‘எல்லாச் சூழ்நிலைகளிலும் நடுநிலைமையில் நிலைத்திருக்க முடியுமா, அப்படி இருக்க முடியுமானால் அதற்கான பாதை என்ன?’, என்று என்னை அடிக்கடி கேட்கிறார்கள். பலர் தியானம், யோகா, சிகிச்சைகள், ஆலோசனைகள் மற்றும் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் எந்தப் பெரிய பலனையும் அடையவில்லை, ஏன்?இந்தப் பிரச்சனையின் வேர் வரை உங்களைக் கொண்டு செல்ல என்னை அனுமதியுங்கள்.

நம் உணர்ச்சிகள் மற்றும் மறுமொழிகள் ஆகியவை அவற்றுக்கென்று ஒரு தன்னிச்சையான உணர்வைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கும் ஒன்றிற்கு, ஏதாவது ஒரு செயற்கையான பிரதிபலிப்பை நீங்கள் திட்டமிடலாம், ஆனால் நிச்சயமில்லாத ஏதோ ஒன்றில், வரக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும் ஒரு ஆச்சரியம், ஒரு அதிசயம் உள்ளது. உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகள் தான் அந்த ஆச்சரியத்திற்கான நமது பதில் ஆகும். நீங்கள் உங்களது உணர்ச்சிகளைத் திட்டமிட முடியாது. ஒரு நல்ல அல்லது மோசமான செய்தியை நீங்கள் கேட்கும்போது, ஒரு குறிப்பிட்ட விதமாக உணர வேண்டும் என்று நீங்கள் உங்களிடம் சொல்ல முடியாது. அந்தத் தன்னிச்சையான உணர்வுகளும், உணர்ச்சிகளும் எங்கு இருந்து வருகின்றன, இந்த எதிர்வினைக்கான காரணம் என்ன?

நமது உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள், குறிப்பாக எதிர்மறையானவை, ஆத்திரமூட்டல் மூலம் வருகின்றன. ஆத்திரமூட்டலுக்கான தூண்டுதல் வெளிப்புறத்தில் இருந்தோ அல்லது உட்புறத்தில் இருந்தோ இருக்கலாம். ஆனால் இறுதியில், எதாலும் அல்லது எவராலும் உங்களைத் தூண்ட முடியவில்லை என்றால், நீங்கள் விரும்பத்தகாதவற்றைச் செய்வதையோ அல்லது கூறுவதையோ ஒருபோதும் பார்க்கப் போவதில்லை. யாரோ ஒருவரது அறிக்கை, அவர்களின் நடவடிக்கைகள் அல்லது உங்கள் சொந்த மனதின் ஒரு எண்ணம் தூண்டுதலுக்கான ஒரு கருவியாக இருக்கலாம்.

ஒரு மடாலயத்தின் ஒரு குருவிற்கு, மூலிகையுடன் இனிப்பு சேர்த்து தயாரிக்கப்பட்ட ஒரு பானம் மிகவும் பிடித்திருந்தது. அது பல வகை மூலிகைகளின் சாற்றுடன் தேன் கலந்த ஒரு பானமாகும். மூலிகைகளின் சாற்றினைத் தயார் செய்ய அவருக்குப் பல மணிநேரம் ஆனது. அவர் அதை அவருடைய அறையில், அவரது கண்காணிப்பின் கீழ், பாதுகாப்பாக வைத்திருந்தார். ஒரு நாள் குரு அருகில் இருந்த ஒரு கிராமத்தில் பிரசங்கம் செய்யச் செல்ல வேண்டியிருந்தது. அவர் ஒரு நாள் முழுக்கப் போக வேண்டி இருந்தது. அவருடைய இளைய சீடர்கள் சபலத்திற்கு இடம் கொடுத்து விடுவார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

“இது கொடிய விஷத்தினைக் கொண்ட ஒரு பாட்டில்” என்று அவரது அறையைச் சுத்தம் செய்யும் இளம் சீடரிடம் அவர் கூறினார். “அதைத் தொடாதே, வேறு யாரையும் என் அறையில் அனுமதிக்காதே,” என்றார்.

அந்த இளம் துறவிக்கு அதைப்பற்றி நன்றாகத் தெரியும். அவர் நாள் முழுவதும் சபலத்தை எதிர்த்தார், ஆனால் இறுதியில் சபலம் வென்றது. ஒரு துளி மட்டுமே சுவைக்கும் நோக்கத்துடன், அவர் அந்தப் பாட்டிலைத் திறந்தார். அடர்த்தியான மற்றும் வசீகரமான நறுமணம் அவரது நுகர் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. அவர் அறிவதற்கு முன்னரே, அவர் பாதி பாட்டிலை முடித்துவிட்டார். அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழி தேவைப்பட்டதால் மிகவும் கவலையாக இருந்தார். அவர் இன்னும் கொஞ்சம் குடித்துவிட்டு, கொஞ்சத்தை அவரது மேலங்கியில் தெளித்து, ஒரு சில துளிகளைத் தரையில் சிந்தி, பாட்டிலைத் தரையில் சிதறடித்தார். தற்போது, அவர் தனது குருவின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார். கவலை மற்றும் பதட்டத்தில் நீண்ட நேரம் கடந்தது.

குரு திரும்பி வந்தவுடனேயே சீடரைப் பார்த்தது, “என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.
“நான் உங்கள் குற்றவாளி, குருவே,” என்று சீடர் பதிலளித்தார். “நான் உங்கள் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது இந்தக் கொடிய விஷம் கொண்ட பாட்டில் என் கையில் இருந்து விழுந்தது. நான் எதுவும் செய்யும் முன் அது உடைந்து விட்டது. நான் கோட்டை விட்டதால் பாழாகிப் போனேன். நான் இறப்பதற்குத் தகுதியானவன் என்று நினைத்து என்னால் எவ்வளவு முடியுமோ அதைக் குடித்தேன். அந்த நெடிய வாசனை என்னைக் கொல்லக்கூடும் என்று நம்பிக் கொஞ்சத்தை என் மேலும் தெளித்துக் கொண்டேன். பல மணிநேரங்கள் கடந்துவிட்டன ஆனாலும் நான் இன்னும் இறக்கவில்லை,” என்று சீடர் கூறினார்.

ஆத்திரமூட்டலின் கீழே சபலம் அமர்ந்திருக்கிறது. இது சொறிதலுக்கான தூண்டுதலைப் போன்றது, இது தவிர்க்க முடியாததாக இருக்கும். மேலும் சபலம் என்றால் என்ன? இது நம்மை ஆச்சரியப்படுத்திய ஒரு எண்ணம். அடுத்தடுத்த எண்ணங்கள், ஆழ்ந்த சிந்தனை மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை இதன் பின் விளைவுகளாகும்.

நடைமுறையில் உங்களுடைய உணர்ச்சிகளின் மேல் நீங்கள் எந்தக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம், நீங்கள் நல்லதாக அல்லது கெட்டதாக உணர்வதைத் தேர்ந்தெடுக்க முடியாது. இருப்பினும், ஒரு சில நிமிடங்களுக்கு மேல் ஒரு மோசமான உணர்ச்சி உங்களிடம் தங்காமல் இருக்க, உங்களை நீங்களே பயிற்சி செய்து கொள்ளலாம். அந்த உணர்ச்சிகளின் அடிமட்டத்திற்கே சென்று — உங்கள் மனம் — நீங்கள் அவற்றை முற்றிலும் திசை திருப்பலாம். உங்கள் உணர்வுகளை நீங்கள் உணரும் போது, உங்கள் பழக்க வழக்கங்கள் மேலோங்கும் போது, உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: நான் தூண்டப்பட்டு இருக்கின்றேனா? பிறகு நீங்களே பதில் சொல்லுங்கள்: நான் தூண்டப்பட்டு இருக்கின்றேன் என்று எனக்குத் தெரியும். இது ஒரு சுய உரையாடலுக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் மனநிலையை ஒருநிலைக்கு உயர்த்துகிறது.

தூண்டப்படுதல் என்பது, ஒரு விஷப் பாம்பை வம்பிழுக்க ஒரு சிறிய குச்சியைப் பயன்படுத்துவதைப் போன்றதாகும். நீங்கள் உணரும் நேரத்திற்குள், கூர்மையான அனிச்சைச் செயலையுடைய பாம்பு ஏற்கனவே உங்களைக் கொட்டியிருக்கும். நீங்கள் கவனமாக, விழிப்புடன் இருக்கின்றீர்கள், ஆனால் சில நேரங்களில் நீங்கள் அறியும் முன்னரே உங்கள் கவனத்திலிருந்து தவறி விடுகிறீர்கள். உங்களது தன்னிச்சையான இயல்பு சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது, நீங்கள் கலக்கம் அடைகிறீர்கள், எதிர்மறையான உணர்ச்சியால் வன்மையாகத் தண்டிக்கப்பட்டு உள்ளதைக் காண்கிறீர்கள்.

மற்ற நபரை உங்களுக்குப் பிடிக்காத போது நீங்கள் தூண்டப்படுகிறீர்கள். உங்களுக்கு உங்களையே பிடிக்காத போதும் இதே அளவு தூண்டப்படலாம். எப்போதுமே எதிர்மறையான அல்லது மோசமான சுமைகளினால் அல்லாமல், சில நேரங்களில் மிகவும் நன்றாக, இனிமையாக, உதவும் மனப்பான்மையுடன் இருக்க நீங்கள் முயற்சிக்கும் போதும் தூண்டப்படலாம். உங்களது சொந்தத் தேவைகளை நீங்கள் முழுமையாகப் புறக்கணிக்கும் போது, நீங்கள் வருத்தமாக உணர்கிறீர்கள், மிகவும் நுட்பமான முறையில் தூண்டப்பட்டுவிட்டதாக உணர்கிறீர்கள். இத்தகையத் தூண்டுதல், விரக்தியின் காரணத்தால் உடனடியாகக் கோபத்துடன் செயலாற்ற உங்களைத் தூண்டக் கூடும்.

உங்களை நீங்களே அறிந்துகொண்டால், உங்களை நீங்களே சுதந்திரமாக ஆக்கிக் கொள்ளலாம். உங்களுடன் நீங்கள் நிம்மதியாக இருந்தால் தூண்டப்படுவது கடினமாகும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email