமல் தன்னிடம் கூற முயன்றதை அவர் புரிந்து கொண்டார்.

நான் அல்லது வேறு எவரும் அதைப்பற்றிக் கூறுவது ஒரு விளக்கமாகவே இருக்கும். பூஜைக்கு மலர்களை ஏன் வழங்குகிறீர்கள் என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? இது நிறம் மற்றும் வாசனைக்காக மட்டும் அல்ல. அதற்காக மட்டுமே என்று இருந்தால், நாம் இன்னும் பல அழகான விஷயங்களை வழங்க முடியும். நமது தெய்வத்தை அழகிய வண்ணங்களில் சித்தரித்து வைக்கலாம்; தெய்வத்தின் மேல் நறுமணப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் தெளிக்கலாம். ஆனால் ஏன் மலர்கள்? இதற்குப் பின்னால் ஒரு உண்மையான மற்றும் அழகான காரணம் உள்ளது. பூ உயிருள்ள ஒன்று என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதற்கு வாழ்க்கை உள்ளது மற்றும் காலப்போக்கில் அது வாடிவிடுகிறது.

மஹாகஷ்யபாவைப் பார்த்துக் கொண்டே, தனது அனைத்துத் துறவிகளுக்குமாக புத்தர் மேலும் தெளிவுபடுத்தினார். “எல்லாம் அங்கே இருக்கிறது, மகாகஷ்யப்பா. எல்லாம் அங்கேயே இருக்கிறது. எதுவும் செய்யத் தேவையில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தப் பூ நிரந்தரமாக வாழப்போவதில்லை – இது ஒரு நாள் வாடிவிடும் என்ற கவனத்துடன் இந்தப் பூவின் அழகை அனுபவித்து மகிழ்வது தான்,” என்றார்.

ஜென் முறையை அனுபவிக்க ஒரு எளிய மற்றும் அழகான வழி என்னவென்றால், நீங்கள் வேலை செய்யும் மேஜை மீது ஒரு மலரை வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் சாப்பாட்டு மேஜையில் மற்றும் உங்கள் படுக்கையறையிலும் ஒன்றை வைத்துக் கொள்ளலாம். அதற்குத் தண்ணீர்விடாதீர்கள். அது காய்ந்து போகும்போது மட்டுமே அதை மாற்றவும்.

புத்தரால் சொல்லப்பட்ட முதல் ஜென் சூத்ரா, ‘ஹானா வஃராக்கு, பென் கோகு நா ஹாரு’ (Hana Wahraku, Ben Koku Na Haru) என்பதாகும் என்று ஜப்பானிய நூல்கள் கூறுகின்றன, அதாவது ஒரு மலர் மலர்கிறது, உலகம் முழுவதும் அது வசந்த காலமாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஜென்னில், ஒரு மலர் என்றால் அது புத்தரைக் குறிக்கிறது, ஏனென்றால் அவர் மலர்களின் அடியில் பிறந்தவர். அவர் பூக்களின் மீது இறந்தார் மற்றும் பூக்களின் மீதே வாழ்ந்தார். அவரது பக்தர்கள் தங்கள் வாழ்க்கையை நேசித்ததற்கும் மேலாகவே, உண்மையில் அவரை மிகவும் நேசித்தார்கள். அவர் மலர்கள் இருந்த ஒரு மரத்தின் கீழ் தனது ஞானத்தைப் பெற்றார். உங்கள் மனத்தையும் ஒரு மலருக்கு ஒப்பிடலாம். உங்கள் மனம் மலரும் போது, முழு உலகமும் வசந்த காலத்தில் இருக்கும். அது இலையுதிர்காலத்தை அனுபவிக்கும் போது, வெளி உலகில் எவ்வளவு அழகு இருந்த போதிலும், எல்லாம் மங்கலாகவே உணர்கிறது. எல்லாமே அழிந்து மனச் சோர்வாக இருக்கிறது. எனவே, நான் என் மனதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்று ஜென் கூறுகிறார். ஏனெனில் நான் என் மனதை மலர்ந்த நிலையில் வைத்திருந்தால், உலகம் தானாகவே அழகாக இருக்கிறது.

நீங்கள் ஒரு மலர் மற்றும் உங்களிடம் ஒரு அழகான வாழ்க்கை உள்ளது. உங்கள் வாழ்க்கை முறையை, அடிப்படை வாழ்வைக்கூட வாழமுடியாத ஆயிரக்கணக்கான மக்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பெரும்பாலான மக்கள் ஒரு உணவகத்திற்குச் செல்லும் போது அவர்கள் விரும்பும் எதையும் ஆர்டர் செய்ய மாட்டார்கள். அவர்கள் மெனுவில் விலைகளைக் கவனிக்கிறார்கள், பிறகு அவர்களால் என்ன வாங்க முடியும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். எல்லோரும் வாழ்க்கையின் ஆடம்பரங்களை அனுபவிப்பதில்லை, ஆனால் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எங்கே இருக்கிறீர்கள் மற்றும் ஏற்கனவே எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இது போதாது என்றால், நீங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிக்க இது இன்னும் போதவில்லை என்றால், ‘எது உங்களை ஆனந்தமாக இருக்க வைக்கும்?’ என்று என்னிடம் சொல்லுங்கள். வேறு ஒன்றுமே இல்லை.

மகிழ்ச்சி என்பது பின்தொடர வேண்டிய ஒன்று இல்லை என்று ஜென் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அது நாம் தேட வேண்டிய ஒன்று அல்ல. ஆமாம், நாம் வாழ்க்கையில் கிளர்ச்சி, ஆர்வம், உணர்ச்சி ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும், ஆனால் ஆர்வத்தைப் பொறுப்பற்றதாக அல்லது ஒரு அபரிமிதமான முயற்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது ஆர்வத்தைப் பற்றிய ஒரு விஷயம், வாழ்க்கையில் ஒரு ‘ஆர்வம்’ இருக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறார்கள், இது ஒரு புதிய, அமெரிக்கர்களின் கோட்பாடாகும். இது வழக்கில் வருவதற்கு முன்னர் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் “ஆர்வங்களை”க் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் குறைவில்லாமல் மகிழ்ச்சியாக, அமைதியாக மற்றும் திருப்தியாக இருந்தனர்.

நான் தற்போதைய நிமிடத்தில் இருக்கிறேன், சுவாசித்தல் கூட ஒரு ஆசீர்வாதம் தான் என்று ஜென் கூறுகிறது. இப்போது உங்களிடம் என்ன உள்ளதோ அவற்றைக் கொண்டு சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால், எதிர்காலத்தில் உங்களிடம் என்ன இருக்குமோ அதைக் கொண்டு உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் வாழ்க்கையில் குறைந்தபட்சம் பிரச்சனை கொடுக்க ஒரு நபராவது இருப்பார் என்பது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றாகும். நீங்கள் குறைந்தது ஒரு பெரிய சவாலையாவது எதிர்கொள்வீர்கள். மூளை சம்பந்தமான, உடல் ரீதியான, உணர்ச்சிப் பூர்வமான, மனநோய், உளவியல் அல்லது ஆன்மீகம் சம்பந்தமான, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு கஷ்டத்தைச் சமாளிக்க வேண்டி இருக்கும். இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இவை அனைத்தையும் சமாளித்துச் செல்ல முடிவதே ஜென் ஆகும்.

புத்தர் இறந்த பின் ஆயிரம் ஆண்டுகளில் ஜென் உண்மையில் அதிகம் பரவவில்லை. ஏனென்றால் மக்களுக்கு நங்கூரங்கள் தேவை; மக்கள் – அவர்களுக்குச் சடங்குகள் வேண்டும். “சாதாரணமாக அமருங்கள் மற்றும் கவனமாக இருங்கள்; நீங்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை,” என்று நான் மக்களிடம் சொல்லும்போது, அவர்கள் அது போதுமானதாக இல்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே அசையாமல் நிமிர்ந்து உட்காரும் கலையில் தேர்ச்சி அடைந்து விட்டதைப் போல்! நான் அவர்களுக்கு ஒரு மந்திரம் கொடுத்தால் — யாரோ ஒருவருக்கு அதுபோல் நான் கொடுப்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது — சில வாரங்களுக்கு, ஒருவேளை சில மாதங்களுக்கு அதைச் சொல்வார்கள், பின்னர் திரும்பவும் என்னிடம் வந்து, “சரி, அடுத்தது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்பார்கள்.

இது மிகவும் பொருள் சார்ந்த சிந்தனை. அடுத்த படி என்பதே இல்லை. கொடுக்கப்பட்ட எந்தவொரு பாதையையும் பயன்படுத்தி உங்களால் உங்களுடனேயே ஒன்றிணைய முடியவில்லை என்றால், உங்களை அந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேறு “அடுத்த படி” இல்லை. தியானத்தில் நிலைகள் உள்ளன, படிநிலைகள் இல்லை, ஆனால் நீங்கள் வெவ்வேறு விஷயங்களைச் செய்து அந்த நிலைகளைப் பெற முடியாது. நீங்கள் அடுத்த படிக்குச் சென்றும், இந்த நிலைகளை அனுபவிக்க முடியாது. உண்மையில் அவை மனநிலைகள், அடுத்த நிலைகள் இல்லை.

நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதையே செய்யுங்கள். அதைச் சரியாகச் செய்யப் பழகுங்கள். அதில் கைதேர்ந்தவர் ஆகுங்கள், பிறகு அந்த நிலையை அடையலாம். ஒரு தற்காப்புக் கலை மாஸ்டர் தனது மாணவனிடம் கூறியது போல், “பத்தாயிரம் நகர்வுகளைக் கற்றுக் கொள்வது பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்கள் பலவற்றில் முழுநிறைவாக ஆகப் போவதில்லை. நீங்கள் ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே செய்யக்கூடிய பத்து ஆயிரம் நகர்வுகளைக் கற்பிக்க எனக்கு ஆர்வம் இல்லை. நீங்கள் பத்தாயிரம் முறை பழகும், உங்களுக்கு வெற்றி தரும் ஒரே நகர்வைக் கற்றுத்தரத் தான் நான் ஆர்வமாக உள்ளேன். அதுவே உங்களின் சிறந்த நகர்வாக ஆகிவிடும்.”

1000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் தென் பகுதியில், இன்றைய தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் என்ற இடத்தில் ஒரு அரச குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தது. பௌத்த போதனைகளால் ஆழமாகத் தாக்கப்பட்ட அவர், ஆச்சரியப்படத்தக்க வழியில் சென்று, ஜென் சிந்தனைகளுக்குப் புத்துயிர் அளித்தது மட்டுமல்லாமல், பரந்த அளவில் பல இடங்களுக்கு அதை எடுத்துச் சென்றார்…

நீங்கள் இப்போது என்ன படித்தீர்களோ அது, ‘மைண்ட் ஃபுல் டு மைண்ட்ஃபுல்’ (Mind Full to Mindful) என்ற என் புதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி ஆகும். கனடா மற்றும் இந்தியாவில் என் ஜென் ரிட்ரீட்டில் (Zen retreat) நான் கொடுத்த சொற்பொழிவுகளின் அடிப்படையில் ஜென் ஞானம் பற்றியதாகும். இது ஒரு எளிதாக வாசிக்கக்கூடிய, மிகவும் ஜென்-போன்ற, அதிக நிகழ்வுகளைக் கொண்ட, நகைச்சுவை மற்றும் அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டது. ஜென் என்பது தற்பொழுதில் வாழ்வது, அது “இப்பொழுதை”ப் பற்றியது, உங்களுடைய நகலை “இப்பொழுதே” பெற்றுக்கொள்ளவும். நீங்கள் இதை வாசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். இங்கே அந்தப் புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்புகள்:
1. Amazon.in (அமேசான்.இன் – இந்தியாவில் உள்ள வாசகர்களுக்கு).
2. Amazon.com (அமேசான்.காம் – மற்ற அனைத்து வாசகர்களுக்கும்).

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email