நான் என் தொழிலில் வெற்றி பெறுவேன் என்று என்னை ஆசீர்வதியுங்கள். நான் நிறையப் பணம் ஈட்டவேண்டும் ஆனால் அவை எனக்காக அல்ல! நான் மற்ற மக்களுக்கு உதவுவதற்காக செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறேன்.

ஒரு தொழிலை உருவாக்குவதோ அல்லது பணம் சம்பாதிப்பதோ, அதனால் நாங்கள் மற்றவர்களுக்கு உதவலாம் என்பது தான் ஒரே காரணம் அல்லது முதன்மையான காரணம் என்று மக்கள் சொல்ல நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பல முறை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு உள்ளூர சிரிப்பு வருகிறது, ஏனெனில் நிலையான தொழில்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்படுபவை அல்ல. உங்கள் பொருட்களை அல்லது சேவைகளை வாங்குகிற [அல்லது பயன்படுத்துகிற] மக்களின் வாழ்வை மதிப்புள்ளதாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை. இத்தகைய மதிப்பில் இருந்து நீங்கள் வருவாயை ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் மற்றவர்களுக்கு உதவ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு நீங்கள் என்ன வழங்குகிறீர்களோ, அதன் மூலம் மதிப்பை உருவாக்கிக் கொள்வது தான் ஒவ்வொரு தொழிலுக்கும் முதன்மையான காரணமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையேல் அதில் லாபம் வருவதற்கான எவ்வித நம்பிக்கையும் இருக்காது.

இலாபம் அளிப்பதாக இருந்தால் தான் எந்த ஒரு தொழிலும் நிலைக்க முடியும். இலாபகரமான மற்றும் சமாளிக்கக் கூடியதுமான வளர்ச்சி மட்டுமே ஒரு தொழில் துறையின் தர்மம் ஆகும். நிச்சயமாக ஒரு சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில் துறை, சமுதாயத்திற்கு உதவும் திட்டங்களை இயக்கக் கூடும். ஆனால், முதலில் ஒரு வருமானத்தைப் பெறத் தொடங்கினால் மட்டுமே இவை எல்லாம் சாத்தியமாகும். தவிர, உங்களை உந்துகின்ற முதன்மை சக்தி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதாக இருந்தால், ஒரு தொழிலை ஆரம்பிப்பதில் உங்களது பார்வை இருக்கக் கூடாது, எப்படி உதவுவது என்று தொலை நோக்கிப் பார்த்திருக்க வேண்டும். எப்படியோ, என் கவனம் இன்று தொழில்களை வளர்ப்பதைப் பற்றி அல்ல. மாறாக உங்கள் இலக்கு, பொருள் அல்லது ஆன்மீகம் எதுவாக இருந்தாலும், வெற்றியை அடைவதற்கான வழியின் ஒரு மிக முக்கியமான பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

நீங்கள் எந்த விஷயத்தை மேற்கொண்டாலும், நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், நீங்கள் வெற்றி பெறுவதற்கு மிகவும் அடிப்படையான மூலப்பொருள் ஒன்றை அடைய வேண்டும். அது என்னவென்றால்: எண்ணத்தில் தூய்மை. உங்கள் எண்ணம் தூய்மையாக இருந்தால், இயற்கையாகவே நீங்கள் உறுதியையும், உள் வலிமையையும் பெறுவீர்கள். பிரபஞ்சம் உங்களுக்கு வேறு வளங்களை வழிவகுத்துக் கொடுக்கும், நீங்கள் வெற்றியை ருசிப்பீர்கள். எண்ணத் தூய்மை என்பதன் மூலம், நான் பெருந்தன்மை அல்லது அறநெறி பற்றிய கருத்தைக் குறிப்பிடவில்லை. அறநெறிக் கோட்பாடுகள் கலாச்சாரத்திற்குக் கலாச்சாரம் மாறுபடுகின்றன. நான் தூய எண்ணம் என்று சொல்லும் போது, நான் எந்த மதம் அல்லது நன்னடத்தைக் கோட்பாடுகளைப் பற்றி குறிப்பிடவில்லை. இந்த நல்லொழுக்கங்கள் வேறு காரணங்களுக்காகத் தேவையாக உள்ளது. தற்போதைய சந்தர்ப்பத்தில், எண்ணத் தூய்மை என்பதன் மூலம் உங்களது காரணத்தில் உண்மையாக இருங்கள், உங்களிடமே நீங்கள் உண்மையாக இருங்கள் என்ற அர்த்தத்தில் தான் நான் கூறுகிறேன்.

உதாரணத்திற்கு, ஒரு மருத்துவ மாணவர் ஒரு மருத்துவர் ஆகும் ஆர்வத்துடன் இருந்தால், அவரது ஒரே கவனம் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்று, நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்வில் தேர்ச்சி அடைவது தான் அவருக்குத் தேவையான எண்ணத் தூய்மையாகும். உங்களது முதன்மை நோக்கம் ஏழைகளுக்குச் சிகிச்சை அளிப்பதே எனப்பேச ஆரம்பித்தால் அந்தக் கணத்திலிருந்தே நீங்கள் உங்களிடமே உண்மையுள்ளவராக இருக்கமாட்டீர்கள். அது உங்களது உண்மையான நோக்கமானால் (அரிதாக இருந்தாலும் மிகவும் சாத்தியமானது), உண்மையில் மருத்துவ உதவி வழங்குவதற்காக ஒரு கிராமத்தில் வாழுத் தொடங்குவீர்கள்.

ஆனால் வாழ்க்கையில் ஆடம்பரங்களும், கவர்ச்சியான நகரத்தில் வாழ்வதும் உங்களது கனவு என்றால், ஏழைகளுக்கான சிகிச்சையைப் பற்றி நீங்கள் தீவிரமாக இருக்க முடியாது. இதோ ஒரு முக்கியமான விஷயம்: ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவதும் சரியே, அது உங்களை ஒரு தரம் குறைந்த மனிதராக ஆக்குவதில்லை. ஆனால் அது தான் உங்களுக்குத் தேவை என்று இருந்தால், பின் நீங்கள் அதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும். அதையே உங்கள் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். இரண்டையும் கலக்க வேண்டாம். நீங்கள் ஒரு மருத்துவராக ஆகி, உலகின் மிக விலையுயர்ந்த நகரில் பயிற்சியைத் துவக்கிய பின்னும், நீங்கள் நிறைய நல்ல காரியங்களைச் செய்யலாம். அது நமது விஷயத்திற்கு அப்பாற்பட்டது. முதலில் அந்த இடத்தை அடைவதற்கு, உங்களுக்கு ஒருமுகப்பட்ட கவனமும், தூய எண்ணமும் தேவையாகும்.

பழுது பார்க்கத் தேவையான வகையில் ஒரு பழைய தேவாலயம் இருந்தது. சீரமைப்புச் செலவு $100,000 என மதிப்பிடப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தில் பங்கேற்க எவரும் அக்கறை காட்டவில்லை. ஞாயிறு பிரார்த்தனையின் முடிவில், அந்தப் பாதிரியார் அந்தக் கூட்டத்தில் நிறைந்திருந்த உறுப்பினர்களிடம், “நான் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் வைத்திருக்கிறேன். எதை முதலில் கேட்க விரும்புகிறீர்கள்?”, என்று அறிவித்தார்.
“நாம் சில நல்ல செய்தியுடன் ஆரம்பிக்கலாம்!” என்று பெரும்பான்மையான மக்கள் கூறினர்.
“சரி அந்த நல்ல செய்தி, நம் தேவாலயத்தைப் புனரமைப்பதற்குத் தேவையான $100,000 கிடைத்துவிட்டது!” என்று அந்தப் பாதிரியார் உற்சாகமாகப் பேசினார்.
அந்த அறிவிப்பு ஒரு இடிமுழக்கம் போன்ற கரவொலியைப் பெற்றது.
“இப்போது அந்தக் கெட்ட செய்தி. பெரியோர்களே, தாய்மார்களே, அந்தப் பணம் இன்னும் உங்கள் பைகளில் தான் உள்ளது,” என்று அவர் ஒலிபெருக்கியின் மிக அருகில் சென்று கூறினார்.

நாம் அனைவரும் நம் வாழ்க்கையில் ஏதாவது செய்யவேண்டும் என்றால் அதற்குத் தேவைப்படும் எல்லா வளங்களும் ஏதாவது ஒரு வழியில் ஏற்கனவே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளது. அந்த வளங்களை ஒன்றாய்க் கொண்டு வருவது எண்ணத்தில் உள்ள தூய்மை தான். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் உங்களுக்குக் குழப்பம் இல்லை என்றால், உங்களது செயல்கள் உங்கள் நோக்கத்துடன் ஒத்து இருந்தால், நீங்கள் உங்களது வெற்றியின் சரியான வழியில் தான் சென்று கொண்டு இருக்கிறீர்கள்.

சில நேரங்களில் தொழிலதிபராக ஆக விரும்பும் ஒருவர் வந்து, அவர் ஒரு தொழிலை உருவாக்க விரும்புவதாகவும், அதன் மூலம் அவர் பல பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுத்து உதவ விரும்புவதாகவும் கூறுவர். இது தான் உங்களது உண்மையான நோக்கம் என்றால் அதற்கு ஏன் ஒரு தொழிலை உருவாக்க வேண்டும்? அதற்குப் பதிலாக ஒரு ஆட்சேர்ப்பு ஆலோசகராக ஆகலாம். அதில் நீங்கள் இன்னும் பல மக்களுக்கு நல்ல வேலைகளைக் கண்டுபிடித்துக் கொடுத்து உதவுவீர்கள். உங்களுக்கு எது மிகவும் முக்கியமானது என்று நீங்களே முடிவு செய்யுங்கள். (அ) உங்களுக்குப் பிடித்திருக்கிற அந்தக் காரை அல்லது நீங்கள் கனவு கண்ட அந்த வீட்டைக் கட்டுவதற்காக இலாபகரமான தொழிலை உருவாக்குகிறீர்களா அல்லது (ஆ) உண்மையில் மக்களுக்கு உதவுவதற்காகவா.

மக்களுக்கு உதவுவது என்றால் என்னை நம்புங்கள், நீங்கள் சொத்து சேர்க்கத் தேவையில்லை. ஏற்கனவே உள்ள வளங்களின் ஆதாரத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். நமது உலகம் முழுவதும் எல்லையற்ற தாராள குணம் படைத்த பல அருமையான மக்கள் இருக்கிறார்கள். நான் வழக்கமாக இத்தகைய மக்களைச் சந்திக்கின்றதன் அடிப்படையில், எனது நேரடி அனுபவத்தில் இருந்து இதைச் சொல்லுகிறேன். அவர்கள் சமூகக் காரணங்களில் பங்கேற்க, மற்றும் பலவழிகளில் உதவ ஆர்வமாக உள்ளனர். நீங்கள் உண்மையில் உதவ விரும்பினால், உங்களது பாதையில் நிறையப் பேர் வந்து சேர்ந்து கொள்வதை நீங்கள் காணலாம்.

மற்றொரு நாள் யாரோ ஒருவர் ஒரு குறுகிய வீடியோவினை (காணொளி) என்னுடன் பகிர்ந்து கொண்டார். 3 நிமிடங்களுக்கும் குறைவான இந்த வீடியோ, நிறையச் சாமியார்கள், சுவாமிகள் (என்னையும் சேர்த்து), போதகர்கள் மற்றும் குருக்களை விட உயர்ந்த ஒரு மனிதரைக் காட்டுகிறது. உண்மையில் ஒரு காரணத்திற்காக உறுதியாக இருக்கும், யாரோ ஒருவர் இங்கே உள்ளார் என்று அதைப் பார்த்து நான் நினைத்தேன். நமது உலகில் அரசியல் கட்சிகள் அதிகப்படியான வாக்குகளுக்காகவும், நாடுகள் பிராந்தியங்களின் மீதும், மதத்தலைவர்கள் நம்பிக்கைகள் மீதும் போராடிக் கொண்டிருக்கும் போது, இங்கே மக்களுக்காகக் களத்தில் இறங்கி உதவி செய்துகொண்டு இருக்கிறார் ஒருவர். உண்மைக்காக வாழ்ந்து கொண்டு, அதைப் பற்றி பேசிக் கொண்டோ அல்லது புத்தகங்களை எழுதிக் கொண்டோ இல்லாமல் (அல்லது பதிப்புகளை எழுதிக் கொண்டோ இல்லாமல், நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டால்), இதோ ஒரு மனிதர் இருக்கிறார்.

நான் எப்போதும் என் பதிப்புக்களில் (மிகவும் ஆரம்ப நாட்களில் என் சொந்த சொற்பொழிவுகளைத் தவிர) ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டதாக எனக்கு நினைவு இல்லை. ஆனால் இந்த ஒரு வீடியோவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன். ஒரு துறவியைப் போல் என்னைப் பார்ப்பவர்களுக்கு, இதோ இந்த வீடியோவில் ஒரு மிகப் பெரிய துறவி, ஒரு உன்னதமான துறவி, இன்றைய உலகத்திற்கு உண்மையில் தேவையான விதத்தில் ஒரு துறவி இருக்கிறார். ஆன்மீகப் பாதையில் எவ்வாறு நடக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள என்னிடம் வருபவர்களுக்கு, நான் சொல்ல வருவது என்னவென்றால், என்னைப் பின் தொடர்வதற்குப் பதிலாக, இந்த வீடியோவில் உள்ள மனிதரிடம் இருந்து கற்றுக் கொள்வது உங்களை ஒரு சிறந்த மனிதராகவும், மற்றும் நீங்கள் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று நான் கூறுவேன். நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அது நடவடிக்கையில் காட்டப்பட்டுள்ள ஆன்மீகமாகும். ‘சாதனா’ சேவையில் தொடங்குகிறது, அது நிச்சயமாகச் சேவையில் தான் முடிவடைகிறது.

இந்த வீடியோவின் மிகப் பெரிய படிப்பினையாக நான் எதைப் பார்க்கிறேன் என்றால், எவர் ஒருவருடைய எண்ணம் தூய்மையாக உள்ளதோ, அவரது முயற்சி நேர்மையானதாக உள்ளதோ, அவர்களுக்கு எதுவுமே ஒரு தடையாக இருக்க முடியாது என்பதாகும். வறுமையே சேவைக்கு வழி என்று நான் பரிந்துரைக்கவில்லை. உங்களது உள்நோக்கம் ஒன்றிலேயே குறியாக உள்ள போது, செல்வத்தின் பற்றாக்குறை ஒருபோதும் உண்மையான தடையாக இருக்காது.

நீங்கள் விரும்புவதைப் பற்றித் தெளிவாக இருக்கவும். உங்களது உண்மையான நோக்கம் என்னவோ அதில் தான் நீங்கள் உண்மையிலேயே அக்கறையுடன் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களது உண்மையான நோக்கத்தில் நேர்மையுடன் இருந்தால், நீங்கள் சிறந்த தேர்வுகளைச் செய்ய அது உதவும். எப்போதும், நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால், உங்களது எண்ணத்தை ஆய்வு செய்தால் எந்த வழியில் நீங்கள் செல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவரும். அதைப் பற்றி நேர்மையாக இருங்கள். பின் அனைத்தும் செய்யக் கூடியவை ஆகும். கிட்டத்தட்ட.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email