அறநெறியைப் பற்றிய கேள்விகளை என்னிடம் அடிக்கடி கேட்கிறார்கள். மக்கள் இது சரியா அல்லது அது தவறா, அது நல்லதா அல்லது இது கெட்டதா என்றும் சில குறிப்பிட்ட செயல்கள் தார்மீகமானதா மற்றவை முறைகேடானதா என்றும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். எது நல்லது மற்றும் எது மோசமானது? நான் உங்களிடம் கேட்கிறேன் – தார்மீகமானது அல்லது முறைகேடானது என்று எப்படி நாம் வித்தியாசப்படுத்துகிறோம்? இது போன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் பெரும்பாலும் அறநெறியைப் பற்றிய வலுவான கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். இது மோசமானதல்ல. அவர்கள் அதைப்பற்றி மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது அவர்களின் கருத்துக்கள் ஆனாலும், பெரும்பாலும் அவர்களுடைய சொந்த கருத்துக்களாக இருப்பதில்லை. இந்தச் சித்தாந்தங்கள் அவர்களுக்கு மற்றவர்களிடமிருந்து கொடுக்கப்பட்டவையாகும். ஒருவர் கண்டுபிடித்ததை பின்னால் வந்த ஒவ்வொரு தலைமுறையும் நம்ப முனைகின்றது.

நீங்கள் பிரதிபலிக்க ஒரு கணம் எடுத்துக் கொண்டால், உங்கள் அறநெறி மட்டும் நிபந்தனைக்கு உட்பட்டது அல்ல, அது நிபந்தனைகளுடன் கூடியதும் ஆகும் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கென்று கொள்கைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் தார்மீக முடிவுகள் சுதந்திரமானவை, பகுத்தறிவானவை மற்றும் இயற்கையில் பூரணத்துவமானவை என்று அர்த்தம் இல்லை. நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் மற்றும் நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்களது அமைப்பில் உங்களுக்குத் தார்மீகமாக இருக்கும் சில செயல்கள், மற்றவர்களுக்கு முறைகேடானதாக இருக்கலாம். 1967 ஆம் ஆண்டில், பிலிபா பூட்டே என்பவரால் முதலில் உருவாக்கப்பட்ட ஒரு சுவாரசியமான நெறிமுறையைப் பற்றிய சிந்தனைச் சோதனையைப் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதியுங்கள். அது பின்வருமாறு:

இரண்டு இரயில் தடங்கள் உள்ளதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஐந்து பேர் ஒரு தடத்திலும், ஒரே ஒருவர் இன்னொரு தடத்திலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களது கட்டுகளை அவிழ்க்க நேரம் இல்லை. ஒரு இரயில் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அது போய்க் கொண்டிருக்கும் தடத்திலேயே சென்றால், அந்த ஐந்து பேர் மேலும் ஏறிவிடும். நீங்கள் இரயிலின் திசையைத் திருப்பும் அந்த நெம்புகோலின் அருகில் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை இழுத்தால் இரயில் மறு பாதையில் திருப்பிவிடப்பட்டு, அந்த ஐந்து பேரும் காப்பாற்றப்படுவர். எனினும், உங்களது இந்த நடவடிக்கையால் ஒரு நபருக்கு மரணம் ஏற்படும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் ஐந்து பேரை இறக்கவிட்டு விடுவீர்களா அல்லது ஐந்து பேரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்வீர்களா? அந்த ஒரு நபர் உங்களுக்கு நெருக்கமான உறவினரானால் என்ன செய்வீர்கள்? இதற்குமேலும், இந்தச் சோதனையில் பின்வரும் மாறுபட்ட கருத்துக்களைப் பார்க்கலாம்:

மாறுபட்ட கருத்து ஒன்று

தள்ளுவண்டி ஒன்று ஐந்து பேரை நோக்கி கீழ் நோக்கிச் செல்லும் பாதையில் வேகமாக உருண்டோடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் பாலத்தின் கீழ் தான் அது கடந்து செல்லும். அப்போது அதன் முன்னால் எடைகனமான ஏதாவது ஒன்றைப் போட்டால் நீங்கள் அதைத் தடுத்து நிறுத்த முடியும். அது நடக்கும் போது உங்களுக்கு அருகில் ஒரு மிகப் பருமனான மனிதன் இருக்கிறான். அந்தத் தள்ளுவண்டியை நிறுத்தி, அந்த ஐந்து பேரைக் காப்பாற்ற உங்களிடம் உள்ள ஒரே வழி பாலத்தின் மேலிருந்து அவரை அந்தப் பாதையின் மீது தள்ளி கொலை செய்வதே ஆகும். நீங்கள் அதைச் செய்ய முனைவீர்களா?

மாறுபட்ட கருத்து இரண்டு

ஒரு புத்திசாலியான உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம், ஐந்து நோயாளிகள், வெவ்வேறு உறுப்புக்களின் தேவையில், அந்தந்த உறுப்பு இல்லாவிடில் இறந்துவிடும் நிலையில் இருந்தனர். துரதிருஷ்டவசமாக, இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்யத் தேவையான உறுப்புகள் எதுவும் இல்லை. அந்த மருத்துவர் வேலை செய்யும் நகரின் வழியாகச் செல்லும் ஒரு ஆரோக்கியமான இளம் பயணி, ஒரு வழக்கமான சோதனை செய்துகொள்ள உள்ளே வருகிறார். அவரைப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, அந்த அறுவை சிகிச்சை நிபுணர் இறக்கப் போகும் அந்த ஐந்து நோயாளிகளுக்கும் வந்தவரின் உறுப்புகள் இணக்கமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கிறார். அவர் சிகிச்சையை ஆரம்பித்து ஆரோக்கியமான நோயாளியின் உயிரைத் தியாகம் செய்து மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டுமா?

அனைத்து வேறுபாடுகளிலும், ஐந்து பேரைக் காப்பாற்ற ஒருவரைத் தியாகம் செய்ய வேண்டி உள்ளது. தார்மீக சிக்கல்கள் நேரடியாக இருப்பதில்லை. அச்சிடப்பட்ட வார்த்தைகள் வெள்ளையில் கருப்பாக உள்ளன. ஆனால் வாழ்க்கை அவ்வாறு கருப்பு-வெள்ளையாக இருப்பதில்லை. உண்மையில் எது சரி, எது தவறு, எது நல்லது, எது கெட்டது என்று சொல்ல உங்களுக்கு எந்த மதமோ, வேறு எவருமோ தேவையில்லை. ஏனெனில் அவர்கள் பூரணத்துவமான வகையில் பேசுவர். ஆனால் வாழ்க்கையில் முழுமையானது என்று எதுவும் இல்லை. பூரணத்துவமான, சரி, தவறுகளில் சிக்கிக் கொண்டால் நீங்கள் அதிக குற்றஉணர்வில் தவிக்கும்படி ஆகிவிடும். உங்களை சுதந்திரமாக்கிக் கொள்ளுங்கள். விதிகள் இருப்பதால் எந்த வகையிலும் அதை உடைத்துக் கொண்டு போக நான் சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு நீங்களே ஏற்கனவே திணித்துக் கொண்ட விதிகளை ஆய்வு செய்யுங்கள் என்று அறிவுறுத்துகிறேன். இரக்கமுள்ள பாதை பெரும்பாலும் மதிப்பு வாய்ந்ததாகும்.

உங்கள் வாழ்க்கையின் ஒரு கடினமான பாதையின் வழியாக நீங்கள் சென்று கொண்டிருப்பதைக் கண்டறியும்போது, உங்களது உள்குரலைக் கேளுங்கள். ப்யோடர் டோஸ்டோயேவ்ஸ்கி என்பவரின் வார்த்தைகளில்: இப்போது மிக முக்கியமான விஷயம் மூளை அல்ல. ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுபவை — அவர்களது குணம், மனம், தாராள குணங்கள், முற்போக்கான கருத்துக்கள் ஆகும். மூளை ஒரு கணக்குப் போடும் இயந்திரமாகும். அது எந்தச் செயலாக இருந்தாலும், அதை நியாயப்படுத்தும் திறன் அதனிடம் உள்ளது. இறுதியில், உங்களது குணமே உங்களுடைய சொந்தக் கொள்கைகளில் விடாப்பிடியாக நிற்க பலத்தைக் கொடுக்கிறது. நிபந்தனைக்கு உட்பட்ட அறநெறி ஒரு கணக்கீடு சார்ந்த கூற்றாகும் — நீங்கள் இதைச் செய்தால் பிறகு இவ்வாறு நடக்கும், அதன் காரணமாக இது நல்லது, இதன் காரணமாக அது மோசமானது என்பது போன்ற இன்னும் பலபல. மாறாக, நிபந்தனை அற்ற அறநெறி என்பது ஒரு அசல் செயலாகும்; கணக்கீடுகள் அற்ற, உங்களது சொந்த அளவுகோலுக்கு ஏற்ப தார்மீகமாகவோ அல்லது மாறாகவோ சாதாரணமாக வாழ்வதாகும். மேலும் நிபந்தனையற்ற அறநெறி என்பது யாது? பெரும்பாலும் அது ஒரு தவறான சொல் வழக்காகும்.

நீங்கள் நீங்களாக இருக்கத் தயங்க வேண்டாம். உங்களுக்குச் சொந்தமான அளவுகோலை அமைத்துக் கொள்ளுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email