இரண்டு கேள்விகளைப் பலர் என்னிடம் பல முறை கேட்டுள்ளனர். சமீபத்தில், நெடுநாட்களாக எனக்குத் தெரிந்த ஒரு நபர், இதே கேள்விகளைக் கேட்டார். நானும் பதிலளித்தேன். அவ்வாறு செய்த பின்னர், நான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எதிர்காலத்தில், இந்தக் கேள்விகளைக் கேட்பவரிடம் இந்த இணைப்பைச் சுட்டிக்காட்டி விட்டு, நான் என் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும்.

நான் அந்தக் கேள்விகளைத் தொகுத்து உங்களுக்குக் கூறுகிறேன்:

1. நான் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை வணங்குகிறேன். நான் மற்றொரு வடிவத்தை வணங்கினால் அல்லது மற்ற நடைமுறைகளை ஆராய முற்பட்டால், அது என்னுடைய தெய்வத்தைச் சஞ்சலமடையச் செய்யுமா?
2. குரு குறையற்றவராக இருக்க முடியுமா? அல்லது வேறு எவராவது குறையற்றவராக இருக்க முடியுமா? யாவர்க்கும் மேலான கடவுள் ஒருவரே பூரணமானவராக இருக்க முடியும்.

என் எண்ணங்கள்; பின்வருமாறு:

பிற வடிவங்களை வழிபடுதல்.

அதே தெய்வீகம் அனைத்திலும் வாழ்கிறது. கிருஷ்ணன் அர்ஜூனனிடம் கூறுகிறார்:

समोऽहं सर्व भूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रिय |
ஸமோஹம் ஸர்வ பூதேஷூ ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரியா. (பகவத் கீதை 9.29)

இவ்வாறு: நான் பாரபட்சமற்றவன், நான் அனைத்திலும் சமமாக இருக்கிறேன். நான் அனைவரிடமும் இருக்கிறேன். எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தவர் என்று எவரும் இல்லை மற்றும் நான் எவரையும் வெறுக்கவில்லை.
நீங்கள் பல்வேறு விஷயங்களை முயற்சிக்க முடிவு செய்தால், உங்களது கடவுள் ஒருபோதும் மோசமாக உணரப் போவதில்லை. அவர் அப்படி உணர்ந்தால், எப்படிக் கடவுளாக இருக்க முடியும்! கெட்டவை-நல்லவை, சரியானது-தவறானது, பெருமை-பாரபட்சம் போன்ற இரட்டைகளில் கடவுள் சிக்கியிருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இருமை, அறிவொளி அடையாதவரின் ஒரு குணமாகும். உண்மை மற்றும் சுயஉணர்தலைக் கண்டுபிடிக்க உதவுகிற பாதை எதுவாக இருந்தாலும், பயமில்லாமல் அதைத் தேர்வு செய்யுங்கள்.

மற்ற கூறுகளை ஆய்வு செய்வது ஒரு பரந்த பார்வையைக் கொடுக்க முடியும், எனினும், அதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டி உள்ளது. சுயக் கண்டுபிடிப்பு ஏற்படும் வரை, பல விஷயங்களில் கவனம் செலுத்துவது, ஒருவருடைய முனைப்பான ஆற்றல் மற்றும் பக்தியின் வீரியத்தைக் குறைத்துவிடும்; அது இயற்கையாகவே நடக்கிறது. உங்களது நம்பிக்கை, சம்ஸ்காரம், சீரமைப்பு, மற்றும் எண்ணங்கள் இவற்றின் ஒரு தயாரிப்பே உங்களது கடவுள் ஆகும். நீங்கள் செய்பவை அல்லது செய்யாமல் விட்டவை இவற்றின் அடிப்படையில் கோபப்படும், சந்தோஷப்படும் அல்லது அமைதி அடையும் கடவுளை நீங்கள் உருவாக்கி இருந்தால், நீங்கள் உங்களது முடிவை மறு பரிசீலனைச் செய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் “உங்கள் உலகில்” உங்கள் விருப்பப்படி ஒரு கடவுளை அமைத்துக் கொள்ள உரிமை உள்ளவர். இந்த “உலகத்தின்” கட்டமைப்பில் உங்களை ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பூரணமான ஒருவர்.

அனைவரும், மற்றவர்களைப் போல் முழுமையானவர்கள், அதே போல் ஒவ்வொருவரும், எல்லோரையும் போல் முழுமையற்றவரும் ஆவார். ஒருவருமே குறையற்றவராக அல்லது முழுமையானவராக இருக்க முடியாது என்று நம்பினால், அந்த நம்பிக்கை நீங்கள் ஒரு நல்ல, வலுவான, மகிழ்ச்சியான நபர் ஆக உதவுகிறது என்றால்; உங்களுக்கு நன்றாகப் புரியும் வரை நீங்கள் அந்த நம்பிக்கையுடன் ஒன்றியிருக்க வேண்டும்.

என் பார்வை இதில் சிறிது வேறுபட்டதாக உள்ளது. ஆனால் நான் என் பதிலைக் கூறினால், என்னுடைய சிந்தனை எவ்வளவு நுட்பமானதாக இருந்தாலும் அது உங்களைத் தாக்கமடையச் செய்து விடும். இதன் பதில் உங்களது சொந்த ஆன்மீகப் பயணத்தின் போது, உங்களது சுய கண்டுபிடிப்பின் பகுதியாக, உங்களால் கண்டுபிடிக்கப்படவும், உணரப்படவும் வேண்டும்.

त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा |
த்ரிவிதா பவதி ஷ்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா. (பகவத் கீதை 17.2)

பக்தியில் மூன்று வகை உண்டு என்று கிருஷ்ணா கூறுகிறார். இத்தகைய பக்தி ஒருவரது இந்தப்பிறவி மற்றும் முந்தைய பிறவி ஆகிய இரண்டிலுமான ‘சம்ஸ்காரா’ வின் அடிப்படையில் உருவாகிறது என்றும் அவர் சொல்கிறார்.

ஒரு சரியான ஓவியம், ஒரு சரியான இலக்கியப் பணி, சரியான ருசியுள்ள ஓர் உணவு இருக்க முடியுமானால், அதன் படைப்பாளிகள் மிகச் சரியானவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், குறைந்தது அவரவரின் துறையில் சரியானவராக இருக்கலாம். எவருக்காவது முதல் மூன்றும் எப்போதுமே சரியாக இருக்க முடியாது என்றால், அந்த நபருக்கு எப்படி ஒரு சரியான மனிதன் இருக்க முடியும்! சரியானது என்பது தற்சார்புடையதா அல்லது சார்பற்றதா என்பது, அவரவரின் தனிப்பட்ட விளக்கத்தைச் சார்ந்ததாகும். சில தேர்வாளர்கள் முழுமையான மதிப்பெண்ணை ஒருபோதும் அளிப்பதில்லை, ஆனால் பலர் எளிதாக அளிக்கிறார்கள்.

தன்னை உணர்தல் என்பது குறையற்ற நிலையை அடைவதைப்பற்றி அல்ல. தன்னை உணர்தல் என்பது குறையற்ற நிலை என்பதையே மாற்றி வரையறை செய்வதைப்பற்றி விவரிப்பதாகும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email