யாரோ ஒருவர் தங்களுக்குத் தீங்கு செய்யும் போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பெரும்பாலும் மக்கள் என்னைக் கேட்கிறார்கள். சில கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் இருக்கும் போது, சாதாரணமாக அவர்கள் செய்ய விழையாத காரியங்களைச் செய்யும்படியாக இருக்கும் போது, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு முறை இந்த வினாக்களைக் கேட்கும் போதும், எனக்கு யூத பாரம்பரியத்தினைக் கதையாகச் சொல்லி விளக்கும் ‘லானே பெக்கர்’ (Laney Becker) எழுதிய “த்ரீ டைம்ஸ் சாய்” (Three Times Chai – மூன்று முறை சாய்) என்ற புத்தகத்தில் படித்த ஒரு அழகான கதை நினைவுக்கு வருகிறது.

நாஜி படுகொலைகளில் இருந்து ஒரு பெரிய அளவிலான யூதர்களை மீட்ட டேனிஷ் ரகசிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு தீவிரமான கிறிஸ்துவரைப் பற்றி ஒரு குறிப்பிட்ட கதை விவரிக்கிறது.

ஜோர்டான் நூட்சேன் (Jordan Knudsen) ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்தார். அவர் இரண்டாம் உலகப் போரின் போது டேனிஷ் ரகசிய இயக்கத்தின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார். எஸ்-எஸ் (SS – Schutzstaffel, ஸ்கூட்ஸ்டாஃபெல், நாஜிக்கள் உயரடுக்கு பாதுகாப்புப் படை), டென்மார்க் யூதர்களைக் கொல்வதற்காக, மரண முகாம்களுக்கு அனுப்பத் தொடங்கத் திட்டமிட்டுள்ள தினத்தை டேனிஷ் ரகசிய அமைப்பு தெரிந்து கொண்டது. இந்தச் செய்தியையே ரகசிய இயக்கத்தினர் நடவடிக்கை எடுக்கத் தேவையான சமிக்ஞையாக ஏற்று பணியாற்றத் துவங்கினர்.

ஒரு சர்வாதிகார அமைப்பில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பது ஒரு அசாதாரண மதிப்புமிக்கத் தொழிலாகவே இருந்தது (இப்போதும் இருக்கிறது), ஏனெனில் ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், வாகனத்தின் எச்சரிக்கை ஒலியைப் போட்டுக் கொண்டு எங்கு வேண்டுமென்றாலும் செல்ல முடியும். நூட்சேன் ஒரு ஆம்புலன்ஸை ஓட்டிக் கொண்டிருந்ததால், இதன் மூலம் யூதர்களை நாட்டை விட்டு வெளியேக் கடத்த, இது ஒரு சிறந்த வழிமுறையாக இருந்தது. ஆனால் அவருக்கு ஒரு பிரச்சனை இருந்தது, அது அவ்வளவு முக்கியமற்றது என்று சொல்ல முடியாது: யூதர்கள் யாரையும் அவருக்குத் தெரியாது. நாட்டில் ஏழாயிரத்து ஐந்நூறு யூதர்கள் இருந்தனர் ஆனால் அவருக்கு அவர்களில் ஒருவரைக் கூடத் தெரியாது. எனவே-என்ன செய்வது?

நூட்சேன் எதுவும் செய்யாமல் இருந்திருக்க முடியும் – இவரைப் போன்ற அதே பதவியில் இருந்த எவ்வளவு மனிதர்கள் இதையே தேர்ந்தெடுத்திருப்பார்கள்? ஆனால் அவர் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அவர் ஒரு தொலைப்பேசிப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பி, யூதர்கள் என்று தனக்குத் தோன்றிய பெயர்களைக் கண்டு பிடித்தார். நூட்செனுக்கு யூதர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சில பெயர்கள் தெரியும். பட்டியலில் யூத-ஒலி கொண்ட ஒரு பெயர் வந்தவுடன், அவர் அந்தப் பெயருக்கான முகவரிக்குச் சென்றார். அங்கு யூதர்கள் வாழ்ந்து கொண்டு இருந்தால், அவர்களைத் தனது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார். போரின் போது பாதுகாப்பாக அவர்கள் வாழக்கூடிய, நடுநிலை வகித்த ஸ்வீடனுக்கு யூதர்களைக் கடத்துவதற்கான முதல் படி இதுவே ஆகும்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர், ‘யாட் வாஷேமின்’ (Yad Vashem) ஆராய்ச்சியாளர்கள் (ஹோலோகாஸ்ட்டில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு) நூட்சேனைக் கண்டுபிடித்து அவரைப் பேட்டி எடுத்தனர்.

அவர்கள் நூட்சேனை நோக்கி, “ஏன் அப்படிச் செய்தீர்கள்? நீங்கள் பிடிபட்டிருந்தால் கொல்லப்பட்டு இருப்பீர்கள். நீங்கள் உங்களது வாழ்வைப் பணயம் வைத்துள்ளீர்கள் மற்றும் நீங்கள் யாருக்கு உதவினீர்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு எந்த ஒரு யூதரையும் தெரியாதே,” என்று கேட்டனர்.

அவரது பதில் எளிமையாக ஆனால் ஆச்சரியமானதாக இருந்தது: “நான் வேறு என்ன செய்திருக்க முடியும்?” அவ்வளவுதான் அவர் கூறினார்.

நாஜிக்கள் நூரெம்பெர்கில் அவர்களுடைய பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திய துல்லியமான வார்த்தைகளை நினைத்துப் பார்க்கும் போது நூட்சேனின் பதில் குறிப்பாக உயிரோட்டமானதாக இருந்தது. இலட்சக் கணக்கான யூதர்களின் மீதான திட்டமிட்ட கொலைக்குப் பொறுப்பான எஸ்-எஸ் (SS) இன் அதிகாரிகள் மற்றும் பிற உறுப்பினர்களை, ஏன் ஹிட்லரை ஆதரித்தீர்கள் என்று தனித்தனியாக விசாரித்த போது அவர்கள் “நான் வேறு என்ன செய்திருக்க முடியும்?” என்றே பதிலளித்தனர்.

நான் எப்போதும் சொல்வது போல் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களுக்குத் தகுதியான முறையில் நடந்து கொள்ளுங்கள். நாம் அனைவரும் நமது இயல்புக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதே பல சூழ்நிலைகளிலும் நமது திடீர் நடவடிக்கைகளைத் தீர்மானிக்கின்றன. நமது ஆழ் மனத்தால் தான், இதுபோன்ற செயல்பாடுகள் அல்லது நமது தன்னிச்சையான நடவடிக்கைகள் பெருமளவில் தாக்கமடைகின்றன. மேலும், நமது ஆழ் மனம், நமது கடந்த கால எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் உணர்வுகளின் ஒரு மாபெரும் களஞ்சியமாக உள்ளது என்பதையும் நான் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு வழியில், யாரோ-உனக்கு-தீமை-செய்யும்-போது-நீ-என்ன-செய்வாய் என்ற இந்தக் கேள்வி தேவையற்றது ஏனெனில் எது உங்களுக்கு இயற்கையாக வருகிறதோ அதைத் தான் பெரும்பாலும் நீங்கள் செய்ய வாய்ப்பு உள்ளது. நீங்கள் கோபமாக இருக்கும் போது மற்ற நபர் மீது எரிந்துவிழ வேண்டாம் என்று உங்களுக்கு யாரோ ஒருவர் அறிவுறுத்துகிறார் என்று கொள்வோம். இந்த அறிவுறுத்தலின்படி நடக்க வேண்டும் என்று எவ்வளவு தான் நீங்கள் விரும்பினாலும், அதன்படி நடப்பது மிகவும் கடினமானது என்பதை நீங்கள் உணர்வீர்கள். ஏனெனில் உடனடி நடத்தைகள் தேர்வு செய்து வருவதில்லை. அது பழக்கத்தில் வரும் எதிர்வினையாகும், உங்களுக்கு அது வழக்கப்பட்ட பதில்.

எனவே எனது பார்வையில், ஒரு பொருத்தமான கேள்வி, இப்படி இருந்திருக்க வேண்டும்: எனக்குத் தகுந்த ஒரு முறையில் நடக்கும் விதமாக, ரோஜாவில் உள்ள வாசனையைப் போல் என்னுள் இருந்தும் இயற்கையாகவே நன்மை வெளி வரும்படியாக, என்னுடைய இயற்கையான இயல்பை மாற்றுவது எப்படி? அதுவும் கூட சாத்தியமா?

இதற்கான பதில் ஆமாம் என்பதாகும். அதை ஒரு போதும் ஒரே நாளில் செய்ய முடியாது. ஆழ்மன உருமாற்றம் படிப்படியாகச் செயல்படுகிறது. ஒழுக்கத்துடனான நிலையான வழிமுறைகளே இந்தச் சாதனைக்குத் தேவையாகும். சிந்தனையுடனான கவனம் தான், நாம் வழக்கமாக அல்லாமல் கவனத்துடன் நடக்க, நமது ஆழ்மனத்தில் இருந்து வலி முத்திரைகளை அழிக்கத் தேவையான பாதையாகும். எனவே சூழ்நிலைகளிலும், மக்களிடமும் காட்டும் திடீர் எதிர்வினைகளை, சிந்தித்து செயல் படுத்தும் ஒரு செயலாக அது மாற்றும்.

நமது கடந்த கால நினைவுகளைத் தொலைத்து விட விரும்புவதன் மூலமே, நாம் அதை அழித்துவிட முடியாது. எனினும் விரும்பத்தகாத கடந்த கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளுடன் கூடிய வலியை, நமக்கு வருத்தத்தைக் கொடுக்கும் நினைவுகளை, இரக்கம் நிறைந்த அன்பு, அலட்சியம் மற்றும் உணர்ச்சி வயப்படாத அமைதி இவற்றை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஒரு பெரிய அளவிற்குக் குறைத்துக் கொள்ள முடியும். அல்லது மனத்தில் ஆழப் பதிந்துள்ளவற்றை அழிப்பதற்கு, நீங்கள் உணர்வுமனத்துடன் தியானிக்க முடியும். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நான் இங்கே மற்றும் இங்கே அதைப் பற்றி ஓரளவு கூறியுள்ளேன். (தியானம் பற்றிய எனது புத்தகத்திலும் இதைப் பற்றி எழுதியுள்ளேன்).

எப்போதும் நல்ல முறையிலேயே செயல்படுவதென்பது, நீங்கள் உறுதியாக இருக்க முடியாது, தடுத்துக் கொள்ள முடியாது அல்லது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்று அர்த்தம் இல்லை. அதாவது மற்ற நபர் மீது தவறான நோக்கத்தையோ அல்லது எதிர்மறை உணர்வுகளையோ வளர்த்துக் கொள்ளாமல் நீங்கள் இவை அனைத்தையும் செய்ய முடியும் என்று அர்த்தம். அதாவது மற்ற நபருக்குக் குறைந்த அளவு வருத்தம் அல்லது எந்த வருத்தமுமே கொடுக்காமல் நீங்கள் கண்ணியமாக உங்களது நிலையில் உறுதியாக நிற்க முடியும். நல்ல முறையில் நடந்து கொள்வது அதே சமயம் கண்ணியத்துடன் உறுதியாக இருப்பது எவ்வளவு எளிதானது என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அவர்கள் நடந்து கொண்டபடியே நாமும் நடந்து கொள்வது அல்லது எப்படி நடந்து கொள்வது என்று மற்ற நபருக்கு ஒரு பாடம் கற்பிப்பது எளிதானதாகும். அது ஆவலைத் தூண்டுவதாகக் கூட இருக்கிறது. ஆனால், அனைத்துச் சூழ்நிலைகளிலும் உறுதியாக இருப்பதற்கு, ஒரு முனிவரைப் போன்று நல்ல முறையில் நடப்பதற்கு உங்களுக்குள் ஒரு அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. உங்களது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொண்டு, அது மட்டும் அல்லாமல் அவற்றை ஒழுங்குபடுத்த முடியும் போது மட்டுமே கடைப்பிடிக்கக் கூடிய ஒரு அர்ப்பணிப்பு.

முல்லா நஸூருதீன் திருமணம் ஆகி 50 ஆண்டுகள் ஆனதற்காகத் தனது பொன்விழாவை மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடிய போது அவரது நண்பர்கள் அவரிடம், “முல்லா, நீங்கள் திருமணம் மூலம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய விஷயம் என்ன?” என்று கேட்டனர்.
“ஓ, அது எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது, எவ்வளவு என்று எண்ணுவது மிகக் கடினம்,” என்றார்.
“சிலவற்றைச் சொல்லுங்கள்.”
“திருமணம் நமக்கு விசுவாசம், பொறுமை, சுய கட்டுப்பாடு மற்றும் மன்னித்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது,” என்று முல்லா கூறினார். “எப்படிக் கவனிப்பது, எப்போது அமைதியாக இருப்பது மற்றும் பல நல்ல குணங்கள் எவை ஒற்றையாகவே இருந்தால் தேவையில்லையோ அவை அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது,” என்றார்.

வாழ்வின் மிகப் பெரிய பாடங்கள், மிகவும் கடினமான மக்களின் மூலமே நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளன. துயரங்கள் நம்மைப் பலப்படுத்துகின்றன, சவால்கள் நம்மை உயர்த்திக் கொள்வதற்குத் தூண்டுகின்றன. வலி கொடுக்கும் அனுபவங்கள் எப்போதும் நிலைமாற்றம் உள்ளவை, ஏனெனில் நம்மிடமுள்ள மிக மோசமான அல்லது மிகச் சிறந்தவற்றை வெளியே கொண்டு வரும் திறன் அதனிடம் உள்ளது. எந்த வகையாக இருந்தாலும், நீங்கள் உங்களைப்பற்றி மேலும் கண்டறிந்து கொள்கிறீர்கள்.

நீங்கள் உங்களுடனான தொடர்பை மற்றும் ஆன்மீக நிலைப்பாட்டை அடையும் அந்தக் கணம், நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி இனிமேலும் உங்களுக்கு இருக்காது. அதன் பிறகு நீங்கள் அழுத்தப்படும் போது, தேன்கூட்டிலிருந்து தேன் வழிவதைப் போல உங்களது நற்குணமானது வழிந்தோடும்.

நூட்செனைப் போல், நீங்கள் உங்களது இயற்கையான நற்குணத்தால் மக்களை ஆச்சரியப்பட வைப்பீர்கள். நீங்கள் எவ்வாறு இப்படி இருக்க முடிகிறது என்று மக்கள் கேட்டால், ‘நான் வேறு என்ன செய்திருக்க முடியும்’ என்பதைத் தவிர வேறு எந்தப் பதிலும் உங்களிடம் இருக்காது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email