முன்னொரு காலத்தில் தியோர்டி என்று ஒரு விஞ்ஞானி இருந்தார். ஒவ்வொரு குறிப்பிடத்தக்க நிகழ்வுக்குப் பின்னாலும் அவருக்கு ஒரு கோட்பாடு இருந்தது. அவர் தர்க்கம், கோணவியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில் இணையற்றவராக இருந்தார். அவரால் சிக்கலான சமன்பாடுகளை மனத்திலேயே சிந்தித்து எளிதில் தீர்க்க முடிந்தது. அவரால் ஒரு உயரமான அமைப்பின் நிழலைப் பார்த்து ஒரு சில விநாடிகளில் அதன் உயரத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. சில விஷயங்களின் சிக்கலான செயல்பாடுகளுக்குப் பின்னால் உள்ள ஏன், எப்படி என்பவற்றை அறிந்திருந்தார். ஒரு நாள் அவர் படம் வரையும் கலைஞரான அவரது நண்பரைக் காணச் சென்றார். அவரது நண்பர், அவருடைய சமீபத்திய கலைப் படைப்புகளான சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், மற்றும் நிலப்பரப்புகளின் அழகான படங்களைக் காட்டினார். அந்த ஓவியங்களைப் பார்த்து வெளிக்காட்ட முடியாத மகிழ்ச்சியைத் தியோர்டி அனுபவித்துப் பிரமிப்பால் பீடிக்கப்பட்டார். அவரால் எப்படி இது போன்ற அற்புதமான ஓவியங்களை வரைய முடிகிறது, கோடுகள் மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தி உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த முடிகிறது, அவரது அற்புதமான வேலைக்குப் பின்னால் என்ன தர்க்கம் மற்றும் அறிவியல் அடிப்படைகள் உள்ளன என்று அவரது நண்பரைக் கேட்டார்?

அவர் தான் வெளியில் பார்த்த அழகையும், அவர் உள்ளே உணர்ந்த உணர்வுகளையும் கேன்வாஸ் துணியில் வரைந்துள்ளதாகவும், இவ்வாறு வரையப் பல ஆண்டுகள் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது என்றும் அந்தக் கலைஞர் தியோர்டிக்கு விளக்கினார். இதைத் தவிர வேறு எந்தத் தர்க்கமும் இல்லை என்றார். ஒரே அளவு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைக் கலந்தால் ஒவ்வொரு முறையும் அதே ஆரஞ்சு நிறம் தான் வரும் என்று தியோர்டி வாதிட்டார். ஒரு சில கோணங்களில் நேர் கோடுகளை வரைந்தால், அது எப்போதும் ஒரே வடிவத்தைத் தான் எடுக்கும் என்றும் குறிப்பிட்டார். அவர் புத்திக்கூர்மையான வேறு பல காரணங்களைத் தனது நண்பருக்குக் கொடுத்து, இறுதியில் அவரது கலைக்குப் பின்னால் சில கோட்பாடுகளும், தர்க்கங்களும் இருக்க வேண்டும் என்றும், அதை விளக்குவது அந்தக் கலைஞரின் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று உணர்வதாகவும் ஒரு முடிவுக்கு வந்தார். அந்தக் கலைஞர், கலை என்பது விவாதத்தின் வடிவம் அல்ல, எண்ணத்தின் வடிவம் ஆகும்; கலையானது கணிதக் கணக்கீட்டின் பணி அல்ல, இதயத்தின் பணியாகும்; கண்டிப்பாக அறிவியல் அடிப்படையும் உள்ளது ஆனால் கலையின் வெளிப்பாடு எப்போதும் சமன்பாடுகளுக்கும், தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டு ஒரு வித்தியாசமான வடிவம் எடுக்கும் என்றார். தியோர்டி ஏற்றுக் கொள்ள முடியாமலும், அவரது நண்பர் அவரது எண்ணத்தில் மாறாமலும் இருந்தனர்.

நான் இன்று ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறப் போகிறேன்: கர்மா. என்னுடைய மின் அஞ்சல் இதைச் சுற்றிய கேள்விகளால் நிரம்பியுள்ளது. தேடுதல் உள்ளவர்கள், கர்மாவின் சட்டங்களைப் பற்றி அறிய விரும்புகின்றனர். ஏன் யூதர்கள் அவ்வளவு துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தது, இயற்கையின் பேரிடரால் மரணிக்கின்றவர்கள் என்ன தவறு செய்தனர், ஏன் சில குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கின்றன, ஏன் சிலர் மிகச் சிறிய வயதில் இறக்கின்றனர். இப்படிப் பலபல கேள்விகள். வலி தரும் கேள்விகள்.

எனக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளது. எனது ஆழ்ந்த தியான நிலையில் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையே இந்த நம்பிக்கைக்கு ஆதாரம். என்னுடைய அனுபவங்கள் மனத்தால் கட்டுப்பட்டவையாக இருக்க முடியுமா? நிச்சயமாக, அவ்வாறே உள்ளன. அனுபவங்கள் அனைத்தும் அகநிலையில் கட்டுப்பட்டு ஒன்றுக்கொன்று சார்புடையவை. நான் கர்மாவின் சட்டங்களை நம்புகிறேன் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளானாலும் கர்மா சிறிதளவு கூட அழிவதில்லை என்றும் நான் நம்புகிறேன். எனினும், ஒரு முழுமையான தத்துவமான, சகலகலா வல்லமையை நான் நம்பவில்லை. ஒரு கோட்பாடே எல்லாக் கேள்விகளுக்கும் பதிலாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அனைத்தும் கணிதத்தின் அடிப்படையில் நடப்பதானால், இயற்கை, பூமி, கோள்கள், பிரபஞ்சம் இவை இப்பொழுது இருப்பதைப் போல் இருக்க முடியாது. கணிதத்தால் இந்தப் பிரபஞ்சத்தை அளவிட முடியவில்லை, எனவே எல்லையற்றது என்று பெயரிட்டனர். இன்று ஒரு துகளைக் கண்டறிந்து, அதைக் கடவுள் துகள் என்று குறிப்பிடுகின்றனர். மற்றும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொன்றைக் கண்டு பிடித்து அதை உன்னதமான கடவுள் துகள் அல்லது வேறு ஏதாவது என்று குறிப்பிடுவார்கள். பொருட்களின் முன்னேற்றத்தில் அறிவியலின் பங்கு உள்ளதென்பதை நான் மறுக்கவில்லை, அதை நல்லது அல்லது கெட்டது என்றும் நான் நிச்சயமாக முத்திரையிடவுமில்லை.

எனவே, ஏன் நல்ல மனிதர்களுக்குக் கெட்ட விஷயங்கள் நடக்கின்றன அல்லது மாறுபாடாகக் கெட்ட மனிதர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கின்றன என்பது கேள்வி அல்ல. கேள்வி என்னவென்றால், உங்களுடைய அறிவிற்குப் பொருந்தும்படியான, உங்களுக்குப் புரியக்கூடிய, உங்களது பழக்க முறைக்கு ஏற்புடையதான பதிலை அளிக்க ஒரு உலகளாவிய கோட்பாடு ஏன் இருக்க வேண்டும்? நாம் முழுமையைத் தேடுகிறோம், முழுமையான ஆதாரங்களைத் தேடுகிறோம், நமக்கு ஒரே பதில் தேவை, அதையே எளிதாக உணர்கிறோம். தியோர்டி இந்தக் கலையில் தர்க்கத்தைத் தேடிக் கொண்டே இருப்பார். இயற்கை ஏன் கணித சமன்பாடுகளின் படி செயல்பட வேண்டும்? பின்வருவதை எண்ணிப் பாருங்கள்:

இரண்டு ஒத்த விதைகள் தரையில் விதைக்கப்படுகின்றன. அவை ஒரே மாதிரியாகப் பேணி வளர்க்கப்படுகின்றன. ஏன் ஒன்று முளைக்கிறது, மற்றொன்று அழிந்து விடுகிறது? அந்த விதை அழிந்துவிட்டது போல் தெரிகிறது, ஆனால் அது உண்மையில் அழிந்துவிட்டதா? அந்த அழுகிய விதை உண்மையில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது. அது நிலத்தைச் செழுமை ஆக்குகிறது. முளைவிட்ட விதையைப் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான முறையில் சுற்றுச் சூழலுக்கு ஆதரவளிக்கிறது. விதை அழுகுவதைத் தோல்வி என்றும், வளர்வதை வெற்றி என்றும் நாம் குறியிடும் போது இருமை எழுகிறது.

நான் கடவுளை, இயற்கையை, அதன் விசித்திரமான பரிமாணத்தை நம்புகிறேன். அது விவரிக்க இயலாதபடி அழகானதாகவும், ஆழமானதாகவும் உள்ளது. அதை நானே எனது முதன்மை அனுபவத்தின் மூலம் அனுபவித்துள்ளதால், அதுவே எனது நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கிறது. ஆம், அவர் உங்கள் சொந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு வடிவத்தை எடுக்க முடியும்; நான் அதைப் பல முறை பார்த்திருப்பதால், நான் அதை நம்புகிறேன். எனினும், கடவுள் மேலிருந்து சில தந்திரமான வழிகளைச் செதுக்குகிறார் என்றோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களுக்குத் தீமையோ அல்லது நன்மையோ செய்யச் சில கெட்ட திட்டங்களைச் செயல்படுத்துகிறார் என்றோ, ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றவில்லை என்றால் உடைந்து போகும் ஒரு கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது அவர் உங்களால் சந்தோஷமடைந்தால் உங்களை இந்த உலகின் செல்வங்கள் கிடைக்க ஆசீர்வதிப்பார் என்றோ நான் நம்பவில்லை. அவர் ஒரு பக்கத்தைச் சார்ந்தவராகவும், பாரபட்சமுடையவராகவும் இருந்தால் அவர் இனி கடவுளாக இருக்க முடியாது. நான் அருளை நம்புகிறேன் ஆனால் அது வெறும் சடங்குகளைச் செய்யும் செயல்திறனை அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுவதை அடிப்படையாகக் கொண்டது என்று நான் நம்பவில்லை. அது காரணம் மற்றும் விளைவாக இருக்கலாம் என்றாலும், பெரும்பாலும் அது கலையின் ஒரு வேலையாக உள்ளது.

அப்படியானால், நாம் கர்மாவின் சட்டத்தைக் காலத்திற்கும், தேசத்திற்கும் ஒவ்வாதது என்று நிராகரிக்க வேண்டுமா? இல்லை. அவ்வாறு செய்வது ஒரு குறுகிய நோக்காகவும் அதே சமயம் முட்டாள்தனமாகவும் இருக்கும். நான் கர்மாவின் கணக்கு பற்றியும், அது எவ்வாறு தனிமனிதனுக்குப் பொருந்துகிறது என்றும் அடுத்த இடுகையில் இல்லாவிட்டாலும், வரும் காலத்தில் தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். ஆனால், தயவு செய்து பெரிய அளவிலான நிகழ்வுகளைப் பகுத்தறிய சிறிய பொருளாதாரக் கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம். நாம் ஆலோசனைக்கு எடுத்துக் கொண்ட எந்த ஒரு விஷயத்தையும் விடாமல் தொடர்ந்தால், கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வந்து சேருவோம். அது உங்களுக்கு ஆறுதலையும், சில நியாயத்தையும் வழங்குவதால் அந்த முடிவினை ஏற்பது மடத்தனமாகும். ஒரு ஓவியத்தில் சமன்பாட்டினைக் கண்டுபிடிக்கும் திறன் தியோர்டியிடம் இருப்பதால் அவர் அந்தக் கலையின் திறனைக் கண்டு பிடித்து விட்டார் என்று அர்த்தமில்லை.

குறிப்பிட்ட சில அம்சங்களைப் புரிந்து கொள்ள, நீங்கள் ஒரு கலைஞராக இருக்க வேண்டும், மற்றவர்களைப் புரிந்து கொள்ள நீங்கள் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். நிலப்பரப்பின் படம் வரைவதோ அல்லது கட்டிடங்கள் நிர்மாணிப்பதோ எதுவாக இருந்தாலும் நீங்கள் அமைதியுடன் இருக்கும் வரை, உன்னதமான எதையாவது கண்டிப்பாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள். கடவுள் அல்லது மதம் பற்றி யாரும் உங்களுக்கு எதுவும் சொல்லவில்லை என்றால் நீங்கள் உங்களது வாழ்க்கையை எவ்வாறு வாழ்வீர்கள்? ஆயிரம் குழந்தைகள் கொண்ட ஒரு குழுவை வசிப்பதற்கு உகந்ததான வேற்றுக் கிரகத்தில் விட்டுவிடுவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு வளர்வார்கள், அவர்களது நம்பிக்கை, அவர்களது ஒழுக்கம், அவர்களது மதம் என்னவாக இருக்கும்?

நான், உங்கள் கேள்விக்கான விடையை வேதங்களில் உள்ள சில கோட்பாடுகளால் விளக்கி இருக்க முடியும். உங்களுக்குத் திருப்தி தரும் சில கோட்பாடுகள், ஒரு உயர்ந்த தத்துவம், ஒரு தர்க்க விளக்கம், சில பொருந்தக்கூடிய ஆய்வறிக்கைகளைக் கூறி இருக்க முடியும். ஆனால் அது சுவாமியின் வழி அல்ல. வேறு எல்லாவற்றிற்கும் மேலே உண்மையிடம் நான் உறுதியுடன் கட்டுப்பட்டு இருக்கிறேன். எனது இரண்டாம்பட்ச பகுப்பாய்வு மூலம் என் பதிலை ஏற்பதற்கு மாறாக உங்களுடைய சுய விசாரணையில் சரியான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்பதையே நான் விழைகிறேன்.

உள்நோக்கித் திருப்பும் செயலானது, வடிவமைக்கப்பட்ட எண்ணங்களின் அடுக்குகளை உடைக்கும் கலையாகும். இது ஒருவரது உண்மையான இயற்கை நிலையைப் புரிந்து கொள்ளும் அறிவியல் ஆகும். உங்களது தொடக்கத்திலிருந்து உண்டான ஆதி நிலையை அனுபவித்தலாகும். நீங்கள் அடையாளங்கள் மீறிச் செல்ல அது உதவுகிறது. இந்த, உங்களின் சுயஉணர்தல், சிந்தனையால் வரப்போகிறது – வடிவமைப்பால் அல்ல, பிரதிபலிப்பால் வரப்போகிறது – சடங்குகளால் அல்ல, பயிற்சியால் வரப்போகிறது – போதிப்பதால் அல்ல. நீங்கள் தியோர்டியோ அல்லது கலைஞரோ, அமைதியில் இருங்கள், நீங்களாகவே இருங்கள், அச்சமற்று இருங்கள்.

அனுபவம் இல்லாமல் புரிந்து கொண்டிருப்பது வெறும் உலர்ந்த நிலை போன்றதாகும். மற்றும் புரிதல் இல்லாத அனுபவம் குருட்டு நிலை போன்றதாகும். சென்று, உங்களது சொந்த உண்மையைக் கண்டறியுங்கள். அது ஒன்றே உங்களை விடுவிக்கும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email