ஒரு நல்ல தியானிப்பவர் ஆவதற்குப் பெரிய செறிவு தேவை ஆக உள்ளது, மிகப் பெரிய தியானிப்பவர் ஆவதற்கு உச்சக்கட்ட செறிவு தேவை ஆக உள்ளது. செறிவு, குறிப்பாக ஒரு கூரான செறிவு, பயிற்சியினால் வருகிறது. எவ்வளவு அதிகமாகப் பயிற்சிக்கிறீர்களோ, அவ்வளவு நேர்த்தியாக உங்களுக்குச் செறிவு அமையும்.

கிருஷ்ணரின் காலத்தில் இருந்த பெரிய வில்லாளனும், வீரனுமான அர்ஜுனன், ஐந்து சகோதரர்களில் ஒருவனாவான். அவனுடைய சகோதரன் பீமன் பெரும் பசி உள்ள, கிட்டத்தட்டக் கட்டுப்பாடில்லாமல், பெரிய பெரிய கவளங்களாக விழுங்குபவன். ஒரு அமாவாசை அன்று, கும்மிருட்டில் பீமன் நடு இரவில் பசியினை உணர்ந்தான். அவன் சமையலறைக்குள் புகுந்து உணவு மற்றும் இனிப்புகளைக் கண்டுபிடித்து, அங்கேயே சாப்பிடத் தொடங்கினான்; அவன் குழந்தைப் பருவத்தில் இருந்து இவ்வாறு செய்து வந்ததால், பீமனைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரணச் செயல். இந்தக் குறிப்பிட்ட இரவில், அர்ஜுனனும் விழித்திருந்ததால், பீமனைத் தொடர்ந்து சமையலறைக்குச் சென்றான். அவன் தனது சகோதரன், இந்த இருட்டிலும் மிகத் துல்லியமாக எடுத்து உண்பதைப் பார்த்து மிகவும் வியப்படைந்தான்.

“பீமன் சமையலறை, உணவு இவற்றைக் கண்டுபிடித்து பட்டப்பகலில் பார்ப்பதைப் போல் இந்த இருட்டில் சாப்பிட முடியுமானால், நான் ஏன் வில்வித்தையில் அதையே செய்ய முடியாது?” என்று அவன் நினைத்தான்.

அர்ஜுனன் மிகுந்த கவனத்துடனும், விடாமுயற்சியுடனும் இரவில் பயிற்சியைத் தொடங்கினான். பின்னாளில் இருட்டிலும் அம்பு விடக் கூடிய இந்தத் திறன் தான், ஒரு வல்லமைமிக்க எதிரியான ஜயத்ரதனுக்கு எதிரான ஒரு முக்கியமான போரில் வெற்றியைக் காண வைத்தது.

உங்களுடைய ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தை நீங்கள் விரும்புகின்ற நேரம் வரை நீட்டிக்க முடியும் என்றால், தியானத்தின் உண்மையான உணர்வைக் கண்டுபிடிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டீர்கள். தியானம் என்பது சதுரங்கம் விளையாடுவதில் இருப்பதைப் போல் ஆழ்ந்த யோசனை உள்ளதாக இருக்கலாம், டிவி பார்ப்பதைப் போல் மந்தமானதாக இருக்கலாம் அல்லது ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் மூழ்கிப் போவதைப் போல் இருக்கலாம். எதிர்காலத்தில், இதைப் பற்றி விரிவாக நான் எழுதப் போகிறேன். தற்சமயம் தியானத்திற்குத் தேவையான கவனம், ஒரு கூரான ஒருமுகச்சிந்தனையே ஆகும் என்று தெரிந்து கொள்ளுங்கள். இத்தகைய செறிவினை சமஸ்கிருதத்தில் ‘ஏகாக்ரதா’ என்பார்கள். நீங்கள் ஊசியில் ஒரு நூல் கோர்க்கும் முயற்சிக்கான நேரத்தை எண்ணிப் பாருங்கள்; அதற்குத் தேவை ஒருமுகச் செறிவு. இத்தகைய செறிவு, தீவிர கவனம் மற்றும் பெரிய விழிப்புணர்வு ஆகியவற்றைப் பற்றியதாகும்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார்:

तत्र एकाग्रं मन कृत्वा यतचित्तेन्द्रिय क्रिय: ।
उपविश्यासने युञ्ज्याद्योगमात्मविशुद्धये ॥
தத்ர எகாக்ரம் மன க்ருத்வா யதசித்தேந்த்ரிய க்ரிய: ।
உபவிஶ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஶூத்தயே ।। (பகவத் கீதை, 6.12)
திறமையானவர், ஒரே நிலையில் உறுதியாக அமர்ந்து உணர்வுகளையும், மனத்தையும் கட்டுப்படுத்தி, உயர்ந்த செறிவுடன் ஒருமுகப்படுத்தி, யோகப் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

பெரும் இதிகாசமான மகாபாரதத்தில் இருந்து மீண்டும் அர்ஜுனனின் ஒரு பிரபலமான கதையைக் கூற என்னை அனுமதியுங்கள்.

அர்ஜுனன், அவனது சகோதரர்கள், அவனது உறவினர்கள் – அனைத்து மன்னர் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், மற்றும் பலருக்கு, ஒப்பிடமுடியாத வில் பயிற்சியாளர் – குரு துரோணாச்சாரியார் கற்றுக் கொடுத்தார். குரு துரோணர் அவர்களுக்குப் பல ஆண்டுகள் பயிற்சி கொடுத்தார். ஒரு நாள் அவர்களைச் சோதனை செய்ய அவர் முடிவு எடுத்தார். அவர் தொலைதூரத்தில் இருந்த மரத்தின் ஓர் உயர் கிளையில், மரத்தில் செதுக்கப்பட்ட ஒரு பறவையைத் தொங்க விட்டார். அவரது அனைத்து மாணவர்களையும் கூப்பிட்டார். அவர்களை வரிசையாக நிற்கச் சொன்னார். அவர்களது இலக்கு அந்தப் பறவையின் கண்ணை அடிக்க வேண்டும்.

அவருக்கு அருகில் இருந்த முதல் மாணவரைக் கூப்பிட்டார். அந்த மாணவர் தயாராகி குறியை அடிக்கும் முன் குரு துரோணர் குறுக்கிட்டு, “நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்க, “நான் மரங்களைப் பார்க்கிறேன்,” என்று அந்த மாணவர் பதிலளித்தார்.

துரோணர் அந்த மாணவரை அம்பு விடுவதை விடுத்து, விலகி நிற்கக் கூறினார்.

அவர் தம்முடைய ஒவ்வொரு சீடரிடமும் இதே பயிற்சியைத் தொடர்ந்தார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு பதில்களை வழங்கினார்கள். சிலர் இலைகள் என்றும், மற்றவர்கள் பறவைகள் என்றும், பலர் மரங்கள் என்றும், இன்னும் வேறு சிலவற்றையும் பார்த்ததாகக் கூறினார்கள். ஒவ்வொரு முறையும் குரு, அவர்களை விலகி நிற்கக் கூறினார்.

அர்ஜூனனின் முறை வந்ததும் குரு அதே கேள்வியைக் கேட்ட போது அர்ஜூனன், “நான் பறவையின் கண்ணை மட்டுமே பார்த்து கொண்டிருக்கிறேன்,” என்றார்.

துரோணர் அவரிடம் அம்பை விடச் சொன்னார். அர்ஜுனன் சரியாகக் குறியில் அடித்தார்.

இது ஒரு எளியக் கதை; எளிமையில் தான் அனைத்து நல்ல விஷயங்களும் மறைந்து இருக்கின்றன. செறிவும் எளிமைப்படுத்தும் ஒரு செயல் ஆகும்; பின்னிப் பிணைந்து சிக்கலாகி வலை போல் உள்ள எண்ணங்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தின் மூலம் அழிக்கப்படுகின்றன.

தியானப் பாதையின் மூலம் மனதில் அந்தப் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால், ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு நேர்த்தியான செறிவைச் செய்ய வேண்டும் என்ற விஷயம் பிடிக்கவில்லை என்றாலும், உண்மை என்னவென்றால் அதை நீங்கள் செய்தே ஆக வேண்டும். இப்போது இந்தத் தீர்மானப் பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம். உங்களுடைய ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்தை நெறிப்படுத்துவதற்கு மிகப்பெரிய உறுதி, பயிற்சி மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. ஒருமுறை அதைச் செய்து விட்டால், தெளிவான தியான நேரங்கள் மட்டுமல்ல, நீங்கள் விரும்பும் எதையும் எப்போதும் அடைய முடியும்.

முக்கியமாக, உங்களது எண்ணங்கள் சக்திவாய்ந்ததாக ஆகின்றன, உங்களது உணர்வு நிலை நெறிப்படுத்தப்படுகிறது. ஒரு நீர்வீழ்ச்சியை எண்ணிப் பாருங்கள்; நீர்த் துளிகள் நெறிப்படுத்தப்படுகின்றன. இத்தகைய நெறிப்படுத்தப் படுதலே பாறைகள், மணல் போன்றவை உருவாவதற்கும், பாறாங்கல் உடைவதற்கும் போதுமானதாகும். அதே நீர்த் துளிகள் மழை வடிவத்தில் சிதறி வரும் போது முந்தைய விளைவுகளைச் சாதிக்க முடிவதில்லை.

உரையாடல்கள் உங்களது கவனத்தைத் தடுத்து விடுகின்றன. நான் இதைப்பற்றிய தொடரின் அடுத்த இடுகையில் செறிவின் நடைமுறைப் பயிற்சி பற்றி எழுதுவேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook0Tweet about this on TwitterShare on LinkedIn0Google+0Email to someone