“நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன், ஆனால் என்னுடைய கடந்த கால அனுபவங்கள் என்னைத் தவிக்கவைக்கின்றன, சுவாமி,” என்று சமீபத்தில் ஒரு பார்வையாளர் என்னிடம் கூறினார். “நான் செய்த தவறுகளால் எப்போதும் குற்றவாளியாகவே உணர்கிறேன். இந்தச் சுமையை நான் எப்படி அகற்றுவேன்?”
“இரண்டு விஷயங்கள் உங்கள் கல்லறை வரை உங்களைப் பின்தொடரும்,” என்று பதிலளித்தேன். “உங்களால் யூகிக்க முடியுமா?”
“என் கர்மா?”
“மற்றும் கடன் கொடுத்தோர்,” என்று நான் நகைச்சுவைக்காகக் கூறினேன். “ஒன்று சுமையைக் கொண்டு வருகிறது, மற்றொன்று ஒரு பையைக் கொண்டு வருகிறது.” அவர் நடுக்கத்துடன் ஒரு சிரிப்பு சிரித்தார்.
“ஒன்று கடன், மற்றொன்று கடன்-வசூலிப்பவர்,” என்று கூறினேன்.

நமது சுமை நமது செலுத்தப்படாத கடனாகும்.

நமது வாழ்வில், நாம் அனைத்து வகையான மக்களையும் ஈர்க்கிறோம். அவர்களில் சிலர் கர்மாவிற்கு வரவு வைப்பவர்கள், அவர்களே கடன் வசூலிப்பவர்களின் பங்கை வகிக்கின்றனர். இப்படிச் சொல்வது, நம்முடைய கடந்த காலத்தைத் துடைக்க வழியே இல்லை என்று சொல்வதற்காக அல்ல.

அறியாமையினாலோ அல்லது அகந்தையினாலோ, நாம் அனைவரும் சொல்லியிருக்க அல்லது செய்திருக்கக் கூடாது என்று விரும்பிய விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம் அல்லது செய்து இருக்கிறோம். கெட்ட கர்மாவைச் செய்வது, ஒருவரை மோசமானவராக ஆக்குவது இல்லை. பெரும்பாலும், நல்லவர்கள் கெட்ட காரியங்களைச் செய்துவிடுகிறார்கள், மற்றும் ‘கெட்டவர்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் நிறைய நல்ல காரியங்களையும் செய்கிறார்கள். ஒரு மோசமான சிந்தனை அல்லது செயல்திறன், உங்களைத் தாழ்ந்தவராக ஆக்குவது இல்லை. மாறாக, எது நமது உணர்வைத் தாழ்ந்ததாகக் காண்பிக்கிறது என்றால், ஆம் நான் தான் குழப்பத்தை உருவாக்கிவிட்டேன், அதைப் பற்றி வருந்துகிறேன் என்று ஒப்புக் கொள்ளும் தைரியம் நமக்கு இல்லாதது தான்.

நமது தவறுகளை மறுத்தல் அல்லது ஒப்புக்கொள்ளாமல் இருத்தல் வேறு எதையும் விட அதிகமான பாரத்தை உருவாக்குகிறது. நமது தவறுகளை மனதார ஏற்றுக்கொண்ட உடனேயே, நம்முடைய அமைப்பு முறையிலிருந்து கோபத்தின் உணர்ச்சிகளை (அந்தச் சூழ்நிலையில் நான் ஏன் இருந்திருக்க வேண்டும்?) மற்றும் குற்றவுணர்வுகளை (ஏன் வேறுவிதமாக என்னால் செயல்பட முடியவில்லை?) வெளியேற்றுகிறோம். இத்தகைய சம்பவம் நீண்ட காலமாக இன்னும் கூட உங்கள் மனதில் பதிந்து இருக்கலாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனால் அது திரும்ப நினைவில் வரும்போது, இனிமேலும் உங்கள் அமைதியை அது அழிக்காது.

‘தி வெ ஆப் சூஆங் ட்ஸ்யூ’ வில், தாமஸ் மெர்ட்டன், ‘ப்ளைட் ஃப்ரம் ஷேடோ’ என்று அழைக்கப்படும் ஒரு அழகான கதையை மேற்கோள் காட்டுகிறார்:

ஒரு மனிதன் தனது சொந்த நிழலைப் பார்த்து மிகவும் பாதிப்படைந்து இருந்தார், தனது சொந்த அடிச்சுவடுகளால் மனவருத்தம் அடைந்து இருந்தார், இந்த இரண்டையும் அழித்துவிட உறுதி கொண்டார். அவர் எடுத்துக் கொண்ட முறையானது, அவற்றை விட்டு ஓடுவதாகும்.

அவர் எழுந்து ஓடினார். ஆனால் அவர் ஒவ்வொரு தடவையும் காலைக் கீழே வைக்கும்போதும் மற்றொரு அடியும் கூடவே இருந்தது. அதே நேரத்தில் அவருடைய நிழலும் எந்தவித சிரமமும் இன்றி அவருடன் கூடவே வந்தது.

அவர் போதுமான வேகத்தில் இயங்கவில்லை என்பதையே உண்மையில் அவரது தோல்விக்குக் காரணமாக வைத்தார். அவர் இன்னும் வேகவேகமாக நிறுத்தாமல் இறக்கும்வரை ஓடினார்.

ஒரு நிழல் பகுதிக்கு உள்ளே அவரது அடியை வைத்திருந்தால், அவருடைய நிழல் மறைந்துவிடும் என்பதை அவர் உணரத் தவறிவிட்டார். மேலும் அவர் உட்கார்ந்து இருந்திருந்தால், மற்றும் அசையாமல் இருந்திருந்தால், மேலும் அடிச்சுவடுகளே இல்லாமல் இருந்திருக்கும் என்பதையும் அவர் உணரத் தவறிவிட்டார்.

நம் கடந்த காலம் என்றோ, சுமை என்றோ, நமது நிழல் என்றோ அல்லது வேறு ஏதாவதாகவோ அழையுங்கள், உண்மை என்னவென்றால் நாம் செய்த செயல்களை நாம் உண்மையில் அழிக்க முடியாது. பேசப்பட்ட வார்த்தைகளையோ அல்லது செய்யத்தகாத செயல்களையோ திரும்பப் பெற முடியாது. நாம் மன்னிப்புக் கேட்க முடியும், வருந்த முடியும், இரக்கம் தெரிவிக்க முடியும் அல்லது காலப்போக்கில் குணமடைய மட்டுமே முடியும். நாம் எங்குச் சென்றாலும் நம்முடைய கடந்த காலமும் நம்முடன் பயணம் செய்கிறது என்பது தான் உண்மை. நாம் இருட்டில் இருக்கும்போது மட்டும் தான், நமது நிழல் அதைச் சுற்றியுள்ள இருளில் இணைகிறது. அத்தகைய இருளில், நம்மிடம் எந்தச் சுமையும் இல்லாதது போல் தற்காலிகமாக உணரலாம். ஆனால் இருட்டிலிருந்து நாம் விடுபடாததால், அது ஒரு மாயத் தோற்றமாகும். நாம் நம்மை ஒளியிடமிருந்து மறைத்துக் கொண்டு விட்டோம்.

நன்கு ஒளியூட்டப்பட்ட அறையிலும் மிகச் சிறிய அளவிலே இருந்தாலும், ஒரு இருண்ட மூலை உள்ளது. அவ்வாறே, மிகச் சிறப்பாக வாழ்ந்தவரின் இதயத்திலும் கூட ஏதோ ஒரு இருட்டு மறைக்கப்பட்டு உள்ளது. அதுவே நமது நிழல், நாம் அதை அகற்ற முடியாது மற்றும் நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஒளியுடன் உள்ளவர்களாதலால், நிழலை நம் இருப்பிலிருந்து பிரிக்க முடியாது. நம்முடைய நிழல் எவ்வளவு நீளமானது அல்லது இருண்டது என்பதைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அது எங்குள்ளது, நமக்கு முன்னாலா அல்லது பின்னாலா என்பதே முக்கியமாகும்.

உங்கள் நிழலில் இருந்து நிவாரணம் பெற ஒரு வழி, சூஆங் ட்ஸ்யூ கூறியுள்ளது போல், நிழலுக்குள் நுழைவதுதான். கிருபை என்னும் மரத்திற்கு அந்த நிழல் உள்ளது. அதே போல் உண்மை மற்றும் மன்னிப்பு என்ற மரங்களுக்கும் நிழல் உள்ளது. இந்த மரங்களின் நிழல் மெதுவாக அதன் அடியில் நிற்கும் நபரின் நிழலைக் கிரகித்துவிடுகிறது.

மற்றொரு வழி, மிகவும் ஈர்க்கக்கூடியது, இருட்டிலேயே இருந்து, அதற்குள்ளேயே வாழ்வது. இருளில் நீங்கள் நிழலைக் காணாதபோது, வேறு எதையுமே நீங்கள் காண மாட்டீர்கள்… அழகும் இல்லை, ஒளியும் இல்லை. நம்மைச் சுற்றி உள்ள ஆயிரக் கணக்கானவர்கள் அனைவரிடமிருந்தும் மற்றும் அனைத்திடமிருந்தும் தங்களை மறைத்துக் கொள்ளத் தேர்வு செய்கிறார்கள். பயம், சித்தப்பிரமை, குற்றவுணர்வு மற்றும் பிற உணர்வுகள் காரணமாக, அவர்கள் ஒரு நிழலைத் தவிர்ப்பதற்காக, வாழ்நாள் முழுவதையும் இருட்டில் கழிக்கிறார்கள். எனினும், ஞானமுள்ளவருக்கு என்ன செய்ய வேண்டுமென்று நன்றாகவே தெரியும்.

நம் நிழல் நமக்கு முன்னால் இருக்கும்போது தான் நமக்கு முன் இருக்கும் பாதை இருண்டதாகத் தோன்றும். ஒளி நமக்குப் பின்னால் இருக்கும்படியாக நாம் திரும்பும்போது தான் நம் நிழல் நமக்கு முன்னால் இருக்கும். நீங்கள் ஓளியை நோக்கிச் செல்லும் போது, உங்கள் நிழல் உங்களுக்குப் பின்னால் போய்விடும். அது உங்கள் பாதையை இனி இருளில் மறைக்காது.

இதுவே சுமையைக் கைவிடுவதற்கு நான் அறிந்த ஒரே முறையாகும்: நம்மிடமும், மற்றவர்களிடமும் நம்பிக்கை மற்றும் இரக்கத்துடன் நாம் ஒளியை நோக்கிப்பயணம் செய்ய வேண்டும். நமது நிழலை நமக்குப் பின்னால் தள்ளிவிட இதுவே ஒரே வழியாகும். கடந்த கால தவறுகளுக்காக உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள். கவலையற்று இருங்கள். இது உங்களுக்கு மிகவும் நல்லதைச் செய்யும், நீங்கள் மற்றவர்களுக்கு நல்லதைச் செய்வதற்கு உதவும், இது ஒன்றே எதிர் காலத்தில் எப்போதும் ஒரு நல்ல காரியமாக முடியும்.

நீங்கள் தொடர்ந்து நடந்தால் உங்கள் அடிச்சுவடுகள் உங்கள் பின்னாலேயே இருக்கும். நீங்கள் நின்று கவனித்து பிணங்கிக் கொண்டிருந்தால், சரியாக அதன் மேலேயே நின்று கொண்டு இருக்கிறீர்கள். புதிய ஹிமாலய பனி போல் நாம் துல்லியமாக இருப்பதைப் போன்று பாவனை செய்து கொண்டு, சில சமயங்களில், நாம் ஒவ்வொருவரும் மற்றவர் மேல் கற்களை எறிந்திருக்கிறோம். சில நேரங்களில், நாம் கல்லடி வாங்கியும் இருக்கிறோம். இறுதியில், நாம் அதைப் பின்னால் தள்ளி வைத்துவிட்டால் அது மிகப் பெரிய விஷயம் இல்லை.

இமாம் ஜமால் ரஹ்மான் எழுதிய ‘த காமிக் டீச்சிங்ஸ் ஆப் முல்லா நஸ்ருதீன்’ என்ற புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய நகைச்சுவையை நான் படித்தேன். இங்கே அது சற்றே திருத்தப்பட்டுள்ளது:

ஒரு தாய், அவளுடைய முரட்டுத்தனமான இளம் மகனை, அவனுடைய கலகத்தனமான வழிகளால் அவள் களைப்படைந்துவிட்டதாகப் புகார் கூறிக் கொண்டே, முல்லாவிடம் அழைத்துக் கொண்டு வந்தாள்.
“தயவுசெய்து, அவனது இதயத்தில் ஒரு சிறிய அச்சம் ஏற்படுமாறு ஏதாவது செய்யுங்கள்,” என்று சொன்னாள்.
“இப்போதே, ஒரே நொடியில் அவன் ஒரு பசுமாடு போல் சாந்தமாகிவிடுவான்,” என்று முல்லா நம்பிக்கையுடன் கூறினார்.

முல்லா அந்தச் சிறுவனின் கண்களில் கடுமையாகப் பார்த்து, அவன் தாய் சொல்வதைக் கேட்கும்படி கட்டளையிட்டார். முல்லா தன் முகத்தை மோசமாக முறுக்கி, ஆழமாக உறுமினார். அவரது முழு செய்கையும் மிகவும் பயங்கரமாக இருந்ததைக் கண்டு அந்தத் தாய் மயக்கமடைந்தார் மற்றும் முல்லாவும் அறையில் இருந்து விரைந்து வெளியேறினார். அவள் உணர்வைத் திரும்பப் பெற்றபோது, “என் மகனைத் தான் பயமுறுத்தச் சொன்னேன், என்னை அல்ல,” என்று அவள் முல்லாவைக் கடிந்து கொண்டாள்.
“அம்மா, நீங்கள் அச்சத்தைத் தூண்டினால், அது அனைவரையும் ஆட்கொள்கிறது. அதற்கு வேண்டாதவர் யாரும் இல்லை. ஏன், நானே மிகவும் பயந்துவிட்டதால், அறையை விட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது,” என்று முல்லா பதிலளித்தார்.

நமது நிழல், பயத்தைப் போல, தனிப்பட்ட பாரபட்சம் காட்டுவது இல்லை. நிழல் விழும் பொழுதெல்லாம் இயற்கையாகவே ஒரு அடர்ந்த இருள் தோன்றுகிறது. அதனால்தான், ஒளியை நோக்கி நடப்பதை நாமும் கடமையாகக் கொண்டு, மற்றவர்களையும் அதையே செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும். ஏனென்றால், நண்பகல் சூரியனைப் போல நாம் பிரகாசமாக இருக்கலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இருளில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களின் நிழல்கள் நம் பாதையில் விழும். ஒளியாக இருங்கள் மற்றும் ஒளியைப் பரப்புங்கள். உயர்ந்தலட்சியத்தின் பாதையில், நற்குணம் மற்றும் இரக்கம் ஆகியவற்றை நோக்கி நடப்பதே ஒளியில் நடப்பதாகும்.

உங்கள் இதயத்தின் வெளிச்சம் உங்களைச் சுற்றியுள்ள எல்லையற்ற ஒளியுடன் ஒன்றிணையட்டும். பின் இருட்டைப்பற்றிக் கவலை இல்லை. ஏதாவது இருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் அதிக ஆழம், நோக்கம் மற்றும் அர்த்தத்தை மட்டுமே தரும்.

தொடர்ந்து நடங்கள்… ஒளியை நோக்கி.

அக்டோபர் 2015 இல், என் வலைப்பதிவின் பதிவுகள் சேகரிக்கப்பட்டு, அதை உள் அடக்கிய ‘ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் லவ்’ (Fistful of Love) வெளியிடப்பட்டது. அநேக வாசகர்கள் தங்கள் படுக்கையறையில் அதை வைத்திருப்பதாகவும், ஒவ்வொரு இரவும் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களை வாசிப்பதாகவும் எழுதியிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ‘ஃபிஸ்ட்ஃபுல்’ (Fistful) தொடரில் அடுத்த புத்தக வடிவை அறிவிப்பதில் சந்தோஷம் அடைகிறேன்: அது ‘ஃபிஸ்ட்ஃபுல் ஆப் விஸ்டம்’ (Fistful of Wisdom) ஆகும். என் வலைப்பதிவில் இருந்து சுமார் ஐம்பது பதிவுகளைக் கொண்டது. நீங்கள் ‘ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் லவ்’ படித்த பிறகு கூட தூங்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், ‘ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் விஸ்டம்’ அதற்கு உதவலாம்! பொதுவாக, அன்பு எங்குத் தோல்வி அடைகிறதோ, அங்கு ஞானம் கண்டிப்பாக உதவுகிறது.

‘ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் விஸ்டம்’ (Fistful of Wisdom) என்ற புத்தகத்தினைப் பெற இணைப்புகள் இங்கே உள்ளன:
1. அமேசான்: இந்தியா.
2. அமேசான்: உலகின் பிற பகுதிகளுக்கு.

அமைதி
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email