எனது கடந்த வாரப் பதிப்பிற்குப் பின் எனது மின்னஞ்சல் கேள்விகளால் நிரம்பியுள்ளது. பெரும்பாலான வாசகர்களுக்கு ஒரே மாதிரியான சவால்களே இருந்தன. மிகக் குறிப்பாக, அவர்களது மனம் தியானத்தின் போது அலைபாய்கிறது என்றும், அதைத் தியானிக்கும் பொருளின் மீது திரும்பக் கொண்டுவரப் போராட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாவது மிகவும் பொதுவான கேள்வி, எதைப் பற்றித் தியானிப்பது? எனது கடந்த இடுகையில், எதுவும் செய்யாமல் தற்போதைய தருணத்தில் இருப்பது பற்றி எழுதியிருந்தேன். “தற்போதைய தருணத்தில் இருந்து கொண்டு, எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி?” என்று கேட்டுள்ளனர். அதைப் படிப்படியாகப் பார்க்கலாம்.

இன்று நான் மகாமுத்ரா (Mahamudra) தியானத்தின் ஒன்பது நிலைகளைப் பற்றி எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் உங்களது கடந்த வாரக் கேள்விகளைப் பெற்ற பிறகு, மனதின் ஒன்பது நிலைகளை அதாவது கவனத்தின் ஒன்பது நிலைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். யோக வேத மொழியில் அது நவாகாரா சித்தஸ்திதி (navaakaaraa cittasthiti), அதாவது மனநிலையின் ஒன்பது வடிவங்கள் என்று அழைக்கப் படுகிறது. பல ஆண்டுகள் தியானப் பயிற்சியில் கழித்துள்ளதால், ஆரம்ப நிலையில் உள்ளவர்களிலிருந்து சிறந்த யோகிகள் வரை அனைவரும் இந்த நிலைகளைக் கடந்து தான் ஆக வேண்டும் என்று, என்னால் மிகுந்த நம்பிக்கையோடு உங்களுக்குச் சொல்ல முடியும். தியானம் செய்யும் திறனுடன் எவரும் பிறப்பதில்லை. அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இதை வாழ்வில் எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.

பூரண பேரின்பத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தியானிப்பவர்களும், என்றென்றும் அமைதியான மனத்திற்காக, உங்கள் மனம் முழுச் சமநிலையை அடைய, தொடர்ந்து எண்ணங்களுடன் போராடிக் கொண்டிராமல் இருக்கத் தேவையானது விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் ஒரு உன்னதமான முயற்சி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எவ்வளவு பெரிய முயற்சி என்று நீங்கள் கேட்கலாம்? முதலில், கவனத்தின் ஒன்பது நிலைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். மனதைப் பயிற்சிக்கும் பாதை என்று அவற்றை நினையுங்கள். பெரும்பாலான மக்கள் தியானத்தில் விரும்புவது ஒன்பதாவது நிலையாகும். அதை அடைய, நீங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தேர்ச்சி அடைய வேண்டும்.

1. கவனத்தை நிலைப்படுத்துதல்

வேத நூல்கள் இதைச் சித்தஸ்தாபனா (cittasthaapana) என்று அழைக்கின்றன. இதன் பொருள் மனத்தை நிலை நிறுத்துவதாகும். இதுவே தியானிப்பவரின் வாழ்க்கையில் முதல் நிலை ஆகும். இந்தக் கட்டத்தில், மனது ஒரு சிந்தனையில் ஒரு சில வினாடிகள் கூட லயிக்க முடியாமல், தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் கட்டத்தில் மனத்துடன் போரிடுவதைப் போல் தியானமானது உணரப்படுகிறது. அடிப்படையில், இந்தக் கட்டத்தில் தியானிப்பவர் எண்ணங்களைச் சீரமைக்க முற்படும்போது, அமைதியின்மையே அதிகம் ஏற்படுகிறது.

2. இடைப்பட்ட கவனம்

இந்த நிலை சம்ஸ்தாபனா (samsthaapana) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அரவணைக்கும் அல்லது கவனத்தை ஊக்குவிக்கும் என்று பொருள். தியானிப்பவர் தியானத்தின் போது குறுகிய கால அளவில் நல்ல கவனத்தை (ஒரு சில விநாடிகள்) அனுபவிக்கிறார். இந்த நேரங்கள் தான் மனம் அலைந்து திரியாத நேரமாகும். ஒரு சில விநாடிகள் மனம் அமைதி அடைந்த பிறகு, எண்ணங்கள் மீண்டும் மோதத் தொடங்குகின்றன. ஆனால் பெரும்பாலும் தியானிப்பவருக்கு இந்தத் தேவையற்ற எண்ணங்கள் பற்றிப் பல நிமிடங்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் தாம் தியானத்தில் உள்ளதையே மறந்து விடுகின்றனர்.

3. தொடர்ந்த கவனம்

இந்த நிலை அவஸ்தாபனா (avasthaapana) என்று அழைக்கப்படுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதற்கு வெளிக்காட்டுதல் என்றும் பொருள். உஷ்ணம் அல்லது குளிரில் உங்கள் உடல் வெளிப்படும் போது என்ன நடக்கும்? நீங்கள் அதை அதிகமாக உணர்கிறீர்கள் அல்லவா? இதேபோல், தியானத்தின் போது உங்கள் மனத்தை வெளிக்காட்டும் போது, நீங்கள் இன்னும் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையாகவும் ஆகிறீர்கள். கவனத்துடன் இருத்தல் என்பது மனத்தை வெளிக்காட்டுதல் என்பதாகும். இதற்கும், இதற்கு முந்தைய நிலைக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம், எவ்வளவு உஷார்நிலையில் நாம் உள்ளோம் என்பதே ஆகும். இந்த நிலையில், தியானிப்பவர் விழிப்புணர்வுடனேயே இருந்து மனம் திசைதிருப்பப்படும் போது உடனே உணர்கிறார்.

4. நிலையான கவனம்

இது உபஸ்தாபனா (upasthaapana) என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த நிலையானது முழுவதும் இதைப்பற்றியது தான்: உண்மையான தியானத்திற்குத் தயாராகுதல். இந்த நிலையில், தியானிப்பவர் தனது தியானத்தின் போது பெரும்பாலும் முழு கவனத்துடன் இருக்க முடியும் ஆனாலும் ஒரு சில சமயங்களில் அமைதியின்மை மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார்கள்.

5. தெளிவான கவனம்

தியானிப்பவர் மனதில் ஆழமான அமைதியை அனுபவிக்க முடியும். இந்த நிலை சமஸ்கிருதத்தில் தமனா (damana) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு வசப்படுத்தப்பட்ட அல்லது பேரார்வம் இல்லாத என்று பொருள். தியானிப்பவரின் கவனம் இந்தக் கட்டத்தில் வசப்படுத்தப் பட்டுள்ளது. தியானிப்பவர் பலரிடம் உள்ள பொதுவான, தவறான கருத்து பற்றி நான் குறிப்பிட வேண்டும்: தியானத்தில் நீங்கள் நிம்மதியை உணருவது, சில நேரங்களில் உள்ளத் தெளிவு, கூர்மையான கவனம் ஆகியவற்றை முற்றிலும் இழந்துவிடுவதால் தான். இது கவனத்தைக் கட்டுப்படுத்துவதில் இருந்து வேறுபட்டது.

6. மனதை அமைதிப்படுத்துதல்

இந்த நிலை ஷமானா (shamana) என்று அழைக்கப்படுகிறது, அணைந்தது என்பது அதன் பொருள். தியானிப்பவரின் மனதில் எண்ணங்கள் மறைந்து, மனத் தடைகள் நீங்கி மனம் மிகவும் தெளிவாக உள்ளது. ஆனால் இந்த மனத்தின் பிரயத்தனம் சில நேரங்களில் அமைதியின்மை அல்லது உற்சாகம் போன்ற நுட்பமான உணர்வுகளைக் கொடுக்கிறது. இந்தக் கட்டத்தில் இவ்வாறு இருப்பதற்கு முக்கியக் காரணம் மனதிற்குப் பழக்கமில்லாததை (அமைதியாக இருத்தல், அசையாமல் இருத்தல்) நீங்கள் செய்துள்ளதால் தான். நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பயிற்சிப்பவரால் தான் இந்த நிலையை அடைய முடியும்.

7. மனதின் முழுமையான அமைதிநிலை

இது வ்யுபாஷமனா (vyupashamana) என்று அழைக்கப்படுகிறது. மிகச் சுவாரஸ்யமாக, வ்யுபா என்றால் தன் கைகளினால் சாப்பிடுகிறவன் என்று பொருள். இது தியானத்தின் மிகச் சிறந்த நிலைகளில் ஒன்றாகும். இந்த நிலையில், மனம் தன்னைத்தானே தீவிரமாகப் பார்க்கிறது. மனச்சோர்வு, அமைதியின்மை, எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் பிற கவனச்சிதறல்களை மனதால் கண்டு கொள்ள முடிகிறது. மனம் முற்றிலும் சமாதானப்பட்டு விட்டது. மனம் முற்றிலும் அமைதிப்பட்டு, சாந்தத்திலேயே நிலைத்திருக்க இப்போது அஞ்சுவதில்லை.

8. தீவிரமான கவனம்

இந்தக் கட்டத்தில் மனம் ஒரே புள்ளியில் ஒருமுகப்படுத்தும் நிலையை அடைந்து விட்டது. இது ஏகோடிகரனா (ekotikarana) என்று அழைக்கப்படுகிறது. தியானிப்பவர் மிகவும் நிதானமான நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு அசையாமல் அமர்ந்துத் தடையில்லாத, நீடித்த, தெளிவான தியானத்தைச் செய்ய முடியும். மனச்சோர்வு, அமைதியின்மை ஆகியவை பெரும்பாலும் இப்போது இல்லை.

9. ஆழ்ந்து உள்ளீர்த்தல்

இது சமாதானா (samaadhaana) என்று அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் முழுவதும் சாந்தமான சமநிலை என்பதாகும். தியானிப்பவர் சிரமமின்றித் தியானிக்கிறார் மற்றும் சாந்தமான சமநிலையையும், அசையாமல் அமர்ந்திருக்கும் நிலையையும் தொடர்ந்து நான்கு மணி நேரம் நீட்டிக்க முடியும்.

இந்த ஒன்பது நிலைகளுக்கும் அப்பால் பூரண நிலையான ஒரு அதீத உணர்வு காத்திருக்கிறது. உலகியலுக்கு அப்பாற்பட்ட, வாழும் பரிமாணம் இருக்கிறது. மகாமுத்ராவின் ஒன்பது நிலைகளும், மேலே உள்ள ஒன்பது நிலைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. தீவிரமாகத் தியானிப்பவர் இதைப் பற்றி மேலும் அறிவதால் பயனடைய முடியும். எனவே, நான் அடுத்த வாரம் அதைப்பற்றி எழுத முயற்சிக்கிறேன். ஒரு கேள்வி எஞ்சியுள்ளது: எவ்வளவு பெரிய முயற்சி தேவை என்பது? எனது அடுத்த பதிப்பு வரை காத்திருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email