அது ஒரு மிகப்பெரிய உணர்வு, என்னைப் பிரமிக்கச் செய்த ஒன்று, கிட்டத்தட்ட என்னை ஒரு சமாதி நிலைக்குக் கொண்டு சென்றது.

கடந்த மாதம், டிசம்பர் 19-ம் தேதி, ஒரு பெரிய மண்டபத்தில் கூடியிருந்த 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நடுவில் உரையாற்றுவதற்கான ஒரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது நாள் வரை உரையாற்றியதிலேயே இதுவே மிகப்பெரிய கூட்டமாகும். என் கண்களைக் குளமாக்கியது, அந்தப் பார்வையாளர்களின் அளவு அல்ல. நான் நுழைந்ததும் அந்தக் குழந்தைகள் அளித்த இடி போன்ற கரவொலியினாலும் இல்லை. இது முற்றிலும் வித்தியாசமானது. மேலே படிக்கவும்.

1992 ல், தனது விதவைத் தாய் மற்றும் ஏழு உடன்பிறப்புகளுடன் மிக்க வறுமையில் வளர்ந்த ஒரு எளிய மனிதர், வழக்கத்திற்கு மாறான ஒரு செயலை மேற்கொண்டார். 27 வயதில், நம்மில் பெரும்பாலோர் நமது பொருள் இலக்குகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் அந்த வயதில், நமது சொந்த விருப்பங்களைத் தாண்டிப் பார்க்கக் கடினமாக இருக்கும் அந்த வயதில், திருமணம் செய்துகொண்டு வாழ்வதைப் பற்றிப் பெற்றோர்கள் கேட்கும் மற்றும் இது போல் பலவற்றைக் கேட்கும் அந்த வயதில், அவர் அப்போது இருந்தார். இருந்தும், ஒரு தனியார் கல்லூரியில் ஒரு வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றிய அவர் தனது வேலையை விட்டுவிட்டு, அவர் தனது சொந்த மாநிலமான ஒடிசாவின் உட்புறப் பகுதிகளில் பயணம் செய்தார்.

அவரது யோசனை மிகவும் எளிமையானது: ஏழ்மைக்கும் கீழ் நிலையில் இருந்த ஏழைகளுக்குத் தரமான கல்வி வசதிகளைத் தருதல்.

அவர் 12 பழங்குடியினக் குழந்தைகளை, அவர்களது பெற்றோருக்குப் பல உத்தரவாதங்களை அளித்த பின்னர் அழைத்து வந்தார். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களது உள்ளூர் மொழியில் பேசினர். ஒடியா, மாநில மொழியோ அல்லது வேறு எந்த அதிகாரப்பூர்வ இந்திய மொழியோ அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களின் பாதுகாப்பு, உணவு, விடுதி, சீருடைகள் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கான பொறுப்பை அவரே ஏற்றார்.

25 ஆண்டுகள் கழித்து இப்போது 2018 ல், பேராசிரியர் அச்சுத்ய சமந்தாவின் கலிங்கா சமூக அறிவியல் கழகம் (Kalinga Institute of Social Sciences), கே-ஐ-எஸ்-எஸ் (KISS) என்று பொதுவாக அறியப்படுகிறது, 27000 பழங்குடிக் குழந்தைகளைக் கொண்டுள்ளது, அங்கு அவர்களுக்கு மழலையர் பள்ளியிலிருந்து பட்டப்படிப்பு வரை படிப்பிக்கப்படுகிறது. கே-ஐ-எஸ்-எஸ் இலவச உணவு, விடுதி, கல்வி, சீருடைகள், மருத்துவ வசதிகள் அது தவிர சர்வதேச ரக்பி வீரர்களை உருவாக்குவது உட்பட பல்வேறு வகையான வசதிகளையும் அவர்களுக்கு வழங்குகிறது.

பேராசிரியர் சமந்தா அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இத்துடன் கே-ஐ-ஐ-டி (KIIT, Kalinga Institute of Industrial Technology) என்று அழைக்கப்படும் இன்னொரு நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதில் 27,000 மாணவர்கள் பல்வேறு படிப்பில் பணம் செலுத்தி படிக்கச் சேர்ந்திருக்கிறார்கள். 400 ஏக்கர் பரப்பளவில் உள்ளது அந்த வளாகம். கே-ஐ-எஸ்-எஸ் மற்றும் கே-ஐ-ஐ-டி இரண்டிலுமாகச் சேர்த்து 54,000 மாணவர்களும், 12,000 ஊழியர்களும் உள்ளனர். இவை அனைத்தும் ஒரு நபரின் கனவு மற்றும் இடைவிடா நடவடிக்கையினால் உருவானது.

“கே-ஐ-ஐ-டி இல் ஒவ்வொரு மாணவர் சேரும்போதும், கே-ஐ-எஸ்-எஸ் இல் ஒரு பழங்குடி மாணவரை நாங்கள் சேர்க்கிறோம். கே-ஐ-ஐ-டி இலிருந்து வரும் வருமானம் கே-ஐ-எஸ்-எஸ் க்காகப் பயன்படுத்தப்படுகிறது,” என்று பேராசிரியர் சமந்தா என்னிடம் கூறினார்.

அச்சுத்ய சமந்தாவைச் சந்தித்தது மனத்திற்கு இதமான ஒரு அனுபவமாக இருந்தது, அவரிடம் அன்பு, ஞானம் மற்றும் மனிதாபிமானம் ஒளிர்ந்தது. அவர் இன்றைய தேதி வரை, இரண்டு படுக்கையறை கொண்ட வாடகை வீட்டில் தான் வாழ்கிறார் என்று கேள்விப்பட்டேன். திருமணமும் செய்து கொள்ளாமல், ஆயிரக்கணக்கான இளம் குழந்தைகளின் வாழ்வை உயர்த்துவதற்காக அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்.

அந்தக் குழந்தைகளின் ஒழுக்கத்தையும், அக்கறையையும் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் பேச்சு முழுவதையும், அவர்கள் கவனிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளும் விதமாகக் கேள்விகளைக் கேட்டேன், அவர்கள் உடனடியாகவும், சரியாகவும் பதிலளித்தார்கள். அவர்கள் என் செய்தியை, நகைச்சுவையை மற்றும் கதைகளைப் புரிந்து கொண்டார்கள்.

“இங்கே நான் இருப்பதில் உங்களுக்கல்ல, எனக்குத் தான் மகிழ்ச்சி மற்றும் பாக்கியம் ஆகும். உங்களைப் பார்த்ததே, நம் உலகத்திற்கு இன்னும் செய்ய என்னைத் தூண்டுகிறது. நான் உங்கள் பெற்றோருக்கும், உங்கள் ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுகிறேன்,” என்று அந்தக் குழந்தைகளிடம் நான் கூறினேன்.

“பிறப்பு எடுக்கும் அனைவருக்கும் மூன்று அடிப்படை உரிமைகளுக்கான ஆசீர்வாதம் உண்டு. வாழ்க்கை நியாயமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்களிடமிருந்து இந்த மூன்று உரிமைகளையும் எவரும் பறிக்க முடியாது. கனவு காணும் உரிமை, தேர்வு செய்யும் உரிமை மற்றும் செயல்படுத்தும் உரிமை. கண்களைத் திறந்து கொண்டு கனவு காணுங்கள். கவனத்துடன் தேர்வுகள் செய்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்,” என்று நான் மேலும் கூறினேன்.

இந்த இடுகையின் நோக்கம் பேராசிரியர் சமந்தாவைப் பெருமைப்படுத்துவது அல்ல, ஏனென்றால் அவரைப் போன்றவர்கள் ஒப்புதல் வாக்குமூலங்கள் அல்லது புகழ்ந்து பாடப்படுதல் ஆகியவற்றுக்கெல்லாம் மேலே இருக்கிறார்கள். கல்லை ஊடுருவிச் செல்லும் தண்ணீரைப் போல், கஷ்டங்களைத் தகர்த்து அவர்களே தங்கள் சொந்தத் தயாரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அதற்குப் பதிலாக, நாம் ஒவ்வொருவரும் எப்படி நமக்குள் மேன்மையின் ஒரு விதையைக் கொண்டிருக்கிறோம், என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் தலைவிதி என்று பொறுத்துக் கொள்கிறோமா அல்லது அதை மாற்றியமைக்கிறோமா என்பது நாம் நடந்து கொள்வதைப் பொறுத்து உள்ளது.

இவை அனைத்தும் ஒரு கனவுடன் தான் தொடங்குகின்றன. ஆனால் ஒரு உண்மையான கனவு முதலில், ஒரு உயர்ந்த பார்வையாக எப்போதும் இருப்பதில்லை. கூகிள், பேஸ்புக் அல்லது மைக்ரோசாப்ட் ஆகியவற்றை நிறுவியவர்கள், அதைத் தொடங்கிய போது, அது ஒரு மாபெரும் நிறுவனமாக ஆகும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பெரும்பாலும் தொடக்கத்தில் நீங்கள் கவலைப்படுவது, உங்கள் இதயத்தில் உள்ள ஒரு சிறிய விஷயத்தைப் பற்றித் தான். நீங்கள் விடாமுயற்சியுடன், நேர்மையாகத் தொடர்ந்து செயல்படும் போது, உங்களுடன் உங்கள் கனவும் வளர்கிறது. உங்கள் கனவை நனவாக்க என்னவெல்லாம் தேவை என்பதை அறிந்துகொள்ளும் ஞானத்தைப் பெற ஆரம்பிக்கிறீர்கள். எதோ ஒன்று நடக்க வேண்டும் என்றால், பல காரியங்கள் சேர்ந்து வர வேண்டும். ஒரு கனவை நனவாக்கக் கீழே உள்ளவற்றில் எவை தேவையானவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • கடின உழைப்பு
  • விதி
  • தைரியம்
  • திறன்
  • மேலே உள்ள அனைத்தும்

உண்மை என்னவென்றால், இவை வெற்றிக்கான பொருட்கள் மட்டுமே ஆகும். இந்தப் பொருட்கள் மட்டுமே, தனித்தனியாக ஒரு பெரும் உணவை உருவாக்குவதில்லை. அதன் செய்முறை, அளவு, தோற்றம், சுற்றுச்சூழல், பின்புறம் பாடும் பீத்தோவன் அல்லது பாலிவுட்டின் பாடல்கள் எல்லாவற்றையும் பொறுத்து உள்ளது. அனைத்தும் சேர்ந்து, ஒரு தயாரிப்பின் ருசியான சுவையில் எப்படிப் பங்களிக்கின்றன என்பது, நமது ஒட்டுமொத்த அனுபவத்தில் தெரிகின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரியான நிலைமைகளை உருவாக்கும் போது மட்டும்தான், நமது கனவுகள் பரிணமிக்கத் தொடங்குகின்றன என்று கூறுகிறேன்.

ஒரு உகந்த சூழலை உருவாக்குவதில் நீங்கள் கவனம் செலுத்தினால், விரும்பிய முடிவை அடைவதற்குத் தேவை கால அவகாசமே ஆகும். என் ஜன்னலிலிருந்து பார்க்கும் மரங்களின் மீது கணக்கில்லாத பறவைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஞாபகம் எனக்கு உள்ளது. வசந்த காலத்தில் அவை அங்கு வந்து மென்மையான புதிய இலைகளில் பாடின, கீச்சிட்டன மற்றும் விளையாடின. பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் மலர்களின் மீது வந்து அமர்ந்தன. புல்லும், மரங்களும் பச்சை நிறமாக இருந்தன. அழகான நிறம் மற்றும் சிறிய இறக்கைகளைக் கொண்ட பறவைகள் அங்கு வந்தன. அந்தப் பறவைகளை அங்கு வரவழைக்க நாங்கள் எதுவும் குறிப்பாகச் செய்யவில்லை. என் வீட்டைச் சுற்றி இருந்த தாவரங்களின் ஆரோக்கியத்தில் நாங்கள் கவனத்தைச் செலுத்தினோம். நாங்கள் சரியான சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம், இயற்கை மற்ற விஷயங்களைக் கவனித்துக் கொண்டது.

ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு அமைப்பில், நீங்கள் உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க விரும்பினால், அதை ஆதரிக்கும் ஒரு சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். எதன் மதிப்பையாவது நாம் உயர்த்த விரும்பினால், அதை நாம்தான் ஊக்குவிக்க வேண்டும். எனவே, நீங்கள் உங்கள் கனவை நோக்கி வேலை செய்யும் போது, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கவனமாக இருந்து கொண்டு, “நான் எடுத்து வைக்கும் இந்த அடி, என் கனவிலிருந்து என்னை விலக்கிச் செல்கிறதா அல்லது என் கனவை நோக்கி அழைத்துச் செல்கிறதா?” என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு குழந்தை அடி, தொடர்ந்து மற்றொன்று, இன்னும் ஒன்று… என்று இது ஒரு நாள் நீங்கள் கண்ட கனவின் சூழலில் நடக்கிற வரை, நீங்கள் கனவில் கண்டது எல்லாம் உண்மையான உலகில் இப்போது உங்களைச் சுற்றி இருக்கிற வரை தொடர்கிறது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி எட்டிப் பார்க்கும் போது, பல ஆண்டுகளாக யோகியின் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்து அந்த யோகி அடையும் சமாதி நிலையின் போது, ஒரு நிறுவனத்தின் -தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வால் ஸ்ட்ரீட்டில் (Wall Street) தனது நிறுவனத்தின் ஐ-பி-ஓ (IPO) வைக் குறிக்கும்போது ஏற்படும் அந்த உணர்வு தான், நீங்கள் பெறும் உணர்வு.

இது மனிதனுக்கு ஒரு சிறிய அடி, ஆனால் மனிதக்குலத்திற்கான ஒரு பெரிய பாய்ச்சலாகும். ~ நீல் ஆம்ஸ்ட்ராங்

ஒடிசாவில் மிக உயர்ந்த ஆக்கப்பூர்வமான செயலுக்குத் தேவையான எதையும் விட்டுவிடாமல் ஏற்பாடு செய்ததோடு, ஒவ்வொரு சிறிய விவரத்தையும் கவனித்து ஒத்துழைப்பு அளித்த, மேன்மை வாய்ந்த திரு. அருண் பொத்ரா மற்றும் அவரது அன்பான குடும்பத்திற்கு மிக்க நன்றி. அவரால் தான், கே-ஐ-எஸ்-எஸ் ல் உள்ள அற்புதமான குழந்தைகளைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email