கிழக்கத்திய சிந்தனைகளை விவரிக்கும் ஆன்மீக மற்றும் மத நூல்களில் சரணடைதல் மற்றும் கீழ்ப்படிதல் பற்றியதான குரு-சிஷ்யர் கதைகள் நிறைய உள்ளன. ஆசிரமம் வருபவர்கள் மற்றும் எனக்கு எழுதும் பலர், ஒருவரின் பாதையில் ஒரு குருவின் பங்கு பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். சரணடைவது அவசியமா என்று அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள். மேலும், நிறையப் பேர் எந்த ஒரு குருவிடமும் பூரண சரணாகதி அடையும் முயற்சியில் தங்களுக்குப் பிரச்சனைகள் இருப்பதாக ஏற்றுக் கொள்கிறார்கள். முன்பு எழுதிய சரணாகதியைப் பற்றிய எனது பதிப்பின் தொடர்ச்சியாக, எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சரியான குருவின் முக்கியத்துவத்தைப் பற்றி பல்வேறு நூல்களில் ஆயிரக்கணக்கான மேற்கோள்கள் உள்ளன. இது உண்மையிலேயே மிக முக்கியமானதா? பதில் என்னவென்றால் அது உங்களின் தேவையைப் பொறுத்ததாகும். உங்களுக்கு வேதம் மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் சரியான ஓர் பாதையைச் சுட்டிக் காட்ட ஒரு ஆசிரியர் தான் தேவை என்றால், அத்தகைய மக்களுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. எனினும், எவருடைய முன்னிலையில் நீங்கள் பத்திரமாக உணர்தல், பாதுகாப்பு, அன்பு, அமைதி இவற்றை உணர முடிகிறதோ, சிறிதளவாவது நேரடி அனுபவத்தை நிரூபிக்க முடிந்த அப்படி ஒருவர் தேவை என்றால், உங்களுக்குச் சிறிதளவும் தேர்வுக்கு வழியில்லை.

குரு-சிஷ்யர் உறவு அறிவிற்குப் புலப்படாத காலத்திலிருந்து இருந்து வருகிறது. துரதிருஷ்டவசமாக, இன்றைய காலத்தில் ஆய்வை விடச் சுரண்டலையே நான் பார்க்கிறேன். பெரும்பாலான இன்றைய குருக்கள் உலகியல் திட்டங்களில் மும்முரமாக இருக்கிறார்கள், அவர்களது பொருட்களை விற்கிறார்கள், இலாபத்திற்காக நடக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிதி அளிக்கிறார்கள், அவர்களால் முடிந்த எல்லா இடங்களிலும் ஆசிரமங்கள் கட்டுகிறார்கள், அவர்கள் பணத்தைப் பதுக்கி வைக்கிறார்கள், இலாபங்களைத் திரட்டுகிறார்கள், எவ்வளவு நெருக்கமாக உங்களால் அவர்களுடன் இருக்க முடியும் என்பது, எவ்வளவு பணம் உங்களால் அவர்களுக்கு வழங்க முடியும் என்பதைப் பொறுத்ததாகும். இது போன்ற கொள்ளையை, சீர்குலைவைப் பார்க்க எனது இதயம் வலிக்கிறது. இதில் ஏதாவது தவறு இருக்கிறதா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

தன்னைத் தானை கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒருவர், உங்களை ஆராயாமல் உங்களுக்குப் புனித அறிமுகத் தீட்சை கொடுப்பவர், உங்களால் என்னவெல்லாம் வழங்க முடியும் என்பதிலேயே ஆர்வம் உள்ளவர், உங்களைத் தகுதியற்றவராக உணரவைப்பவர், உங்களது அச்சத்தைப் பணமாக்குபவர் யாரோ, அந்த நபரை உதறித் தள்ளுங்கள் என்று நான் கூறுவேன். அவர் ஒரு செம்மறியாட்டின் போர்வையில் உள்ள ஓநாய் போன்றவர், துறவியின் ஆடையில் உள்ள ஒரு பாவி. எப்போதும் கேள்விகளைக் கேட்கத் தயங்க வேண்டாம். அந்த குரு உங்களிடம் கோபம் கொண்டால், அவர் எப்படி உங்களுக்கு நித்திய அமைதியைப் போதிக்க முடியும்? அவருக்குப் பொருட்களின் மேல் பற்றுதல் இருந்தால், அவர் பற்றின்மையைக் கற்பிக்கச் சரியானவரா? தேடுதலில் உள்ளவரைப் போல் எதிர்மறை உணர்வுகளான கோபம், பொறாமை, வெறுப்பு இவை பெருகி உள்ளவர் என்றால், அவர் அவற்றுக்கு மேலே உயரும் நிலைக்கு எப்படி உங்களைக் கொண்டு செல்ல முடியும்?

சரணடைதலைச் செய்ய ஆரம்பிக்கும் முன் அல்லது யாரையாவது உங்களுடைய ஆன்மீக ஆசானாக ஏற்றுக் கொள்ளும் முன் நிறைய நேரம் எடுத்து மதிப்பீடு செய்யுங்கள். புத்தரின் ஆன்மீக ஆசான் யார்? மகாவீரரின் ஆசான் யார்? எடுத்துக்காட்டாகப் புத்தர், தியானம், தந்திரம், யோகா மற்றும் துறவறம் ஆகியவற்றைப் பல ஆசிரியர்களிடம், குறிப்பாக அலாரா கலாமாவின் கீழ் படித்தும், பயிற்சி செய்தும் வந்தார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும், அவரது சொந்த உணர்தலானது மிகுந்த மன உறுதியுடன் தனது சொந்த பாதையைக் கடைப்பிடித்ததால் அவருக்குக் கிடைத்தது.

ஒரு குருவைத் தேடி நீங்கள் போக வேண்டாம். உங்களது சொந்தப் பாதையிலேயே, அமைதி மற்றும் அன்பு, கருணை மற்றும் மனநிறைவைப் பயிற்சி செய்து கொண்டு உண்மையாக இருங்கள். நீங்கள் அதைச் செய்யும் போது, எங்கிருந்தோ ஒரு சரியான குரு தன்னை வெளிப் படுத்திக் கொள்வார். திருவருள் அதை ஏற்பாடு செய்கிறது. என் வார்த்தையை நம்புங்கள். அப்படியானால் சரணடைவது தேவையா? உங்களால் சரணடைய முடியவில்லை என்றால் என்ன செய்வது? மேலே படிக்கவும்.

உண்மை என்னவென்றால், அது உள்ளபடியே உங்கள் கைகளில் இல்லை. உறைந்திருக்கும் வெண்ணெய்க்குத் தீயின் முன் என்ன வாய்ப்பு உள்ளது? உண்மையான தீயாக இருந்தால், வெண்ணெய் தானாகவே உருகி விடும். ஒரு சரியான குரு, உண்மை என்ற தீயைக் கொண்ட இதயத்துடன், கதகதப்பான, கருணையே உருவான தன்மையுடன், தவத்தின் வெப்பம், அவரது நேரடி அறிவு இவற்றால் உங்களை நொடியில் உருகச் செய்து விடுவார். உங்களுக்குத் தேர்வுக்கே வழியில்லாமல் செய்து விடுவார். சரணடைவது ஒருபுறம் இருக்கட்டும், நீங்கள் அவருக்காக எதையும் செய்யத் தயாரான நிலையில் இருப்பதைக் காணலாம். அவரால், உங்களது வாழ்வை ஒரு காரணத்திற்கு அர்ப்பணிக்கத் தூண்டுதல் அளிக்க முடியும், அவரது முன்னிலையில் உங்களது உள்ளத்தை வெற்றிடமாக்கி உங்களை நிரம்பி வழிவதற்குத் தயார் செய்ய முடியும். அவரால் உங்களை வடிவமைப்பதற்குத் தக்கபடி மென்மையாக்க முடியும், உங்களை உருமாற்ற முடியும். தனது ஒரே பார்வையில், உங்களுக்குள் அடைந்திருக்கும் எதிர்மறை எண்ணங்கள், கடும் துயர் மற்றும் வேதனைகளைக் கழுவித் தள்ள முடியும்.

குருவிற்கு உரிய மரியாதையைக் காட்டும் படி வேத நூல்கள் ஏன் கூறுகின்றன? அவருக்கு முன் நமஸ்கரிக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கப்படுகிறது? இரண்டு கண்ணாடித் தம்ளர்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள், ஒன்றில் தண்ணீர் நிறைந்தும், மற்றது காலியாகவும் உள்ளது. முழுமையானதிலிருந்து காலியாக உள்ளதில் தண்ணீரை மாற்ற வேண்டும் என்றால், முழுமையானது மேலேயும், காலியானது ஒரு படி கீழேயும் வந்தால் தான் உள்ளிருப்பதை மாற்ற முடியும். இமயமலையில் வாழ்ந்த போது, சில நேரங்களில் கிராமவாசிகள் தங்கள் தலையில் கனமான மரக் கட்டுகளைச் சுமந்து கொண்டு செல்வர். அவர்கள் நமது கலாச்சாரப்படி, பொருத்தமான முறையில் வணக்கம் செய்ய விரும்பினர். ஆனால், அவர்களது தலையின் மேல் இருந்த பாரத்தால் அவர்களால் கீழே குனிய முடியவில்லை.

இதேபோல், நிறைய மக்கள் மிகப் பெரிய சுமையை அவர்களுடைய தலை மீது சுமந்து கொண்டிருக்கிறார்கள். அடையாளங்களின் சுமைகள், ஆணவம், அடைந்த புகழ், புத்தக அறிவு, பட்டங்கள் போன்றவை. இத்தகைய சுமைகளால் அவர்களுக்குக் குனிவது கடினமாக இருக்கிறது, அது சரணடைவதிலிருந்து அவர்களை நிறுத்தி விடுகிறது. சரியான குரு, எந்தப் போதனையுமே இல்லாமல் உங்களுடைய ஆணவத்தின் பெரும் பகுதியை அழித்துவிடுகிறார். எனவே நீங்கள் சரணடைய வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு வெற்றுக் கேள்வியாகும், வீணான ஒன்றாகும். கேள்வி என்னவென்றால்: உங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் தயாரா? நீங்கள் உங்களுடனேயே மகிழ்ச்சியாக இருந்தால், குரு-சீடர் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை! உங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் உழைக்க வேண்டும் என்று உணர்ந்தால், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதிருந்தால், நீங்கள் உற்றுப் பார்க்கும் ஒருவரிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும்.

ஒரு ஆழமான காயத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை யாரோ சுத்தம் செய்து மருந்திடும் போது சிறிதளவு வலிக்கத்தான் செய்யும். அது சரியாகும் முன் சிறிது அரிக்கும் பின்னர் அது முற்றிலும் மறையும் முன் சிறிது காலம் வரை ஒரு சிறிய வடு இருக்கலாம். கட்டுப் போடுபவர் மருத்துவத் தொழில்முறையில் தேர்ந்தவராக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்! இதேபோல், உங்கள் ஆணவம், உங்கள் குறைபாடுகள் ஆகியவற்றைச் சரி செய்யச் சரியான குருவை அனுமதிக்கும் போது, சிறிதளவு காயம் ஏற்படத் தான் போகிறது ஆனால் இறுதியில் அது காயத்தை ஆற்றிவிடும்.

சிறிது நாட்களுக்கு முன் ‘சாதனாவின் நான்கு தூண்கள்’, ஆன்மீகப் பயிற்சி பற்றி எழுதியிருந்தேன். அது சுருக்கமாகக் குருவின் பங்கு பற்றிய அடிப்படையைக் கூறுகிறது. அதை நீங்கள் இங்கே  படிக்க முடியும்.

சரணடைவதற்கு ஆணவத்தை ஒதுக்கி வைப்பது அவசியம், அதற்கு பலம் தேவைப்படுகிறது. சரணடையச் செயற்கையாக முயற்சிக்க வேண்டாம், அது உள்ளிருந்து வர வேண்டும். சரணடைய வேண்டும் என்று நீங்கள் உணர்ந்தும், சரணடைய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; உங்களுக்கான நேரத்தைக் கொடுங்கள். உங்களுக்கு முன்னால் இருப்பவர் சமர்ப்பிப்புக்குத் தகுதியானவர் என்றால், தானாகவே நீங்கள் அதைச் செய்வதைக் காண்பீர்கள். நீங்கள் அவரை அவமதிப்பு செய்யாமல் இருத்தலே நல்லது. சுதந்திரமாக இருங்கள், அச்சமற்று இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone