நான் படிக்க விரும்புகிறேன், ஆனால் கவனம் செலுத்த முடியவில்லை.
நான் உடற்பயிற்சி செய்ய விரும்புகிறேன், ஆனால் அதற்குப் பதிலாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
விட்டு விட விரும்புகிறேன், ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
அமைதியாக இருக்க விரும்புகிறேன், ஆனால் கோபத்தில் என்னை இழக்கிறேன்.
மன்னிக்க விரும்புகிறேன், ஆனால் மறக்கவோ அல்லது மன்னிக்கவோ முடியவில்லை.
…(வெற்று இடத்தை நிரப்பவும்)… இருக்க விரும்புகிறேன், ஆனால் முடியவில்லை.
மற்றும் இன்னும் பல.

தினசரி அடிப்படையில், நம்பிக்கையின்மை மற்றும் ஏமாற்றம், உதவியின்மை மற்றும் காலந்தாழ்த்தல் பற்றிய கதைகளை நான் கேட்கிறேன். மிகுந்த நேர்மையுணர்வுடன் ஒரு குறிப்பிட்ட வழியில் செல்ல விரும்புவதாகவும், ஆனால் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், மீண்டும் பழைய பழக்க வழக்கங்களுக்குப் போய்விடுவதாகவும் பலர் என்னிடம் கூறுகிறார்கள். ஏன் நாம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைகிறோம், அல்லது வெற்றிக்கான பாதை (சிறிய முயற்சிகளில்கூட) ஏன் தடைகள் மற்றும் தடங்கல்கள் மேல் போடப்பட்டுள்ளது?

எளிய மற்றும் தெளிவான வகையில் உங்களுக்கான பதில் என்னிடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் முதலில், என் அடிப்படைத் தத்துவத்தை சிறப்பித்துக் காட்டும் ஒரு சிறிய கதை.

ஒரு வசதி படைத்த விவசாயி சொந்தமாகத் தென்னை மரங்கள், நிறையப் பசுக்கள் மற்றும் ஒரு சிறிய கோழிப் பண்ணையும் வைத்திருந்தார். கடல் மீது எழும்பும் அற்புதமான சூரிய உதயத்தின் போது எழுந்திருந்து, நட்சத்திரங்களால் ஒளிரும் வானத்தின் கீழ் தூங்கி, அவர் தனது மனைவி மற்றும் ஒரு செல்ல நாயுடன் ஒரு எளிய மற்றும் திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தார்.

“நமக்கு உதவி செய்ய, நம்முடனேயே தங்குவதற்குத் தயாராக உள்ள, ஒரு முழுநேர பண்ணைத் தொழிலாளி தேவை” என்று அவரது மனைவி கூறினார். தங்களிடம் பணிசெய்யும் பெரும்பாலான ஊழியர்கள் மாலையில் அவர்களது வீடுகளுக்குச் சென்று விடுவதாலும், தங்களுக்கும் வயதாகிக் கொண்டு வருவதாலும், தங்களுடன் ஒருவர் இருக்க வேண்டியது அவசியம் என்று அந்த விவசாயியும் ஒத்துக் கொண்டார். ஒரு வேலை காலியாக உள்ளதாகக் கிராமத்தில் அவர் சொல்லி வைத்தார். பலர் அந்த வேலைக்காக அவரை அணுகினர், ஆனால் ஒரு இளைஞர் அவரது உற்சாகம் மற்றும் தன்நம்பிக்கையுடன், குறிப்பிடும் படியாக நின்று கொண்டிருந்தார்.

“நான் ஏன் உன்னை வேலைக்கு அமர்த்த வேண்டும்?” என்று விவசாயி கேட்டார்.
“நான் நேர்மையானவன், கடின உழைப்பாளி, திறமையானவன்,” என்று அவர் பதிலளித்தார்.
“பெரும்பான்மையான விண்ணப்பதாரர்கள் இந்தக் குணங்களை இயல்பாகவே கொண்டிருக்கிறார்கள், என்று நான் கருதுகிறேன்.”
“இருக்கலாம், ஆனால் ஒரு பயங்கரமான புயலின் போதும் என்னால் தூங்க முடியும்,” என்று அந்த இளைஞர் கூறினார்.

அவரது தத்துவார்த்தமான பதில் விவசாயிக்கு மிகவும் பிடித்ததால், அவரைப் பணியில் அமர்த்தினார். அந்த உதவியாளர் கூறியபடியே, சளைக்காமல் வேலை செய்தார், மற்ற விவகாரங்களையும் நன்கு கவனித்தார். சில மாதங்களுக்குள், அவர் இருவரது நம்பிக்கையையும் முழுமையாக வென்றார், மேலும் அவர்கள் அந்த உதவியாளரை மேலும் மேலும் நம்ப ஆரம்பித்தனர்.

ஒரு இரவு, அவர்களுடைய நாய் அச்சுறுத்தும் விதமாக ஊளையிடத் தொடங்கியது. விவசாயியும் அவரது மனைவியும் அதைச் சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை. சீக்கிரத்தில், புயல் வரப்போவதை உணர்ந்தார்கள். அவர் படுக்கையில் இருந்து குதித்து விரைவாகத் தூங்கிக்கொண்டிருந்த தனது உதவியாளரிடம் விரைந்தார்.

“எழுந்திரு! ஒரு பெரிய புயல் வருகிறது!” என்று விவசாயி அவரை உலுக்கினார்.
“இங்கிருந்து போங்கள்,” என்று அவர் முகத்தின் அருகில் விவசாயி காட்டிய பிரகாசமான வெளிச்சத்தைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தபடி பதில் கொடுத்தார்.
“இது அபத்தமானது! நான் சொல்கிறேன், எழுந்திரு!”
“நான் கடுமையான புயலிலும் தூங்க முடியும், என்று உங்களிடம் சொல்லியிருக்கிறேன்,” என்று அவர் பிடிப்பில்லாத குரலில் பதிலளித்து மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.
“காலையில் நான் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்!” என்று கத்திவிட்டுத் தனது உடைமைகளைக் காப்பாற்ற, அந்த விவசாயி தன் மனைவியுடன் வெளியே ஓடினார். பலத்த புயல் காற்று வீசியது மற்றும் தொடர்ந்து வானம் இடி இடித்துக் கொண்டிருந்ததால் ஒருவருக்கொருவர் கேட்கக் கூடக் கடினமாக இருந்தது.

அவர்கள் முதலில் கொட்டிலுக்குச் சென்றனர். கோதுமை மற்றும் வைக்கோல் கட்டுகள் கொட்டிலில் ஒரு தார்பாலினால் சுற்றப்பட்டுப் பாதுகாப்பாக ஆதாரக் கயிற்றினால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்ததை முதலில் பார்த்தனர். பண்ணைக் கருவிகள் அதன் அருகில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. களஞ்சியம் ஒழுங்காகப் பூட்டப்பட்டிருந்தது, மற்றும் பசுக்கள் அமைதியாகவும், திருப்தியாகவும் இருந்தன. அவற்றிற்கு ஏராளமான தீவனமும், தண்ணீரும் அதன் தொட்டியில் இருந்தன. கொட்டிலும் கதவும் ஒழுங்காகப் பூட்டப்பட்டு இருந்தது. எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தன.

“சரிதான், நிச்சயமாக ஒரு பயங்கரமான புயலிலும் தூங்கத் தயாராகவே இவர் இருக்கிறார்” என்று மனைவி விவசாயியிடம் கூறினார்.

துரதிஷ்டங்கள், சபலங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம், ஆனால் அதற்கான முக்கியக் காரணி, முன்னேற்பாடே ஆகும். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புவது, ஒரு குறிப்பிட்ட வழியில் இருக்க வேண்டுமென்று விரும்புவது, முக்கியமானது என்றாலும், இது ஆரம்பம் மட்டுமே. உண்மையில், இது எளிதான பகுதியாகும். நீங்கள் சரியான அறிவையும் அனுபவத்தையும் பெற்றிருக்கிறீர்களா (அல்லது குறைந்தபட்சம் தெரிந்து கொள்ள உறுதியுடன் இருக்கிறீர்களா), இல்லையா என்பதே வெற்றிக்கான நிகழ்வுகளைத் தீர்மானிக்கிறது.

சமீபத்தில், என் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் நாளில், எங்கள் ஏ.வி. விற்பனையாளர் (AV vendor) இரண்டு வேலைகளை எடுத்துக் கொண்டிருந்ததால், எங்கள் நிகழ்ச்சியைக் கையாள அவரின் இடத்தில் ஒரு அனுபவமற்ற நபரை அனுப்பி இருந்தார். நிகழ்வுகளைக் கையாளும் திறமையான முக்கிய அணி மற்றும் அர்ப்பணிப்புடனான தொண்டர்களைக் கொண்ட எங்கள் கூட்டம், அந்த ஆடியோ (PA) அமைப்பின் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம் என்று உணர்ந்தார்கள்.

“மன்னிக்கவும், சுவாமி, இதுபோல் நாளை நடக்காதபடி நாங்கள் உறுதி செய்து கொள்கிறோம்,” என்று யாரோ என்னிடம் வந்து பின்னர் சொன்னார்கள்.
“மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால், துரதிருஷ்டவசமாக அந்தச் சிக்கலைச் சரிசெய்வது சாத்தியமில்லை,” என்று நான் சொன்னேன்.
“நான் தனிப்பட்ட முறையில் அந்தப் ஆடியோ (PA) அமைப்பினைப் பார்த்துக் கொள்கிறேன்,” என்று இன்னொருவர் தானே முன்வந்தார்.
“நான் அதைப் பாராட்டுகிறேன், ஆனால் நீங்கள் ஒரு நிபுணரா? தயவு செய்து அந்த விற்பனையாளரையே இங்கே கூட்டிக் கொண்டு வர முயற்சிக்கவும்,” என்று நான் பதிலளித்தேன்.

அவர்களைத் பாராட்டும் வகையில், அவர்களே அதைச் செய்ய முற்பட்டு, பின் அந்த விற்பனையாளரையே அழைத்து வந்து, சில மாற்றங்களைச் செய்தனர். மீதமுள்ள திட்டம் புதிய வெண்ணெய்யைப் போன்று (நான் பசுக்கள் மற்றும் களஞ்சியங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால், வேறு ஒரு சரியான ஒப்புமை எனக்குக் கிடைக்கவில்லை) மென்மையாகச் சென்றது.

பிறகு, நோக்கம் மற்றும் திறமை இடையேயான வேறுபாட்டை நான் விளக்கினேன். ஒன்று, நாம் ஏதாவது ஒன்றைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பது, மற்றது அவ்வாறு செய்வதற்கான திறமையைக் கொண்டு இருப்பது. சில நேரங்களில் நீங்கள் யாருக்காவது உதவ விரும்புகிறீர்கள் அல்லது மற்ற நபர் உங்களுக்கு உதவ விரும்புகிறார் என்றால் அது மிகவும் நல்லது, ஆனால் சரியான திறமை உங்களிடம் இல்லாத வரை, எண்ணத்தால் மட்டுமே பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை. நோக்கம் மற்றும் திறன் அவற்றின் இடையே உள்ள இடைவெளியால் தான் நம்மில் பலர் நமது காரியங்களில் தோல்வியைச் சந்திக்கிறோம். உதாரணமாக நீங்கள் ஒரு பெரிய படம் வரைபவராக இருக்கலாம், ஆனால் உங்கள் படங்கள் விற்பனை ஆகவில்லையென்றால், விற்பனை திறன்களைக் கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பகுதியின் வெற்றிக்கும் வேறு வேறு திறமை தேவைப்படுகிறது. ஒருவேளை, அதனால்தான், கற்றல் என்பது ஒரு வாழ்நாள் முழுவதற்குமான செயல்முறை ஆகும்.

நீங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறீர்கள், ஆனால் இதற்கான திறமையை நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் ஒரு கேக் செய்து உங்கள் துணைவரை ஆச்சரியப்படுத்த ஆசைப்படுகிறீர்கள், ஆனால் உங்களுக்கு பேக்கிங் தெரியுமா? அத்துடன், கேக் ஒரு செங்கல் போல் ஆகிவிட்டால் (கரிக்கட்டை ஆகாது என்று நம்புகிறேன்) உங்கள் துணைவர் பாராட்டவில்லை என்றால், நீங்கள் மோசமாக உணர்வீர்களா? உங்கள் நோக்கத்துடன் ஒத்திருக்கும்படியாக உங்களால் செயலையும் செய்ய முடியுமா? நாம் அக்கறை காட்ட, அன்பு செலுத்த, வெற்றிபெற மற்றும் இதுபோல் பலவற்றை விரும்புகிறோம், ஆனால் அதற்கான தகுதி இல்லாத நிலையில், அதற்குச் சாத்தியமே இல்லை. வாழ்வில் நாம் அறிந்த எல்லாவற்றையும், எங்காவது கற்றுக் கொண்டுள்ளோம். நாம் அடிக்கடி எதைச் செய்கிறோமோ, எதைப் பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ, எதில் பயிற்சி எடுத்துக் கொள்கிறோமோ அதை நாம் நன்றாக அறிந்திருக்கிறோம். எல்லாவற்றிற்கும் தேவையானது இது மட்டும் தான்: நாம் எதைச் செய்ய வேண்டுமென விரும்புகிறோமோ அதன் பின்னால் உள்ள திறமையை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மேதை ஒருமுறை என்னிடம் சொன்னார், “ஒரு தொழிலில் பண்பட்டவரைப் பணியமர்த்துவதை விட அதிக விலை, ஒரு தொழில் கற்றுக் கொள்பவரை (அமெச்சூர் – amateur) பணியமர்த்துதலே ஆகும்.”

ஒரு ஆரவாரமான சந்தையில் மயங்கி விழுந்த ஒரு முதியவரைச் சுற்றி ஒரு சிறிய கூட்டம் சேர்ந்தது. ஒரு பெண், அவரை மீண்டும் உணர்வுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த போது, ஒரு மனிதர் அந்தக் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தார்.

“பெண்ணே, நகர்ந்து கொள்! நான் முதலுதவி நிபுணர். சரியாக என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்,” என்று அவர் கூச்சலிட்டார்.
அந்தப் பெண் பேசுவதற்கு முயற்சி செய்தார், ஆனால் அவர் எதையும் கவனிக்கவில்லை. கடைசியாக அந்தப் பெண் தனது கைகளைக் கட்டிக் கொண்டு பக்கவாட்டில் நின்றார். அந்த மனிதர் முதியவரைப் புத்துணர்ச்சியுறச் செய்ய வெறித்தனமான முயற்சிகளை மேற்கொண்டார்.
“நீ இப்போது மருத்துவரை அழைக்கும் கட்டத்திற்கு வரும்போது, நான் இங்கேயே இருக்கிறேன்,” என்று அந்தப் பெண் அமைதியாகக் கூறினாள்.

எதுவாக இருந்தாலும், நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ, நீங்கள் அதாகத் தான் ஆக விரும்புகிறீர்கள். அதை அடைய, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட அல்லது வேலை செய்ய விரும்புகிறீர்கள். அது உங்கள் நோக்கம். நீங்கள் உண்மையில் உங்களின் விருப்பப்படி செயல்பட முடியுமா என்பதே திறமையைப் பற்றிய விஷயம் ஆகும். நல்ல செய்தி என்னவென்றால், நியாயமான நேரம், வழிகாட்டல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டு, நம்மில் ஒவ்வொருவரும் எந்தத் திறமையிலும் தேர்ச்சி பெறத் தகுதியானவர்கள்.

அடுத்த முறை, உங்கள் முயற்சிகள் உங்கள் இலக்குக்கு அருகே உங்களை அழைத்துச் செல்லவில்லை என்பதைக் கண்டறிந்து கொண்டீர்கள் என்றால், உங்கள் நோக்கத்தை எழுதி, அதன் அடியில் உங்கள் எண்ணத்துடன் ஒத்து செயல்படுவதற்குத் தேவையான திறனையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அனைத்துக் குழப்பங்களும் மறைந்து விடும். அந்தத் திறனில் கடுமையாக உழையுங்கள் மற்றவை தானாக நிகழ்ந்துவிடும்.

எண்ணம் மற்றும் திறன் இடையே உள்ள இடைவெளியில் ஒரு பாலம் அமையுங்கள்; பின் வெற்றி அதிக தூரத்தில் இல்லை. அந்தப் பாலம் கட்டத் தொடங்குவதற்கு எந்த நேரமும் தாமதமான நேரம் இல்லை. இப்போதே ஆரம்பிக்கச் சரியான தருணமாக இருக்கும்.
இன்னுமா காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email