எது அழகு? கவர்ச்சிகரமாக, பார்க்க மனம் மகிழும்படியாக உள்ள ஒன்றா அல்லது அதற்கு மேலும் ஏதாவது உள்ளதா? எந்தச் சந்தேகமும் இல்லாமல், முதன்முதலில் பார்த்தவுடன் தோன்றும் உணர்வு என்று வரும் போது, வெளிப்புறத் தோற்றத்தைத் தான் உடனடியாகப் பதிவுக் குறியீடு செய்ய முடியும். நீங்கள் அழகான ஒரு பெண் அல்லது மனிதரைப் பார்த்தால், அவர்கள் கவர்ச்சி உடையவராகத் தெரிவது இயற்கை தான். நீங்கள் திருமணமானவரோ, சமூகத்தில் அல்லது மதத்தில் உங்களது நிலைமையோ இவற்றைப்பற்றிப் பொருட்படுத்தாமல், செயற்கையாக அவர்களின் வெளிப்புற அழகை மறுக்க முடியாது. என்னைக் கேட்டால் அவ்வாறு நீங்கள் செய்தால், அது மிகவும் பரிதாபமானதாகும். வெளிப்புற அழகு அவ்வளவு தவிர்க்கமுடியாதது என்றால், நட்சத்திரங்கள், மேதைகள் மற்றும் செல்வாக்கு உரிய மக்களின் உறவுகளில் இவ்வளவு பிளவுகள் ஏன் ஏற்படுகிறது? அழகைப் பற்றிய விளக்கம், கோட்பாடு மற்றும் கருத்துக்களைப் பற்றிப் பிரதிபலிக்க, உங்களுக்கு உதவ என்னை அனுமதிக்கவும். நான் ஒரு முறை ஒரு கதையைப் படித்தேன். நான் இந்த இடத்தில் சொற் பிறழாதபடிக் கூறுகிறேன். பின்வருமாறு:

ஒரு வயதானப் பெண்மணியும், பிரகாசமான புள்ளிகளால் தெளிக்கப்பட்ட முகம் கொண்ட அவரது சிறிய பேரனும் மிருகக்காட்சி சாலையில் அந்த நாளைக் கழித்தனர். பல குழந்தைகள் அவர்களது கன்னங்களில், புலியின் பாதங்களைப் போல் வண்ணத்தால் அலங்கரித்துக் கொண்டிருந்த உள்ளூர் ஓவியர் ஒருவரால் வரையப்படுவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

வரிசையில் இருந்த ஒரு பெண் அந்தச் சிறிய பையனிடம், உன்னுடைய முகத்தில் அதிக அளவு புள்ளிகள் உள்ளதால், வண்ணம் தீட்ட இடமே இல்லையே என்றாள். அந்தச் சிறிய பையன் சங்கடப்பட்டோ, ஒருவேளை மனதில் காயப்பட்டோ தலையைக் குனிந்து கொண்டான். அவனுடைய பாட்டி அவனருகில் முழந்தாளிட்டு அமர்ந்து, நான் உனது புள்ளிகளை நேசிக்கிறேன் என்றார். அந்தக் குழந்தையின் கன்னம் முழுவதும் விரலால் தடவி கொண்டே, சிறுமியாக இருந்த போது நான் எப்போதும் புள்ளிகள் வேண்டும் என்று விரும்பினேன், புள்ளிகள் அழகாக இருக்கின்றன என்று அவர் கூறினார்.

சிறுவன் நிமிர்ந்து பார்த்து “அப்படியா?” என்று கேட்டான்.
நிச்சயமாக, என்று பாட்டி கூறினார். புள்ளிகளை விட அழகான ஒன்றின் பெயரை எனக்குக் கூறு என்றார்.
அந்தச் சின்னக் குழந்தை ஒரு கணம் யோசித்தது. தனது பாட்டியின் முகத்தைத் தீவிரமாக உற்று நோக்கி “சுருக்கங்கள்” என்று முணுமுணுத்தான்.

அடடா… அது மிகவும் இனிமையானது, சரியா? ஆனால், நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது அவரது சுருக்கங்களுக்காகப் பாட்டியைப் பார்த்துக் கொள்வீர்களா? அநேகமாக இல்லை. அந்தச் சிறுவனைப் போல் அதே அழகை உங்களாலும் அவளது சுருக்கங்களில் பார்க்க முடியுமா? நீங்கள் அந்தச் சிறுவனாக இருந்தால் மட்டுமே முடியும். எனினும், இது அதைப் பற்றி அல்ல. வார்த்தைகளால் ஆன சரத்தைக் கொண்டு அல்லது சில விளக்கங்களைக் கொண்டு அழகைக் கட்ட முடியாது. ஏனெனில் அழகு எனப்படுவது அவற்றைப் பற்றியது அல்ல, அது உங்களைப் பற்றியது. அது முழுமையானது அல்ல, அது சார்ந்தது, அது உங்களுடைய மனதின் நிலையையும், உங்களுடைய சொந்த உணர்வையும் சார்ந்தது. நீங்கள் எதனுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்களோ அது அழகாக இருப்பதாக உணர்வீர்கள்! நீங்கள் எவருடன் இருக்கும் போது பாதுகாப்பாக மற்றும் முழுமையாக உணர்கிறீர்களோ, அந்த நபரை அழகாக இருப்பதாக உணர்வீர்கள். அந்தச் சிறுவன் தனது பாட்டியுடன் ஒரு பாசத்தைப் பகிர்ந்து கொள்கிறான், அதனால் தான் அந்தச் சுருக்கங்கள் அவனுக்கு உண்மையிலேயே மிகவும் அழகான விஷயமாக இருக்கிறது.

இளைஞனான முல்லா நஸூரூதின் ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த அழகான இளம் பெண் ஒருவறைத் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தான். அவனுடைய அப்பா, அவன் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். உனக்கு என்னவாயிற்று? உன் கண்ணைக் குருடாக்கிய அழகு, தோலின் ஆழத்திற்கு மட்டுமே என்றார். அந்த ஆழம் எனக்குப் போதுமானது. நான் ஒரு நரமாமிசப்பட்சிணி இல்லை என்று முல்லா பதிலளித்தார்.

நான் இந்த ஜோக்கை வேடிக்கையானதாகப் பார்க்கிறேன் ஆனால் இது மிகவும் சக்திவாய்ந்த விஷயத்தைச் சொல்கிறது: உங்களுக்கு என்ன முக்கியமோ அதுதான் அழகு. இது உங்களுடைய சொந்த பிரதிபலிப்பு ஆகும். நீங்கள் வாழ்க்கையில் அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் முன்னேறும் போது, உங்களுடைய முன்னுரிமைகள் மாறுகின்றன. பதினைந்து வயதில் அழகாகத் தோன்றியது, உங்களது முப்பது வயதில் பாதி அளவிற்குக்கூட அழகாகத் தோன்றாமல் இருக்கலாம். நீங்கள் உங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் போது உங்களது பார்வையில் வெளி அழகின் முக்கியத்துவம் குறைகிறது. அதற்காக உங்கள் கண்களில் அழகான ஏதாவது அல்லது எவராவது அழகுக் குறைந்து காட்சி அளிப்பர் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் அதைவிட அதிக மதிப்புள்ள அவர்களின் மற்ற பண்புகளைப் பெரும்பாலும் முன் நிறுத்துகிறீர்கள் என்று பொருளாகும். கலீல் கிப்ரனின் வார்த்தைகளில்: அழகு என்பது, எல்லையற்றுது தன்னைத் தானே கண்ணாடியில் பார்ப்பதைப் போன்றது.

அற்புதமான மற்றும் புத்திசாலித்தனமான துறவி, சுவாமி விவேகானந்தா, அவர் காவி வஸ்திரத்தை உடுத்திக் கொண்டு 1893 ஆம் ஆண்டுச் சிகாகோ நகரில் மெதுவாக நடந்து கொண்டிருந்தார். அவரது உடை எல்லோருடையதிலிருந்தும் மாறுபட்டிருந்தது. முறைப்படியான உடையில் இருந்த ஒரு ஜோடி அதே நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர். அந்தப் பெண் தனது ஜோடியிடம், விவேகானந்தரை ஒரு பண்புள்ளவர் என்று நான் நினைக்கவில்லை என்றாள். அவளது அறிக்கை சுவாமியின் காதுகளுக்கு எட்டியது. அவர் அந்த ஜோடியிடம் சென்று, உங்களுடைய குறிப்புரையை ஒட்டுக் கேட்டதற்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் நாட்டில் தையல்காரர், ஒருவரைப் பண்புள்ள மனிதராக ஆக்குகிறார். ஆனால் எங்கள் நாட்டில் ஒருவருடைய குணம் அவரைப் பண்புள்ள மனிதராக ஆக்குகிறது என்றார். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. இப்பொழுது இந்தப் பதிப்பிற்கு அது தேவையில்லாதது. ஆனால் அந்தப் பெண்ணின் சிந்தனை சரியானதா? மேலும் சுவாமி அதற்குப் பதில் கொடுத்தது சரியானதா? உண்மையில், அது ஒரு விஷயமே அல்ல. அந்தப் பெண் அவளுக்குத் தோன்றியதை அவளது ஜோடியிடம் தான் வெளிப்படுத்தினார். விவேகானந்தரிடம் நேரடியாகக் கூறவில்லை.

நீங்கள் விரும்பியபடி உங்களுடைய எண்ணங்களைச் செயல்படுத்த, உங்களுடைய உரிமையைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால், மற்றவர்களும் தங்கள் கருத்துக்களை அமைத்துக் கொள்ளச் சுதந்திரத்தைப் பெறட்டும். ஊடகம், சமூகம், விளம்பரங்கள், மதம் இவை அனைத்தும் உங்களை ஒரே மாதிரியாக, சில நேரங்களில் நுட்பமான முறையிலும், பல நேரம் வெளிப்படையாகவும் தாக்குவது உண்டு. மற்றவர்களின் கருத்துக்களை எவ்வளவு அதிகமாகக் கருத்தில் கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுடைய ஆழ்மனதின் ஆரம்ப இடத்துச் சந்தோஷத்திலிருந்து விலகிப் போகிறீர்கள். மேலும் முக்கியத்துவமற்ற குறிப்பாக இருந்த போதிலும், இன்றைய காலகட்டத்தில் விவேகானந்தரின் அறிக்கையில் அதிக உண்மை இருக்கிறதா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தச் சமகால இந்தியாவில் ஊழல், அனைத்து மட்டங்களிலும் மற்றும் அனைத்துத் துறைகளிலும், ஒரு கடினமான ஆட்சிப் பிரச்சினையை விட அதிகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறையாக உள்ளது.

துரதிருஷ்டவசமாக, யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அவர்கள் கொள்ளையடிக்கத் தயாராக உள்ளதாகவே தெரிகிறது. ஒரு வணிகர் வரி கட்ட ஏமாற்றுவதற்கு முயற்சி செய்யவோ அல்லது ஒரு தொழிலாளி அவரது வேலை நேர கால அட்டவணையைத் திருத்தவோ அல்லது அரசாங்க ஊழியர் வெளிப்படையாகத் தன் பங்காக ஒதுக்கச் சொல்லவோ அல்லது வேறு வழியில் இலஞ்சம் பெறவோ காத்திருக்கின்றனர். பயம் மற்றும் ஆட்சி செய்வதால் அல்லாமல், அறநெறி மற்றும் தேர்ந்தெடுத்த வழியால் நேர்மையாக நடக்கும் நபர்கள், அரிதான கற்களுக்குச் சமமானவர்களே. பல தொழிலாளர்கள் உழைப்பது போல் தோன்றினாலும், நேர்மைக்கு ஒரு சில தொண்டர்களே உள்ளனர். எனது அறிக்கைக்கு உணர்ச்சிகரமான மறுப்பு இருக்கலாம் ஆனால் நிகழ்வுகள் சரியான உண்மையை ஊடுருவிக் காண்பிக்கின்றன – அந்த உண்மை விவேகமான கண்களுக்கு அழகானவை அல்ல. நான் இந்தச் சிறிய கிளைக்கதையை அனுபவித்தேன். இப்போது கையில் எடுத்துக் கொண்ட விஷயத்திற்குத் திரும்பச் செல்கிறேன்:

உங்களுக்கு ஏன் விவாகரத்து வேண்டும் என்று நீதிபதி அந்த இளைஞனைக் கேட்டார். மேன்மையானவரே, நான் குடிக்காமல் இருக்கும் போது அவளுடன் ஒத்துப் போக என்னால் முடியவில்லை, நான் குடித்திருக்கும் போது அவளால் என்னைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார்.

உங்களை யாராவது அழகானவர் என்று நினைக்காத போது, அது பெரும்பாலும் அவர்களைப் பற்றிய எண்ணம் தான் என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். (நீங்கள் இதை ஜோக்கின் படிப்பினையாக விளங்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.) மற்றவர்கள் விரும்பும் பொதுவான தளத்தில் வேலை செய்ய நீங்கள் கொஞ்சம் மாறலாம் ஆனால் அதைத் தாண்டி நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. மற்றவர்களிடமிருந்து ஒப்புதல்கள் என்ற வெற்றியைப் பெற வேண்டும் என்று விரும்பினால், அதுவே உங்களை வழிநடத்துகிறது என்றால், நீங்கள் அவர்கள் விரும்பும் விதத்தில் உடை அணிந்து அவர்களுக்குத் தக்கபடி நடந்து கொள்ளுங்கள். உலகைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ள நீங்கள் வீணாக விரும்பினால், நீங்கள் அதனுடைய பொருத்தமற்ற மற்றும் அருவருப்பான கைகளில் ஒரு கைப்பாவையாக விளையாட வேண்டும். நீங்கள் அதன் ஆடைக்கு விலை கொடுங்கள் ஆனால் அதன் விளைவுகள் இலவசமாக இணைக்கப்பட்டு வரும்.

ஒரு கணம் உங்கள் பார்வையில் இருந்து வெளியுலக ஆமோதிப்பை அகற்றுவதாக இருந்தால், உங்களைப் பற்றிய உங்கள் பார்வையில் இருந்து அவர்களின் அங்கீகாரத்தை விலக்கினால், நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னுடைய கருத்து என்னவென்றால், இப்படித்தான் நீங்கள் உங்களைப் பார்க்க வேண்டும். உங்களுடைய படத்தைப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் நீங்கள் அழகானவர் என்று கண்டுபிடிப்பதை விட நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நீங்கள் உங்களையே அழகானவர் என்று தெரிந்து கொள்வது கணக்கிடமுடியாத அளவு முக்கியமானதாகும். ஒருவரும் சாதாரணக் கண்களால் உங்களைப் பார்ப்பதில்லை; நீங்கள் யார் மற்றும் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது பொருந்த போவதில்லை. அவர்களின் பார்வை அவர்களுடைய நம்பிக்கைகள், உணர்வுகள் மற்றும் ஆசைகள் என்ற பூதக் கண்ணாடியால் வடிகட்டிய பார்வையாகும். அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களோ அதையே பார்க்கிறார்கள்— இங்குத் தான் அழகு தன் தனித்தன்மையை இழக்கிறது. பாதிக்கப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அது மதிப்பு வாய்ந்ததாகும். நீங்கள் உங்களைப் பற்றி உண்மையாக இருக்கும்வரையும், நீங்கள் உங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செய்தால், நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதாகும். இது ஒரு நீண்ட பதிப்பு. ஓ! அழகு கூட இழுபறியாகக்கூடும்.

உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள முடிந்தால், உங்களை நீங்களே முழுமையாக்கவும் முடியும். நீங்கள் முழுமையாக உணரும் போது, உங்களது கோப்பை நிரப்பும் போது, எல்லாம் அழகாகத் தெரிகிறது. நீங்கள் எதனுடன் இணைத்துக் கொள்கிறீர்களோ, எது உங்களுக்கு முக்கிய விஷயமாகத் தோன்றுகிறதோ, அதுவே அழகாகும். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.

யாரிடமாவது சென்று, அவர்கள் எப்படிக் கண்கவரும்படி இருக்கிறார்கள் என்றும், உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் எப்படி அழகாக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லுங்கள்! சொல்லி முடித்ததும், அதையே கண்ணாடியின் முன் திரும்பச் சொல்லுங்கள். உங்களுக்கே உங்கள் மேல் இன்னும் அன்பு ஏற்படவில்லை என்று என்னிடம் சொல்லாதீர்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email