சமீபத்தில் நான் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆன்மீக, சக்தி மற்றும் மனித நேயத்தைப் பற்றிய 6 வது உலக மாநாட்டில் பேசினேன். டாக்டர். எச்.பி. கனோரியா, ஒரு போலிப் பெருமையற்ற பணக்காரர், மற்றும் ஒரு தொண்டு உள்ளம் கொண்டவர், அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகள் மிக அன்பாக என்னைக் கெளரவ விருந்தினராக அழைத்தார். எனக்குத் தனிப்பட்ட முறையில் பல செல்வந்தர்களைத் தெரியும், ஆனால் டாக்டர் கனோரியாவைப் போன்ற ஒரு சிலரே, உலகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன், அவர்களின் உடல் மற்றும் நிதி வளங்களின் குறிப்பிடத்தக்க பகுதியை நமது சமுதாயத்திற்கு நேரடியாகச் சம்பந்தப்பட்ட காரணங்களில் முதலீடு செய்கிறார்கள்.

உலகம் ஏன் இவ்வளவு அமைதியற்று உள்ளது என்பதைப் பற்றியும், மேலும் முக்கியமாக, ‘ஆன்மீகம் மகிழ்ச்சிக்கான ஒரு சஞ்சீவியா?’ என்பதைப் பற்றியுமான என் எண்ணங்களைப் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். எவ்வளவு வேகமாக நாம் முன்னேறுகிறோமோ, அவ்வளவு விரைவாக நாம் தடம் புரள்வதாகத் தோன்றுகிறது. எவ்வளவு அதிகமாக வசதிகளைப் பெறுகிறோமோ, அவ்வளவு அதிகமாக நம் வாழ்வில் சங்கடங்களைப் பெறுகிறோம். இன்னும், நம்மில் அதிகமானவர்கள் மேலும் மேலும் பொறுமையில்லாமல், திசைதிருப்பப்பட்டு, மன அழுத்தத்துடன், நாம் எங்கு-யாராக-என்னவாக இருக்கிறோம் என்பதில் அதிருப்தியுடன் இருக்கிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும் என்று நம்மால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இருந்தாலும் இன்னும், மகிழ்ச்சியும், அமைதியும் எப்போதும் பிடிபடாத கோடை மேகங்களைப் போலவே தோன்றுகின்றன. ஏன்?

தனிப்பட்ட முறையில், உள்ளே உள்ள அமைதியின்மை, அதிருப்தி மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகியவை நாம் கவலைப்பட வேண்டிய காரணங்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவை காரணங்கள் இல்லை, அவை அறிகுறிகள் மட்டுமே. நாம் மகிழ்ச்சி அற்றவர்களாக இருப்பதால், நமக்கு அதிருப்தி இல்லை. நாம் பொறுமை அற்றவர்களாய் இருப்பதால், நாம் திசைதிருப்பப்படவில்லை. இவை ஒரு எண்ணெய்ப் பசை உள்ள தோல் மீது வரும் பருக்களைப் போன்றவை. அவை தோலை மாசுபடுத்தி விடுகின்றன, ஆனால் தோலில் உள்ள அழுக்கு தான் பருக்கள் உருவாக முதன்மைக் காரணமாகும். அமைதியின்மை, சகிப்புத்தன்மையின்மை, வன்முறை, பொறுமையின்மை, மகிழ்ச்சியின்மை, ஆகிய இவை காரணங்கள் இல்லை என்றால், வேறு எவை என்று நீங்கள் கேட்கலாம்? எது காரணமாக இருந்தாலும், ஆன்மீகம் தான் அதற்கான உலகளாவிய பதிலா?

உண்மை என்னவென்றால், நம்முடைய உலகில் உள்ள எல்லா நன்மை மற்றும் தீமைகளுக்கு ஆதாரமாக இருப்பது ஒரு விஷயம் தான். என் பார்வையில், அது ‘எதிர்ப்பு’ ஆகும். உங்களைச் சுற்றிப் பார்த்தால், நம்மில் பலர் மிகப் பெரிய எதிர்ப்புடன் வாழ்க்கையை வாழ்வதைக் காணலாம். மற்றவர்களை, கருத்துக்களை, சூழ்நிலைகளை, நம்பிக்கைகளை, இக்கட்டான நிலைகளை மற்றும் நாம் தவிர்க்க விரும்பும் எல்லாவற்றையும் எதிர்ப்பதற்கு முனைகிறோம். இது இந்த விஷயத்தின் முக்கியத்துவத்திற்கு என்னை இட்டுச் செல்கிறது: எதிர்ப்பு என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? இதோ, எளியச் சொற்களில்:

கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை மட்டுமே கொண்டுள்ளனர். உண்மையில் இந்த இரண்டு சவால்கள் மட்டுமே உள்ளன. இவை அகற்றப்பட்டால், எதிர்ப்பு, மகிழ்ச்சியின்மை அல்லது மன அழுத்தம் ஆகிய எதுவுமே இருக்காது. முதலாவதாக: மக்கள் தங்களிடம் இல்லாத ஒன்றை விரும்புகிறார்கள். அது ஆரோக்கியம், செல்வம், அதிகாரம், அன்பு, கவனிப்பு அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். இரண்டாவதாக: அவர்கள் விரும்பாத ஏதோ ஒன்று அவர்களிடம் இருக்கிறது. மீண்டும், அது எதுவாகவும் இருக்கலாம். அடிக்கடி நாம் காற்றை எதிர்த்துக் கப்பலை இயக்குகிறோம், பல தசாப்தங்களைக் கொண்ட நமது வாழ்வில் நம்மிடம் என்ன இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அல்லது நம்மிடம் என்ன இருக்கக் கூடாது என்று தவிர்க்க நினைக்கிறோமோ, அதை நோக்கியே தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறோம்.

உங்களிடம் என்ன இல்லையோ அதை விரும்புவது, உங்களுக்குப் பிடிக்காததைத் தவிர்ப்பது என்ற இந்தச் சித்தாந்தத்திலிருந்து அமைதியின்மை மற்றும் மகிழ்ச்சியின்மை ஆகிய வெறுப்புக்குரிய குணங்கள் உருவாகுகின்றன. அவை ஒரு உள் மனக் கொந்தளிப்பின் விளைவு, அவை எதிர்ப்பிலிருந்து பிறந்தவை, அவை நமக்குக் கிடைக்கும் பலனாகும். மேலும், எந்தப் பலனும் நமது விருப்பங்களாலும், ஆசைகளாலும் தீர்மானிக்கப்படுவது இல்லை, அது நம் செயல்களால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, விளைவுகளை எதிர்த்துக் கொண்டிருப்பது முட்டாள்தனம். நீங்கள் உங்கள் பாதையில் கவனத்தைச் செலுத்த வேண்டும். நீங்கள் கடலில் பயணிக்கிறீர்கள் என்றால், ஒரு சமயத்தில் அலைகள் கொந்தளிப்படைந்து, உங்கள் படகை அலைக்கழிக்கக் கூடும். கடலின் நடுவில் நீங்கள் பிரார்த்தனை செய்கிறபடியால் கடவுள் கடலில் அமைதியை ஏற்படுத்த மாட்டார். எண்ணற்ற நீர்வாழ் உயிரினங்களின் உயிர்கள் அந்தக் கொந்தளிப்பான அலைகளைச் சார்ந்து இருப்பதால் அவரால் அவற்றை நிறுத்த முடியாது.

நீங்கள் இயற்கையோடு போராட முடியாது, அது அளவில் மிகப் பெரியது. ஆனால் துரதிருஷ்டவசமாக மிகுந்த அறியாமை, தற்பெருமை அல்லது கர்வத்தால் நம்மில் பலர் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். ‘அப்படியானால் இருக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? ஏதோ ஒன்றை நாம் விரும்புவது தவறா?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்கான பதில் இல்லை என்பதாகும். உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் வடிவமைக்க முயற்சிப்பதோ அல்லது அதில் இருந்து ஏதேனும் ஒன்றை அடைய விரும்புவதோ, அடிப்படையில் தவறு இல்லை. ஆனால் நமது ஆசைகள், தேர்வுகள் மற்றும் செயல்களுக்கு நாமே பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களது தற்போதைய நிலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத போதிலும், உண்மை என்னவென்றால் இன்று நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அது முன்னாளில் உங்களால் விரும்பப்பட்டதாகும். இன்று நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, அதுவே உங்களால் குறி பார்க்கப்பட்டதாகும். உங்களிடம் இன்று என்ன உள்ளதோ, அதுவே முன்னாளில் உங்களது ஆசையாக இருந்திருக்கும். இன்று உங்களிடம் உள்ள அனைத்துமே, ஒரு சமயம் நீங்கள் கேட்டது தான். மற்றும், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான விஷயங்கள் யாவும், அத்தகைய எண்ணங்கள் வெளிப்படுத்தும் விளைவே ஆகும். அதை மறந்து விடுவது எளிதானது ஆனால் அதுவே கொடூரமான உண்மை ஆகும். யாராவது ஒருவர் வீட்டின் கடனை அடைக்கப் போராடிக் கொண்டு இருந்தால், அவர்கள் ஒருமுறை விரும்பிய ஒரு வீட்டைச் சொந்தமாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. இயற்கை அவர்களுக்கு ஒரு வீட்டைக் கொடுத்தது, ஆனால் வீட்டுக் கடனைத் திருப்பி அடைப்பது அவர்களது தனிப்பட்ட கடமை ஆகும். இயற்கை ஒருவருக்கு ஒரு காரை, அவர் ஒருமுறை மிகவும் தீவிரமாக விரும்பியதால் அவருக்குக் கொடுக்கலாம், ஆனால் காப்பீட்டைச் செலுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்கும் பொறுப்பு அவருடையதே ஆகும். ஒரு அழகிய, அறிவார்ந்த மற்றும் அன்பான துணை கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் தொடர்ந்து உங்களை விரும்பத் தேவையான, உங்களது பங்கை நீங்கள் செய்தே ஆக வேண்டும் (அதில் பெருமளவு அவர்களது முன்னுரிமைகளைச் சார்ந்தது).

ஆன்மீகம் என்பது இயற்கையுடன் ஒன்றிவிடும் ஒரு கலை ஆகும், அதன் மூலம் அந்தப் பரந்த கிடங்கிலிருந்து, அதன் அளவற்ற வளங்களை நீங்கள் ஈர்த்துக் கொள்ளலாம். மேலும் ஒரு நல்ல கருவியாக ஆகி, அதை முன் நடத்திச் செல்லலாம். அவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்களுடைய மிகப் பெரிய கனவுகளுக்கும் அப்பாற்பட்டவராகத் தகுதியானவராக, சக்திவாய்ந்தவராக, வெகுமதி அடைந்தவராக ஆகிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள். எனவே, ஆன்மீகம் என்பது அனைத்து நோய்க்குமான மருந்து மட்டும் இல்லை, உண்மையில் அது ஒன்றே சஞ்சீவினி ஆகும். ஏனெனில் ஆன்மீகம் என்பது ஆணவத்தைக் கடந்து செல்வது, மதத்திற்கும், கருத்துக்களுக்கும் அப்பால் செல்வது, உங்கள் தனிப்பட்ட எண்ணத்தைப் பிரபஞ்சத்தின் உணர்வு நிலைக்குத் தக்கபடி மாற்றியமைப்பது. இது ஒரு உச்ச வகையான யோகா (ஒன்று சேர்தல்) ஆகும்.

கேள்வி என்னவென்றால், இயற்கையோடு எப்படி ஒன்றி இருப்பது? நல்லது, சுவாமியிடம் உங்களுக்கான ஒரு பதில் இருக்கிறது. என் முன்னுரிமைப் பட்டியலில், ஜூன் 2015 இல் (அதற்குமுன் இல்லை என்றால்) ஒரு வேலையைச் செய்து முடிக்க எண்ணியுள்ளேன். அது, இந்தக் கேள்வியைப் பற்றியதாகும், இப்போதும் மற்றும் வரும் காலத்திலும் உபயோகப்படுத்தக் கூடிய ஒரு எளிய வழியைக் காட்டுவதாகும். சிறிதும் மிகைப்படுத்துதல் இல்லாமல், ஒரு பெரிய இரகசியத்தை வெளிக்கொணர்ந்து, நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். நீங்கள் என்னவாக இருக்கும் என்று வியந்து கொண்டு இருந்தீர்களானால், அது ஒரு புத்தகம் அல்ல என்று கூறிக் கொள்கிறேன்.

நீங்கள் என்னை நம்பினால், அல்லது நீங்கள் ஆர்வத்துடன் இருந்தால், அல்லது ஒரு சோதனைக்குக் கூடத் தயாராக இருந்தால் காத்திருங்கள். ஆனால், நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதை, உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு மட்டுமே என்னை நம்புங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email