நான் பெறும் ஒரு பொதுவான கேள்வி, மக்களின் உறுதி மொழி, அவர்களுடைய சபதம், அவர்களது இலக்கை அடைய இறுதி வரை உழைத்தல் ஆகியவற்றை நிறைவேற்ற முடியாத, இயலாமையையே சுற்றி வருகிறது. அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு ஞானம், வளங்கள், திறன்கள் இருக்கின்றன, இருந்தும் கவனச்சிதறல்கள் அவர்களின் சக்தியை ஒடுக்க, அவர்கள் அனுமதிக்கிறார்கள். இத்தகைய கவனச்சிதறல்கள், உணர்வுகளின் ஒரு பெரிய அலை எழும்பக் காரணமாகின்றன. ஆசைகள் ஆகிய சுனாமி, அவர்களது பாதையிலேயே தொடரும் மற்றும் நிலையாக நிற்கும் தீர்மானத்தை உலுக்கி, அவர்களின் வலிமையை நசுக்கி விடுகின்றன. யோக மற்றும் வேத நூல்கள் விக்‌ஷிப்ததா (vikshiptata), கவனச்சிதறல்கள், மற்றும் அவை எப்படிப் பெரிய தடைகளாக இருக்கின்றன என்பதைப் பற்றிப் பெரும் அளவில் பேசுகின்றன. அவையே வெற்றி மற்றும் தோல்வி, ஜெயித்தல் மற்றும் இழத்தலின் இடையே உள்ள வித்தியாசத்தின் காரணமாகும். கவனச்சிதறல்கள் மற்றும் அவற்றைக் கடக்கும் வழிகளைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவ என்னை அனுமதியுங்கள். அவை இரண்டு வகையாகப் பின்வருமாறு உள்ளன:

1. வெளிப்புறமான கவனச்சிதறல்கள் உள்ளே எதிர்விளைவுகளைத் தூண்டுகின்றன

நீங்கள் ‘சைவ உணவைச் சாப்பிடுவது மற்றும் மதுவை விட்டு விடுவது’ என்று உறுதி கொண்டுள்ளதாக நாம் அனுமானித்துக் கொள்வோம். தவிர்க்க முடியாத ஒரு விருந்துக்கு வரும்படி, நீங்கள் அழைக்கப்பட்ட வரை எல்லாம் நன்றாக நடைபெற்றன. ஒரு காலத்தில் உங்களுக்குப் பிடித்த அசைவ உணவுகள் உள்ள தட்டுகள், அத்துடன் உயர் தரமான மது, சாப்பாட்டு மேசையில் இருந்தன. உங்கள் ஆசை தூண்டப்பட்டது. மேலும், உங்களைச் சுற்றி இருந்த எல்லோரும் கொஞ்சம் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தினர். சபதம் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், கையில் கிடைத்ததை விட வேண்டாம் என்றும் எல்லா விதமான காரணங்கள் மற்றும் வாதங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. சமூக அழுத்தம் மற்றும் உங்களுக்குள் இருந்தத் தணியாத ஆசை ஆகியவற்றால் நீங்கள் ஆசைக்கு அடிமை ஆகிறீர்கள்.

இந்த உதாரணத்தில், ஒரு வெளிப்புறச் சூழல், ருசியான உணவு வகைகளைப் பார்த்ததும், எண்ணங்களின் ஒரு முழுக் குவியலைத் தூண்டி உங்கள் தீர்மானத்தைப் பலவீனப்படுத்தியது. விருந்துக்கு வரும் வரை நீங்கள் சாதாரணமாக இருந்தீர்கள். ஆனால் இப்போது, திடீரென்று உங்கள் உள் உலகம் ஒரு கொந்தளிப்பில் உள்ளது. மேலும் நீங்கள், உங்கள் இதயம் உங்கள் மனத்தை ஆட்சி செய்ய அனுமதித்து விட்டீர்கள். இந்த விருந்துக்குப் பின் ஒரு விதக் குற்ற உணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும். குற்ற உணர்வு ஒருவரது விழிப்புணர்வைப் பலவீனப்படுத்துகிறது.

வெளிக் கவனச்சிதறல்களுக்கு எதிராகப் போராடி வெற்றியுடன் வெளிப்பட இரண்டு வழிகள் உள்ளன:

அ. அந்த இடத்தை விட்டு அகலுங்கள்

சாதகமான ஒரு சூழல் எந்தத் திட்டத்தையும் இயக்கப் பெரும் அளவில் உதவுகிறது. தற்போதைய உதாரணத்தில், எது உங்களுக்கு நல்லதோ அதற்கு மாறாக எல்லாம் வழங்கப்படுகின்ற இது போன்ற இடங்களுக்கு, விருந்துகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்துவிட்டுக் கரி ஒட்டாமல் வெளியே வர வாய்ப்பே இல்லை. அதிக எச்சரிக்கையுடன், அசாதாரண கவனத்துடன் நீங்கள் செயல்படவில்லையென்றால், நிச்சயமாகக் கரி ஒட்டும். நீங்கள் இருக்கும் அந்தச் சூழலை மாற்ற இயலாத சில நேரங்களில், கீழே உள்ள அடுத்த குறிப்பைப் பின்பற்றவும்:

ஆ. உங்களைத் தெளிவாகப் புரிய வைக்கவும்

சிலர், நீங்கள் ஆணவம் கொண்டவர் என்றும், அல்லது நீங்கள் யாரைப்பற்றியும் கவலைப்படுவதில்லை என்றும், அல்லது நீங்கள் மாறிவிட்டதாகவும் இன்னும் பலவாறு நினைக்கலாம். அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். என்னை நம்புங்கள், அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். அவர்கள் உண்மையாக உங்களை விரும்பினால், இவற்றில் எதையுமே நினைக்க மாட்டார்கள் மற்றும் அவர்கள் விரும்பவில்லை என்றால், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேவையான விஷயமா? இறுதியில், விளைவுகளை, உங்கள் தேர்விற்கான விலையை, நீங்கள் மட்டுமே தனியாக ஏற்கிறீர்கள், அந்த நேரத்தில் வேறு யாராலும் உங்களுக்கு உதவ முடியாது. எனவே, நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்து உறுதியாக நிற்கிறீர்களோ, அதற்காகவே நில்லுங்கள். இது எப்போதும் எனக்கு வேலை செய்திருக்கிறது; நான் துறவறம் மேற்கொள்வதற்கு முன்னர் பல ஆண்டுகளாக நான் எல்லா வகையான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன், ஆனால் ஒரு முறை கூட நான் என்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுத்ததில்லை. என்னைச் சுற்றி இருந்த மக்கள் புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

2. ஆழ்மன எண்ணங்கள் வெளிப்புறச் செயல்களைத் தூண்டுகின்றன

இந்த வகை கவனச்சிதறல்களை நிர்வகிப்பது அதே அளவு கடினமானதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, சமீபத்தில் தான் புகை பிடிப்பதை நீங்கள் நிறுத்தி உள்ளீர்கள். நாள் முழுவதும் நீங்கள் எப்படி இருக்க நினைத்தீர்களோ அப்படியே இருந்து, நீங்கள் பத்து நாட்கள் புகை பிடிக்கவில்லை. ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு சிகரெட்டின் படம் நினைவுக்கு வர, புகைபிடித்தலை நினைக்காமல் இருக்கக் கடினமாக முயற்சிக்கிறீர்கள் ஆனால் சிகரெட் தான் திரும்பத் திரும்ப உங்கள் மனதில் வருகிறது. நீங்கள் பரபரப்பு மற்றும் புகைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினை அனுபவிக்கிறீர்கள். புகைபிடிக்கும் சிந்தனையின் உந்துதல் அதிகமானதால், நீங்கள் போய் ஒரு பெட்டி சிகரெட் உங்களுக்காக வாங்குகிறீர்கள். இந்த வகை கவனச்சிதறல்களைக் கடக்க இரண்டு வழிகள் உள்ளன:

அ. உங்கள் மனதை அதில் இருந்து எடுக்கவும்

தடை விதிக்கப்பட்டவற்றைச் செய்யக் கூடாது என்பதைப் பற்றி நினைக்காதீர்கள். அதற்குப் பதிலாக ஒரு ஆழமான மூச்சு எடுத்து வேறு எதிலாவது உங்கள் கவனத்தை நிலைநாட்டவும். செயல்பாடு இல்லாத ஒன்றின் மேல், நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதை நினைத்துக் கொண்டே, அத்தகைய எண்ணங்களில் இருந்து மீள முடியாது. நீங்கள் சாதாரணமாக, மெதுவாக உங்கள் எண்ணங்களின் தனிக்கவனத்தை மாற்ற வேண்டும். காட்சியை மாற்றி, இருந்த இடத்தை விட்டு எழுந்து கால் ஆற நடந்து, தேவைப்பட்டால் வேறு ஒரு நல்ல எண்ணத்தால் இந்த எண்ணச் சிதறலை மாற்றி இதனைக் கடந்து வெற்றி கொள்ள வேண்டும். என்ன தேவையோ அதை எல்லாம் செய்யுங்கள் ஆனால் சபலத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.

ஆ. பொறுமையைக் கையாளுங்கள் (ஒத்தி வையுங்கள்)

நீங்கள் நினைப்பதை விட இந்த முறை மிகவும் வலிமையானது. உங்கள் மனத்திற்கு ஒரு இரையைத் தந்திடுங்கள், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அல்லது இதைப் போல் சிறிது நேரம் சென்று இதைப்பற்றி யோசனை செய்யலாம் என்று உங்கள் மனத்திடம் சொல்லுங்கள். கவனத் சிதறலின் புயல் அடங்க, உங்களது எண்ணங்கள் அடங்க, உங்களது மனம் அமைதி அடைய அனுமதியுங்கள். கவனச்சிதறல்கள் தாக்க வருகின்ற போது, எண்ணக் குதிரைகளைக் கட்டுப்படுத்தக் கடிவாளம் இட முடியுமானால், நீங்கள் கவனத்துடன் இருந்து போரில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் ஒரு வெற்றியாளராக, வலுவானவராக மற்றும் அதிக நம்பிக்கையுள்ள நபராகத் தோன்றுவீர்கள்.

இப்போது, எந்த விதமான கவனச்சிதறலாக இருந்த போதிலும், நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளக் கூடிய, எப்போதுமே சரியான முடிவை எடுக்க உதவும், இரண்டு மிக வலிமையான கேள்விகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆம் எப்போதுமே சரியான முடிவை எடுக்க.

1. இது என் சிறந்த செயலா?

ஒரு செஸ் க்ராண்ட்மாஸ்டர், ஒவ்வொரு முறை சதுரங்கத்தில் காயை நகர்த்துவதற்கு முன்னும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார், இது என் சிறந்த செயலா? அது எப்போதும் விளையாடுபவரை அதிகமாகச் சிந்திக்க, இன்னும் சிறப்பாகச் சிந்திக்கத் தூண்டுகிறது, நினைத்தே பார்த்திராத அசாதாரண நகர்வுகளைக் கொண்டு வர வைக்கிறது. சபலத்திற்கு இடம் கொடுப்பதற்கு முன்னால், நீங்கள் ஏதாவது தீர்மானிக்கும் முன்னால், ஏதாவது ஒரு நடவடிக்கையை எடுக்கும் முன்னால், உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: இது என் சிறந்த செயலா? அல்லது, இன்னும் சிறப்பாக என்னால் செய்ய முடியுமா? நீங்கள் உங்களிடம் உண்மையாக இருந்தால், உங்கள் கவனச்சிதறல்களை மிகக் குறைந்த திறமையைக் கொண்டு எளிதாகக் குறைக்க முடிவதைக் காணலாம்.

2. அதிகபட்சமாக என்ன நடக்கும்?

உங்களுக்குச் சுய சந்தேகம் இருக்குமானால், “மிக மோசமானதாக என்ன நடக்க முடியும்?” என்ற கேள்வி தான் சிறந்த கேள்வி என்பதை நினைவில் கொள்ளவும். கவனச்சிதறல்களை அகற்றுவதற்கு, நீங்கள் இந்தக் கேள்விக்குச் சரியான எதிர்மறைக் கேள்வியைக் கேட்க வேண்டும். உங்கள் கவனம் திசைதிரும்பி, உண்மையில் மதுக் குடிக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், “அதிகபட்சமாக என்ன நடக்கக் கூடும்?” என்ற கேள்வியை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சில மணி நேரத்திற்கான ஒரு குறுகியகால இன்பம், இதற்காகவா? இவ்வளவு தானா? உங்களது தீர்மானத்தைச் சமரசம் செய்வதற்கு இது போதிய ஆதாரமா? அப்படி என்றால், இது தான் உங்களது சிறந்த நடவடிக்கையா!?

உங்களுடைய மிகப் பெரிய நண்பர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்போதும் உங்களுடன் நின்று, நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவி, நீங்கள் உன்னதப் பாதையில் செல்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளும் ஒருவரே ஆவார். நீங்கள் தான். உங்களது மிக மோசமான எதிரி? நீங்கள் தான்.

Ātmaiva hyātmanō bandhurātmaiva ripurātmanaḥ… (பகவத் கீதை, 6.5)
நீங்கள் மட்டுமே உங்களது சிறந்த நண்பர் மற்றும் உங்களது மோசமான எதிரியும் ஆவீர்.

ஒரு அடிமை, எவ்வளவு தான் நிறையச் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், எவ்வளவு நல்ல விதமாக நடத்தப்பட்டாலும், அடிமையாகவே தான் இருக்கிறார்.

போங்கள்! உங்களையே வெற்றி கொள்ளுங்கள், உங்களுடைய சொந்த ராஜ்யத்தின் அரசராக இருங்கள், உங்கள் மனத்தின் எஜமானனாக, உங்கள் சொந்தக் கப்பலின் ஒரு கேப்டனாக, உங்கள் சொந்த நிபந்தனைகளின் படி வாழுங்கள். உங்களையும், உங்களின் சொந்த உண்மையையும் கண்டறியுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email