கடந்த மாதம் நான் சிங்கப்பூரில் இருந்து தில்லிக்கு விமானத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அது 5 1/2 மணி நேரப் பயணமாகும். ஏறக்குறைய 12 வயதுக்குள் இருக்கும் ஒரு பையன் ஓரத்து இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனுக்கும் எனக்கும் இடையே வழிப்பாதை மட்டுமே இருந்தது. அவனை அடுத்து அவனுக்கு ஒரு சில ஆண்டுகள் மூத்த அவனது சகோதரி அமர்ந்திருந்தாள். அவர்கள் தான் கடைசியாக, விமானம் புறப்படுவதற்கு ஒரு சில வினாடிகள் முன் ஏறியவர்கள். விமானம் அடுத்த 10 நிமிடங்களில் அதன் ஓடு பாதையில் இருந்தது.

நாங்கள் வான்வழிக்கு வந்தவுடன் அவன், அவனது தொலைப்பேசியை வெளியே எடுத்து அதில் ஒரு வீடியோ கேம் (காணொளி விளையாட்டு) விளையாடத் தொடங்கினான். ஒரு மணி நேரம் கழித்து, அவர்களது அன்னை அவர்களைப் பார்க்க அங்கு வந்தாள். அந்தச் சிறுவன் அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டுத் திரும்பவும் தனது விளையாட்டைத் தொடர்ந்தான். அவர்களது அன்னை உடனே அங்கிருந்து சென்று விட்டாள். உணவு பரிமாறப்பட்டபோது, அவன் தன் தொலைப்பேசியை வைத்துவிட்டு அதற்குப் பதிலாக தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்தான். முக்கிய உணவைத் தொடாமல், பசியைத் தூண்ட முதலில் கொடுக்கும் உணவை (அசைவ உணவு) மட்டும் கொறித்துக் கொண்டும், அதையே பல முறை கொண்டுவரும்படி கேட்டுக் கொண்டும், அதையும் ஒழுங்காகச் சாப்பிடாமலும் இருந்தான். சாப்பாட்டின் நடுவிலேயே தொலைப்பேசியை எடுத்துத் தனது வீடியோ விளையாட்டை மீண்டும் விளையாடத் துவங்கினான். தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டிருந்தது.

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, மேஜையில் இருந்த அந்தத் தட்டை எடுத்துச் சென்ற போதும் அவனுடைய தட்டில் அப்படியே தந்தூரி இருந்தது. அப்போதும் அவனது கண்கள் தொலைப்பேசியிலேயே இருந்தன. இதற்குப் பின்னர், அவர்களது தகப்பனார் அவர்களைச் சந்தித்தார். அவர் ஒரு ஜாலியான நபர் போல் தோன்றினார். அவர் அங்கேயே ஒரு பீர் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் மகனைக் கொஞ்சம் தள்ளி உட்காரச் சொல்லி, அவரும் அங்கேயே உட்கார்ந்தார். தந்தையும், மகளும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த போதும், அந்தப் பையன் தொலைப்பேசியின் திரையிலிருந்து தன் கண்களை எடுக்கவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து, அவன் தனது தொலைப்பேசியை வைத்துவிட்டு அவனது லேப்டாப்பை (மடிக்கணினி) வெளியே எடுத்தான். அந்த இயந்திரம் ஆரம்பிக்கத் தொடங்கும் வரை அவன் தொலைக்காட்சித் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது தொடங்கிய உடன் அதில் ஒரு வீடியோ கேம் விளையாட ஆரம்பித்துவிட்டான். துப்பாக்கிச் சூடு, உறுமல் மற்றும் வேதனைக்குரல் ஆகிய அனைத்துச் சத்தங்களுடனும் ஒரு வன்முறையைத் தழுவிய விளையாட்டாக அது இருந்தது. 4 1/2 மணி நேரங்களுக்கு மேல் கடந்து, நாங்கள் தில்லியில் இருந்து ஒரு மணி நேரத் தூரத்தில் இருந்தோம். அந்தச் சிறுவன் தனது இருக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டு கை வைக்குமிடம் ஒன்றில் தலையையும், மற்றொன்றில் கால்களையும் வைத்துக் கொண்டு தூங்கச் சென்றான். நான் அவன் மேல் ஒரு போர்வையைப் போர்த்திவிட விரும்பினேன். குறைந்தது அவனது இருக்கை நீளத்திற்காவது (அகலவாக்கில் அல்லாமல்) சுருண்டு படுத்தால் வசதியாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஒரு கணம், நான் எழுந்து அவனது இருக்கையைச் சாய்த்து அவன் நேராகப் படுக்க உதவ நினைத்து, பின் அந்த யோசனையைக் கைவிட்டேன். விரைவில், விமானம் கீழே இறங்க ஆரம்பித்ததால் அவனை இருக்கையின் பெல்ட்டைப் போடக்கூறி விமானப் பணிப்பெண் அவனை எழுப்பினாள்.

அவன் தொலைப்பேசியை வெளியே எடுத்து மீண்டும் சில வீடியோ விளையாட்டுக்களை விளையாடத் தொடங்கினான். விமானம் தரை இறங்கியது, வரிசையில் அவன் எனக்கு முன்னால் நின்று கொண்டு வேகமாக டைப் அடித்துக் கொண்டிருந்தான். ஒருவேளை யாருக்காவது செய்தி அனுப்பியிருக்கலாம். எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் தொலைப்பேசியில் (சத்தமாக) ஏற்கனவே யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

இந்த ‘டிஜிட்டல் புரட்சி’ நம்மை என்ன செய்துவிட்டது என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

தெருவில் மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் இருப்பதன் மூலம், புத்தகங்களைப் படிக்காததின் மூலம், அவர்களின் பெரும்பாலான நேரத்தைத் திரையின் முன் செலவழிப்பதன் மூலம், இன்றைய குழந்தைகள் பெரிய ஒன்றை இழக்கிறார்கள் அல்லது அவர்கள் முந்தைய தலைமுறையை விடச் சிந்தனையில் குறைந்தவர்களாக ஆகி விடுவார்கள் என்று நான் சொல்ல வரவில்லை. இதுவே தற்போதைய காலத்தின் வாழ்க்கை முறையாக இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் நிரூபிக்க வேண்டிய அறிவு மற்றும் ஞானத்தின் அளவு ஆகியவை நாம் இதுவரை பார்த்திராத அளவில் வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால், உலகின் மிகப் புரட்சிகரமான தொடக்கங்களை 18 வயது கூட நிரம்பாத, ஒரு மதுக்கடையில் குடிக்கக் கூடத் தகுதியைப் பெறாத, குழந்தைகளே துவங்கியுள்ளனர்! அவர்கள் கட்டுக்கடங்காத இளம் வாலிபர்கள். அவர்களும் கூடத் தங்களின் நேரத்தை வீடியோ விளையாட்டுக்களில் கழித்தவர்கள். ஆனால் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது – ஒரு பெரிய அளவிலான அவர்களது நேரம் மற்றும் ஆற்றலைச் சில ஆக்கப்பூர்வமான குறிக்கோள்களில் அவர்கள் முதலீடு செய்துள்ளனர்.

அதே நேரத்தில், மேலும் அதிகமான அளவில் இன்றைய குழந்தைகள் (மற்றும் பெரியவர்கள்) மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று போதுமான கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன. இது என்னை இன்றைய முக்கிய விஷயத்திற்கு இட்டுச் செல்கிறது: நிகழ் காலத்தில் மகிழ்ச்சியைக் கண்டுபிடித்தல்.

வீடியோ கேம்கள் விளையாடுவது அல்லது ஆன்லைனில் (இணையத்தில்) நேரம் செலவிடுவது கெடுதல் அல்ல. பேஸ்புக்கில் உங்கள் நிலையைப் பகிர்ந்து கொள்வது மற்றும் உங்கள் நண்பர்களின் நிலையைத் தெரிந்து கொள்வது ஆகியவை உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். படங்கள் மற்றும் நகைச்சுவைகளை வாட்ஸ்அப்-பில் பகிர்ந்து கொள்வதில் ஒரு சிறிய மகிழ்ச்சியையும் உணரலாம். ஆனால், உற்பத்தித் திறனான மற்றும் உற்பத்தித் திறனற்ற செயல்களுக்கு இடையேயான வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். நமது சில செயல்கள் படைப்புத் திறன் உடையதாகவும், மற்றவை ஆற்றலை அழித்துவிடக் கூடியதாகவும் இருக்கின்றன.

ஒரு உற்பத்தித் திறன் உள்ள பேரார்வத்தில் நீங்கள் உங்களை முதலீடு செய்யும் போது (எடுத்துக்காட்டாக, ஒரு புதிய திறனைக் கற்றல் அல்லது அதில் இன்னும் அதிகத் தேர்ச்சி அடைவது போன்றவை), உங்களுக்குக் குறிப்பிட்ட நீடித்த மன நிறைவைக் கொடுக்கும். அது உங்களை ஒரு சீறான ஓட்ட நிலையில் வைத்து உங்களுடைய அமைதியற்ற உணர்வைக் குறைக்கிறது. நீங்கள் இனியும் ஆன்லைன் நண்பர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு விழையமாட்டீர்கள். நீங்கள் ஒரு வீடியோ கேமை முடிப்பதற்கோ அல்லது அந்த அதிகப் (போனஸ்) புள்ளிகளைக் கட்டாயமாக அடைய வேண்டும் என்றோ உணரமாட்டீர்கள். இந்த இ-பதக்கங்கள் மற்றும் நண்பர்கள் ஆகிய இவை அனைத்தும், டிஜிட்டல் உலகின் போலி சந்தோஷத்துக்கு உங்கள் மனம் பழகிவிட்டது என்றே அர்த்தம். உங்கள் மனத்தில் தொடர்ந்து ஒரு நல்ல உணர்வு அல்லது சமூக ஊடகங்களில் மற்றவர்களின் “விருப்பம்” மற்றும் “கருத்துக்கள்” இவற்றை எதிர்பார்க்கும் ஒரு ஏக்க உணர்வு இருக்கலாம், ஆனால் இவை உங்களின் உண்மையான வாழ்க்கைக்கு எந்த மதிப்பையும் சேர்ப்பதில்லை. இந்த விருப்பம், கருத்துக்கள், உரையாடல்கள் மற்றும் அரட்டைகள் நம்மை ஒரு நல்ல மனிதனாக ஆக்குவதில்லை.

என்னிடம் எந்தக் கணினியும் இல்லை ஆனால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அதே கொள்கைகளைப் பயன்படுத்தி நான் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டருக்கு வெளியே நண்பர்களைச் சேகரிக்க முயற்சி செய்கிறேன்.

ஒவ்வொரு நாளும், நான் தெருவில் இறங்கி நடக்கும் போது, நான் என்ன சாப்பிட்டேன், நான் எப்படி உணர்கிறேன், முதல் நாள் இரவு என்ன செய்தேன் மற்றும் இன்று நாள் முழுவதும் நான் என்ன செய்வேன் என்று அங்கு உள்ள வழிப்போக்கர்களிடம் சொல்கிறேன். நான் அவர்களிடம் என் மனைவி, என் மகள், என் நாய், நான் செய்யும் தோட்டக் கலை மற்றும் விடுமுறை நாட்களில் நீச்சல் குளத்தின் அருகில் நேரத்தைக் கழிக்கும் படங்களை அவர்களுக்குக் காட்டுகிறேன். நான் அவர்களின் உரையாடல்களையும் கேட்கிறேன், அவர்களை ‘விரும்புவதாகக்’ கூறுகிறேன். எனக்கு ஆர்வம் உள்ள விஷயங்களில், அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன்.

அது வேலை செய்கிறது. அதற்குள் நான்கு பேர் என்னைத் தொடர்கின்றனர்: இரண்டு காவல்துறை அதிகாரிகள், ஒரு சமூக சேவகர் மற்றும் ஒரு மனநல மருத்துவர்.

– பீட்டர் ஒயிட், ஹோல்புரூக் (Peter White, Holbrook)

இந்தத் தீவிரத் தொடர்புடைமை மிகவும் அடிமைப்படுத்தக் கூடியது, சேதத்தை விளைவிக்கக் கூடியது மற்றும் உங்கள் மனம் மற்றும் உணர்ச்சியின் நல்வாழ்விற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. சமூக ஊடகத்தில் உங்களை விட மற்றவர்கள் மகிழ்ச்சியாகத் தெரிகின்றனர். இது உண்மைக்குப் புறம்பானது என்று நம் அனைவருக்கும் தெரியும். பெருகி வரும் மன அழுத்தம், கவலை மற்றும் துக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் ஒரு உலகத்தை நாம் வேகமாக உருவாக்குகிறோம். மோசமான பகுதி என்னவென்றால், இந்த “இ-உலகம்” மிகவும் உண்மையானதாகத் தோன்றுகிறது.

“நீங்கள் விலையைச் செலுத்தவில்லை என்றால், நீங்கள் வாடிக்கையாளர் இல்லை; நீங்களே விற்கப்படுகிற பொருளாக இருக்கிறீர்கள்,” என்று நான் ஒரு முறை ஒரு மேற்கோள் படித்தேன்.

சுருக்கமாகக் கூறினால் இவ்வாறாகவே சமூக ஊடகம் உள்ளது. இந்த மாபெரும் தளங்கள் உங்களால் இயங்குகின்ற போது, உண்மையில் அவர்கள் விரும்புவது விளம்பரதாரர்களையே. உங்களை ஆன்லைனில் தக்க வைக்க எதையும் செய்யத் தயாராக உள்ளனர்…

அதிகமான அளவில் நுகர்வோர் நமது உலகில் இருக்கும் போது, உங்கள் கவனத்தைப் பெற விற்பதற்கான திட்டங்களை நமது உலகில் வகுக்கும் புத்திசாலித்தனமான மூளைகள் இருக்கும் போது, விற்பனைப் பொருட்களுக்கான கடைகளை எதுவும் வாங்காமல் கடந்து செல்வது, ஒரு உலக அதிசயத்திற்குக் குறைவானது இல்லை. ஆயிரக் கணக்கான மக்கள் எண்ணற்ற மணி நேரம் ஆன்லைனில், அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்களில் (அதுவும் கூட அந்த நேரத்தை வீணடிக்கிறோம் என்ற குற்ற உணர்வுடன்) செலவிடுகிறார்கள். அந்த நாளின் முடிவில் (உண்மையில்) புத்திசாலிகளாக, மகிழ்ச்சியாக அல்லது அதிகமான திருப்தியுடன் நாம் இருப்பது இல்லை. இவற்றால் என்ன பிரயோஜனம்?

ஸ்மார்ட் போன்களின் தோற்றத்திற்கு நீண்ட நாட்களுக்கு முன் நான் பார்த்த ஹாலிவுட் படம் ஒன்று நினைவில் உள்ளது. இயந்திரங்கள், மனிதர்களின் புலனாய்வுத் திறமையை மிஞ்சி விட்டது என்று அது காட்டியது. அப்போது அது இயல்பாகத் தோன்றவில்லை. இனிமேலும் அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன். அந்த நேரம் வந்துவிட்டது. உண்மையில் இயந்திரங்கள் நம் வாழ்வை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன.

அதிலிருந்து ‘லாக்-ஒட்’ செய்வதற்கு (வெளியேறுவதற்கு) மனதின் கவன நிலை தேவைப்படுகிறது. உங்கள் திரை நேரத்தைக் (தொலைக்காட்சி உட்பட) குறைக்க முயற்சி செய்யுங்கள். திடீரென்று, நீங்கள் எப்போதுமே செய்ய நினைத்த அனைத்து விஷயங்களையும் செய்ய உங்கள் கைகளில் அவ்வளவு நேரம் இருக்கும். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருங்கள். நீங்கள் ஒரு நண்பனைப் போல் இருக்க விழைவது சரியே, ஆனாலும் சில நேரங்களில் அவர்களது சொந்த நலனுக்காக நீங்கள் உண்மையில் ஒரு பெற்றோராகச் செயல்பட வேண்டியது அவசியம். மேலும், நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், அழகு உங்கள் இதயத்தை உருக்கி அங்கு நிலைத்திருக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவரானால், நீங்கள் அதை ஆன்லைனில் கண்டுபிடிக்கப் போவதில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. உங்களது ஆன்லைன் நேரத்தைக் குறைத்துக் கொள்ள பயன்பாடுகளைப் (Apps) பயன்படுத்த முடியும். அவை பெருமளவில் உபயோகமாக உள்ளன.

இன்று நான் சில தத்துவ செய்திகளைப் பகிர்ந்து கொண்டு இருந்தால், அது ஒருவேளை இன்னும் மனத்தை உருக்குவதாக இருந்திருக்கும். இருந்தாலும், நடைமுறையும் கூட அதன் சொந்த முறையில் ஒரு சரியான தத்துவமாகவும், ஒரு செயல்பாட்டு முறையாகவும் உள்ளது.

உங்களுக்கு மதிப்புக் கொடுங்கள், உங்கள் நேரத்திற்கு மதிப்புக் கொடுங்கள். உங்கள் திரை நேரத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்குங்கள். நீங்கள் ‘ஆஃப்லைனில்’ சென்றால் கூட உலகம் நன்றாகவே இயங்கும். உங்களது உண்மையான வாழ்க்கையை வாழுங்கள். நாம் அமர்ந்திருக்கும் அந்த இடத்திலேயே நமது சிறியதிரையில் சிறிய காட்சிகளைப் பார்த்து நம் தாகத்தைத் தணித்துக் கொண்டு இருக்கும் போதே இயற்கை ஆச்சரியம் தரும் காட்சிகளை வழங்கிக் கொண்டு அழகாகப் பாய்ந்து செல்கிறது. இது மதிப்புடையதா?

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email