நீங்கள் ‘வேகத்தைக் குறைக்கும் போது தான் பல விஷயங்களைக் காண முடியும்’ (The Things You Can See Only When You Slow Down) என்ற படைப்பில், தென் கொரியாவின் சிறந்த ஜென் (Zen) ஆசிரியரான ஹேமின் சுன்னிம் தனது வாழ்க்கையில் இருந்து ஒரு சிறந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்:

என் இருபதுகளில், என் மடாலயத்திலிருந்து நெருங்கிய நண்பருடன் ஐரோப்பாவிற்கு இரண்டு வாரகாலம் பயணம் சென்றேன். நாங்கள் ரோம் விமான நிலையத்தை வந்து அடைந்த போது அதிக உற்சாகத்துடன் இருந்தோம். நாங்கள் இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் அறிந்திருந்தோம் மற்றும் மிக நல்ல விதமாகச் சேர்ந்திருந்தோம். எனக்கு அவரது நகைச்சுவை உணர்ச்சி மற்றும் இதமான தன்மை பிடித்திருந்தது, அவர் எனது துணிச்சலான தன்மை மற்றும் நம்பிக்கையைப் பாராட்டினார். அவர் ஆங்கிலத்தில் அதிகம் பேசாததால், அவருடன் இணைந்தே இருக்கவேண்டி உள்ளதாக நான் உணர்ந்தேன். முதல் ஏழு நாட்களும் ஒவ்வொரு நிமிடமும் சேர்ந்தே செலவழித்த பிறகு, பேசுவதற்கு இனி எந்த விஷயமும் இல்லை என்று ஆனபோது, இருவரும் எரிச்சல் அடைந்தோம். எங்கள் நட்பில் எந்தவொரு உறுதியான சிக்கலும் இல்லை; அவரவர்க்கென்று தனியாக சிறிது நேரம் தேவை என்று ஏங்கினோம். அதனால் அடுத்த நாள் காலை நாம் வேறு வேறு வழியில் சென்றுவிட்டு இரவு நேரத்தில் விடுதியில் சந்திக்கலாம் என்று சொன்னேன். என் நண்பர் என் ஆலோசனையை வரவேற்றார்.

நான் அந்த விடுதியை விட்டு வெளியே வந்தேன், நான் சுதந்திரமாக உணர்ந்தேன் – இன்று நான் விரும்பியதைச் செய்ய என்னால் தேர்வு செய்ய முடியும் என்று தெரிந்து கொண்டேன்; முதலில் எங்குச் செல்ல வேண்டும், அடுத்தது என்ன பார்க்க வேண்டும் என்று என் நண்பருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. காலை மதியமாக மாறியபோது, ஒரு நண்பருடன் பயணிப்பதில் என்ன நன்மைகள் உள்ளன என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. நான் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தபோது என் பைகளைக் கண்காணித்துக் கொள்ள என் நண்பரைச் சார்ந்திருக்க முடியாது. தனியாக உட்கார்ந்து சாப்பிடுவதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை; அனுபவிப்பது மற்றும் ஓய்வு எடுப்பது போல் இல்லாமல் ஒரு வேலையைச் செய்வதைப் போல் உணர்ந்தேன். அன்று முழுவதும் நான் என்னுடைய எந்தப் புகைப்படத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் அந்நியர்களைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. ஒரு அழகான கலைப்படைப்பைப் பார்த்தபோது, என்னுடைய உற்சாகத்தைப் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை என்பதால் எனக்குச் சுவாரசியமாக இல்லை. அந்த நாளின் முடிவில், எங்கள் விடுதிக்கு வந்தபோது, என் நண்பனைப் பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இரவு உணவின் போது அன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றிப் பேச எங்களுக்குப் பல புதிய விஷயங்கள் இருந்தன.

இந்த அனுபவத்திலிருந்து, ஒரு நல்ல உறவைப் பராமரிக்கும் கலையை ஒரு கணப்பு அடுப்பிடம் அமர்ந்து இருப்பதற்கு ஒப்பிடலாம் என்று உணர்ந்தேன். அதன் அருகில் அதிக நேரம் அமர்ந்திருந்தால் நாம் மிகச் சூடாகவும், நெருப்பு சுட்டது போலவும் ஆகிவிடுவோம். மிகத் தொலைவில் அமர்ந்தால், நாம் வெப்பத்தை உணர முடியாது. இதேபோல், யாரோ ஒருவருடன் எவ்வளவு நன்றாகச் சேர்ந்து இருந்தாலும் சரி, அவரவர்க்கான தனிமையைக் கொடுக்காமல் அதிகமாகச் சார்ந்திருந்தால், வெகு விரைவில் சிக்கிக் கொண்டதைப் போல், எரிந்து போவதைப் போல் உணர்வோம். உறவை இப்படித்தான் என்று எளிதாக நாம் எடுத்துக்கொள்வதால், போதுமான தனிமை மற்றும் சுயாதீனம் இல்லாமையால் நாம் அதிருப்தி கொள்கிறோம். மறுபுறம், நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தொடர்பில் இருப்பதற்கு மிகச் சிறிய முயற்சி கூட எடுக்காவிடில், அவர்களது அன்பின் இதமான உணர்வை நாம் உணர முடியாது. ஒரு சமநிலையைக் கடைப்பிடிப்பதே முக்கியமாகும்.

ஒரு நல்ல உறவைப் பராமரிக்கும் கலையானது, ஒரு கணப்படுப்பிடம் அமர்ந்து இருப்பதுடன் ஒப்பிடத்தக்கது.

சுன்னிம்மின் விவரிப்பில் நான் கண்ட மற்றொரு அழகான விஷயம் வேலை (chore) என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியது. பெரும்பாலான திருமணங்கள் முறிவடைவதற்குக் காரணம், இருவரும் வாழ்க்கையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்வதும், அதிகத் திட்டமிடுவதும் தான். கிட்டத்தட்ட, செய்யும் அனைத்தும் வேலை என்று ஆகிவிடுகிறது. இத்தகைய உறவுகளில், பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை மட்டுமே நம்மிடம் விட்டு விட்டு, நட்பு விலகி ஓடி விடுகிறது. எது நிறைவாக உள்ளது என்பதிலிருந்து மற்றவர் உங்களுக்கு என்ன செய்யவில்லை என்பதில் உங்களது கவனம் தாவி விடுகிறது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக அதிருப்தியை அனுபவித்தால், அதுவே நீங்கள் சோர்வடைந்தும் அலுத்துப்போயும் இருக்கிறீர்கள் என்பதின் உன்னதமான அடையாளம் ஆகும்.

பெரும்பாலும், அநேக தம்பதிகள் இப்போது அன்பாக உணரவில்லை என்றால் இனி எப்போதுமே அன்பாக உணர மாட்டோம் என்று நினைக்கிறார்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் என் முந்தைய இடுகை ஒன்றில் அன்பு இல்லாமல் போவதை, அழுகிப் போகும் ஆப்பிளுக்கு ஒப்பிட்டு இருந்தேன். உண்மை என்னவென்றால், ஒரு உறவு நல்ல விதமாக இருக்க விரும்பினால், நீங்கள் ஒருவருக்கொருவர் கொஞ்சம் சுதந்திரமாக இருக்க இடம் அளிக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள், கவலைகள் மற்றும் அச்சங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு குறிப்பிட்ட அளவிலான முதிர்வுடன் இருக்க வேண்டும். தொடர்பிற்கான அவசியம் மற்றும் இயல்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே ஒரு பெரும் வேறுபாடு உள்ளது. நான் முன்கூட்டியே தீர்மானம் செய்த கருத்தாகக் கூற விரும்பவில்லை, ஆனால் ஆண்களும் பெண்களும் வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தவும், எதிர்பார்க்கவும் செய்கிறார்கள். இது அவர்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட உயிரியல் ஆகும். எனவே, அனைத்து நல்ல எண்ணங்களுடன், பெரும்பாலான மக்கள் எத்தனைத் திருமணங்கள் அல்லது கூடி வாழ்தலில் ஈடுபட்டாலும், தங்கள் உறவுகளில் மகிழ்ச்சியற்றுத் தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். இதற்குச் சரியான ஒரே வழி, மற்ற நபரை அவர்கள் விரும்புவதைப் போல் (நீங்கள் விரும்புவதைப் போல் அல்ல!) நடத்துவதாகும்.

இங்கு தான் ஆன்மீகப் போதனைகள் உண்மையிலேயே ஒருவருக்கு உதவக்கூடியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, ஓரளவு பற்றின்மையுடன் அன்புடனான- இரக்கத்தை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. ஒரு எதார்த்தமான வாழ்க்கையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வாழ்வது, மற்ற நபரை நீங்கள் விரும்பும் விதமாக மாற்றியமைப்பதை விட மிகச் சிறந்தது என்பதைப் புரிந்துகொள்வது. சுதந்திரத்தை விட அழகானது வேறு எதுவும் இல்லை. நீங்கள் யாராக இருந்தாலும், ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, நாயோ அல்லது ஒரு பறவையோ, நாம் அனைவரும் விரும்புவது பாதுகாப்பு, அன்பு, ஓய்வு மற்றும் பல. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் தேடுகின்றது சுதந்திரம் ஆகும். அன்பைப் பற்றிக் கேட்ட போது, நான் கேள்விப்படுவதெல்லாம், நீங்கள் நீங்களாகவே இருக்கமுடிவது, தாராளமாகத் தன்னை வெளிப்படுத்த முடியுமென்பது, இப்படிப் பல. இதுவே சுதந்திரம் இல்லையா?

அன்பின் உணர்வை வேறுவிதமாகக் கூறினால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பும் ஒருவரின் துணையுடன் வாழ்ந்து கொண்டே, நீங்கள் விரும்பும் ஒரு சுதந்திரத்தை நடைமுறைப் படுத்த முடிகின்ற பாக்கியமே அது. இதுவே மிகவும் உயர்ந்த சுதந்திரம் ஆகும், நீங்கள் விரும்புகின்ற மற்ற நபரையும் இதே போல் அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகும். அவர்களது சுதந்திரத்தை நீங்கள் வரையறுக்க முயலாதீர்கள், அவர்களும் உங்களுடைய சுதந்திரத்தை விளக்க முற்பட வேண்டாம். அவர்கள் வெள்ளை நிறச் சாக்லேட்டை விரும்பினால், அவர்கள் கருப்பு நிறச் சாக்லேட்டை விரும்ப வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது.

ஒரு உறவை உருவாக்குவது என்பது குறுக்கு-தையல் போன்றது. நீங்கள் விரும்பும் விதமாக அதன் வடிவத்தை, எவ்வளவு சிக்கலானதாகவும் ஆக்கலாம், அல்லது சாதாரணமானதாகவும் உருவாக்கலாம். இரண்டு விதத்திலும், ஒரு அழகிய வடிவத்தை உருவாக்க அல்லது விரும்பிய மாதிரியை உருவாக்க, நீங்கள் கவனத்தையும் நேரத்தையும் செலவழித்தே ஆக வேண்டும், ஓரளவு திறமையும் தேவை. அதற்கான முக்கியத் தேவை ஆசை ஆகும். பாதி நேரம், மக்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்றே தெரியாது. அதிலும் மிகப் பெரிய மனித முட்டாள்தனம் என்னவென்றால், நான் விரும்புவதை அடைந்துவிட்டால், அது என்னை மகிழ்ச்சியாக ஆக்கும் என்று நம்புவது.

நான் ஒரு முறை லீ ரோஸ்டன் என்பவரின் ஜோக் ஒன்றை வாசித்தேன். அதை முல்லா நஸூருதீனுக்குத் தகுந்தாற் போல் நான் இங்கு அளிக்கிறேன்…

“நான் நிச்சயமாக விரும்புகிறேன், ஒரு நல்ல உயரமான ஒட்டகச் சிவிங்கியை வாங்கப் போதுமான பணம் என்னிடம் இருந்தால் நன்றாக இருக்கும்,” என்றார் முல்லா தனது நண்பரிடம்.
“ஒரு ஒட்டகச் சிவிங்கி? ஒட்டகச் சிவிங்கி என்றால் என்ன?” என்று அவருடைய நண்பர் அதிர்ச்சியடைந்தார்.
“உனக்குத் தெரியும், உடல் முழுவதும் புள்ளிகளுடன், பெரிய முழங்கால்கள், உயர்ந்த கழுத்து, இருபது அடி உயரம் கொண்ட ஒரு பிராணி.”
“ஓ, அது … ஆனால் ஏன்?”
“ஏன் என்ன?”
“நீ ஏன் ஒரு ஒட்டகச்சிவிங்கி வேண்டும் என்று விரும்புகிறாய்?”
“நான் ஒரு ஒட்டகச்சிவிங்கி வேண்டும் என்று ஒருபோதும் கூறவில்லை, ஒரு ஒட்டகச்சிவிங்கி வாங்குவதற்குப் போதுமான பணம் வேண்டும் என்று தான் நான் விரும்பினேன்,” என்றார் முல்லா எரிச்சலுடன்.

ஒரு உறவில் கூட நல்லதற்கோ அல்லது கெட்டதற்கோ, மற்ற நபர் கூறுகின்ற அனைத்துமே, அவர்கள் அவ்வாறே நினைக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு விருப்பமும் நிறைவேற வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்ப்பதில்லை. சில நேரங்களில், நாம் பகிர்ந்துகொள்கிறோம், சிந்திக்கிறோம், சத்தமாகக் கூறி யோசித்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான மக்கள் அவர்களது துணை வெளியே சென்று நட்சத்திரங்கள் மற்றும் நிலவை அவர்களுக்காகப் பறிக்க வேண்டும் என்று காத்திருப்பது இல்லை. நீங்கள் அவர்களுக்குக் கவனம் கொடுத்துக் கேட்க வேண்டும் என்றும், அவர்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்றும், உங்கள் வாழ்க்கையில் அவர்கள் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். ஓ, மீண்டும் அதே விருப்பங்கள்…

சுன்னிம்மின் அறிவுரைகளை மனதில் உள் வாங்கிக் கொள்ள முயற்சிக்கவும், அது தோல்வியுற்றால், பிங்காலாவின் கண்டுபிடிப்பை நினைவில் கொண்டுவரலாம் (எனது முந்தைய இடுகையில் கூறப்பட்டுள்ளது). அதுவும் வேலை செய்யவில்லை என்றால், நான் வேறு என்ன சொல்ல முடியும், ஒருவேளை இப்படிச் சொல்லலாம்: மனிதக் குலத்திற்கு வரவேற்கிறேன், ஓ உலகியல் வாழ்வில் பற்று மிக்கவரே!

புகார் செய்ய வழிகளைத் தேடாதீர்கள், அவை இயல்பாகவே நமக்கு வந்துவிடுகிறது. நன்றியுள்ளவராக இருக்க வழிகளைப் பாருங்கள். உங்களுடனோ அல்லது வேறு யாருடனோ, உங்கள் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். போய், ஒரு நல்ல வாழ்க்கையைப் பெறுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email