கர்மாவின் கணக்கைப் பற்றிய கருத்தை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நல்ல சிறிய கதையே எனது இயற்கையான தொடக்கமாக உள்ளது. இதோ:

ஒரு முறை ஒரு சிறிய கிராமத்தில் அனைவரும் பொருளாதார ரீதியாகக் கடனாளியாக இருந்தனர். அதன் மக்கள் உள்ளூர் வர்த்தகத்தை அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர். விவசாயிகள் கடனாகப் பொருட்களை வாங்கிக் கொண்டு அறுவடைக்குப் பின்னர் பணத்தை, பணமாக உதவி செய்பவருக்குக் கொடுத்தனர். அந்தப் பண உதவி வழங்குபவர் இதற்கான முதலீட்டைக் கடனாகப் பெற்று விவசாயியிடமிருந்து பணம் கிடைத்ததும் தனது கடனை அடைத்து விடுவார். அடிப்படையில், எல்லோரும் யாரோ ஒருவரிடம் கடன்பட்டிருந்தனர். அந்தத் கிராமத்தில் விடுதியைப் போன்ற ஒரு உணவகம் இருந்தது. ஒரு நாள், அருகில் இருந்த ஒரு ஊரிலிருந்து ஒரு பணக்கார வியாபாரி அங்கு விஜயம் செய்தார். அன்று இரவு அங்குத் தங்க எண்ணினார். அந்த விடுதிக்குச் சென்று அங்குத் தங்குவதற்கு முன் அங்குள்ள அறையைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலாளர் அதற்கு ஒப்புக்கொண்டு நூறு டாலர்கள் பாதுகாப்பு வைப்புத் தொகை தேவைப்படும் என்று அவரிடம் கூறினார். அவர் அறையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அந்தப் பணம் திருப்பித் தரப்படும் என்றார். இதனால் எந்தத் தீங்கும் இல்லை என்ற எண்ணத்துடன் அந்த வணிகர் ஒரு நூறு டாலரைக் கொடுத்தார். மேலாளர், வணிகருக்கு மேல் மாடியில் ஒரு அறையைக் காட்டச் சொல்லிப் பணியாளிடம் கூறினார்.

அவர்கள் அறையை நோக்கி நகரத் தொடங்கியதும் மேலாளர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு விடுதியை விட்டு வெளியே ஓடினார். அவர் அருகில் இருந்த கடைக்குச் சென்று அவர் கொடுக்க வேண்டிய பாக்கியான நூறு டாலரைக் கொடுத்து விட்டு விடுதிக்குத் திரும்பினார். மேலும், கடை உரிமையாளர் விவசாயியிடம் விரைந்து சென்று அதே அளவிலான அவரது கடனைத் தீர்த்தார். அந்த விவசாயி ஒரு தனியார் வங்கியாளரிடம் நீண்ட நாளைய தனது கடன் பணத்தைத் திருப்பித் தர வேண்டியிருந்ததால் சந்தடி செய்யாமல் ஓடிச் சென்று கடனை அடைத்தார். அந்தக் கடன் கொடுத்தவர் ஒரு விலை மாதுக்கு, அவர் தர வேண்டிய பணத்தை அனுப்பி வைத்து அதன் மூலம் தனது கடனைத் தீர்த்துக் கொண்டார். அந்த விலை மாது தனது தொழிலுக்காக ஒருமுறை அந்த விடுதியில் ஒரு அறையைப் பயன்படுத்தி இருந்தாள். அதற்காக அவள் அந்த விடுதிக்குப் பணம் தர வேண்டி இருந்தது. தனது பெயரைக் காத்துக் கொள்ள அவள் அந்த விடுதி மேலாளரிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து அவருக்கு நன்றி கூறிவிட்டு தனது வழியில் சென்றாள். அந்த நேரத்தில் வணிகர் வந்து, அந்த அறை அவர் எதிர் பார்த்தபடி இல்லை என்றார். விடுதி மேலாளர் நூறு டாலரை அந்த வணிகரிடம் ஒப்படைத்ததும் அந்த வணிகர் அங்கிருந்து சென்றார்.

ஒருவருடைய பையிலும் பணம் இல்லை ஆனால் முழு கிராமமும் கடனற்றதாக ஆனது. அனைவரும் தங்களது மன அழுத்தம், தவணை மற்றும் கடனிலிருந்து விடுபட்டனர்.

இதேபோல், இயற்கையின் நாடகத்தில் அதன் எல்லா விஷயங்களிலும் அதன் அடித்தளம் மாறுவதில்லை. எவ்வளவு கொள்ளளவானதாக இருந்தாலும், தனிப்பட்ட பரிமாற்றத்தின் தன்மையானாலும் அதன் மொத்தக் கூட்டுத் தொகை எப்பொழுதும் ஒரே அளவில் உள்ளது.

உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடன் தொகை சேர்ந்திருந்தால் நீங்கள் ஒருவரே அதைத் திரும்பச் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட வங்கி மேலாளர் உங்கள் சிறந்த நண்பர் என்றும் உங்களுக்குக் கொஞ்சம் தொகை வேண்டும் என்றும் கொள்வோம். அவரது வங்கியில் இலட்சக் கணக்கில் பணம் இருப்பதால், ஒருவரின் கணக்கில் இருந்து அல்லது யாருடையதாவது கணக்கில் இருந்து, அவர் கொஞ்சம் பணம் உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற வாதத்துடன் அவரை அணுக முடியாது. அவர் விரும்பினாலும் கூட, அதை அவரால் செய்ய முடியாது.

நீங்கள் சம்பாதிக்காததை இயற்கை உங்களுக்குக் கொடுக்க முடியாது. அதே போல் உங்கள் கணக்கில் உள்ளதை உங்களிடமிருந்து எடுக்கவும் முடியாது. இயற்கை பாரபட்சமற்றது. நீங்கள் பணம் எடுக்க வேண்டுமானால் அதற்கு முன் உங்கள் கணக்கில் பணம் போட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்வது, உங்களது நடவடிக்கைகள் ஆகியவை, முற்றிலும் உங்கள் சொந்தப் பொறுப்பிலேயே உள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் ஒரு தனி கர்மாவின் கணக்கு உண்டு. அது களங்கமில்லாமல் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது மற்றும் அதில் தவறுகளே இல்லை. ஒருவர் உங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்ததால், நீங்கள் அவருக்கு வருத்தத்தைத் திருப்பிக் கொடுத்தால், அது உங்கள் பரிவர்த்தனையை ரத்து செய்யாது. நீங்கள் இருவரும் உங்கள் நடவடிக்கைகளுக்குத் தனித்தனியே பொறுப்பேற்கும்படி இருக்கும்.

ஈர்ப்பின் சட்டமும், கர்மாவின் சட்டமும் ஒன்றுடன் ஒன்றாக நன்கு இணைந்து செயல்பட இயலும், ஆனால் ஒருவர் மோசமான கர்மாவைச் செய்துவிட்டு நல்ல விஷயங்களை ஈர்க்கும் திறமைசாலியாக இருப்பதும் சாத்தியம். இதுவே தலைகீழாக நடப்பதும் உண்மை – ஒருவர் அற்புதமான மனிதராக இருக்கலாம், இருந்தும் அவர் பயங்கரமான விஷயங்களை ஈர்க்கலாம். நல்லதோ அல்லது கெட்டதோ, அது அவரது கர்மாவின் கடனிலிருந்து அவரை விடுவிப்பதுமில்லை, அவரது கர்மாவின் பதிவு அழிக்கப்படுவதுமில்லை. இது இயற்கையால் தனித்தனியாகக் கையாளப்படுகிறது. இந்தக் காரணத்தால் தான் சில நேரங்களில் உங்களால் கெட்டவர் என்று அழைக்கப்படுபவர் தங்களது கடைசி மூச்சு வரை தொடர்ந்து வளமாக இருக்கிறார். வாழ்வில் விரும்பிய விஷயங்களை அவர்களால் ஈர்க்க முடிகிறது.

நல்ல கர்மா, நீங்கள் வரையறுக்கும் வெற்றியைக் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் போகலாம். அது பொருட் செல்வம் மற்றும் கவர்ச்சியுடனான வாழ்வைக் கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் தவறாமல், அது நிச்சயமாக அமைதி மற்றும் மனநிறைவு என்ற வெகுமதியை உங்களுக்கு அளிக்கும். உங்கள் உள்மனம் அமைதியாக இருக்கும் போது நல்ல கர்மாவைத் தான் உங்களால் செய்ய முடியும். நீங்கள் உள்ளே மகிழ்ச்சியாக இருந்தால், நீங்கள் உங்கள் வார்த்தைகள் அல்லது சைகைகள் மூலம் யாரையும் காயப்படுத்தமாட்டீர்கள். எல்லாவற்றிலும் அழகையே பார்ப்பீர்கள். இன்னும் அதிக நல்ல கர்மாக்களை மட்டுமே செய்து அவர்களுடைய இதயங்களைக் கரைத்துவிடுவீர்கள். நீங்கள் உள்ளே கசப்புடன் இருந்தாலும், நீங்கள் கோபமாக இருந்தாலும், உங்களை ஆற்றிக் குணப்படுத்திக் கொள்வதை மிகவும் கடினமாக உணர்வீர்கள். காயமடைந்த சிங்கம் அல்லது பயந்துபோன பாம்பைப் போல், அடுத்தவர் மேலும் வருத்தம் அடைவதற்கு நீங்கள் காரணமாகி, இறுதியில் உங்களுக்கே அது இன்னும் அதிக வேதனையை விளைவிக்கும். மகிழ்ச்சியும், நல்ல கர்மாவும் ஒன்றுக்கொன்று நிறைவு செய்வதாகவும் மற்றும் எரிபொருளாகவும் இருக்கும்.

எனவே, அமைதி உங்களுக்கு முக்கியம் என்றால், அது உங்களது கர்மாவின் கணக்கு மூலம் அளிக்கப்படும் நிதியுதவி என்று தெரிந்து கொள்ளுங்கள். இருப்பு அதிகம் இருந்தால், அமைதி அதிகம் இருக்கும். அமைதி நிலையில் மட்டும் தான் ஒருவர் எந்த ஒரு சந்தோஷத்தையும் உணர முடியும். இறுதியில், ஏன் பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள், விடுமுறையில் செல்கிறார்கள், வெளியே சாப்பிடுகிறார்கள், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார்கள், வசதிகளை விரும்புகிறார்கள்? அனுபவிக்க, சரியா? சந்தோஷமாக இருக்க, தங்களுடனும், தங்களைச் சுற்றியுள்ளவர்களுடனும், உலகத்துடனும் சுமூகமாக இருக்க.

உங்கள் எதிர்பார்ப்புகளில், ஆசைகளில், சிலவற்றைத் துறப்பதில் சந்தோஷமாக இருந்தால், இன்னும் கொஞ்சம் மன்னிப்பதற்குத் தயாராக இருந்தால், உங்களுடனும், மற்றவர்களுடனும் இன்னும் சிறிது நேர்மையாக இருந்தால், நீங்கள் அமைதியில் இருப்பதைக் காண்பீர்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நீங்கள் இந்த நிலையைப் பராமரிக்க முடியும் என்றால், அதுவே சுயஉணர்தல் ஆகும். அந்த மேன்மை மிகு நிலையில் அனைத்துக் கோட்பாடுகளையும், அறிவுசார் அடைமொழிகளையும் நீங்கள் விஞ்சுகிறீர்கள், உங்கள் மனம் அமைதியாகிறது மேலும் வெளிக் காட்டமுடியாத ஒரு பேரின்ப ஓட்டத்தை அனுபவிக்கிறீர்கள். நான் எனது முதன்மை அனுபவத்தின் மூலம் இதைச் சொல்கிறேன்.

அமைதி மற்றும் மனநிறைவு ஆகியவற்றை உங்கள் கவசமாகவும், முழு கவனம் மற்றும் சரியான நெறிமுறைகளை உங்கள் வாகனமாகவும் ஆக்கிக் கொண்டால், நீங்கள் இயற்கையாகவே வெற்றி அடைகிறீர்கள், நல்ல கர்மா சிரமமின்றி நடக்கிறது. நீங்கள், உங்களது எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் கர்மாவின் விளைவே ஆவீர்கள். இவற்றில் ஏதாவது ஒன்றைச் சீரமைக்க நீங்கள் உழைத்தால், மற்ற இரண்டும் தானாகவே சீராகிவிடும்.

நீங்கள் இவற்றில் எப்படி உழைப்பீர்கள்? சரி, நான் ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இதைப் பற்றி எழுதியுள்ளேன். சிறப்பாக உதவுவதற்காக, நான் எனது பதிவுகளைப் பிரித்து குறுகிய மின் புத்தகங்களாக அளிக்கிறேன். அவை இலவசப் பதிவிறக்கமாக விரைவில் கிடைக்க உள்ளது. எனது அடுத்த பதிப்பில் நான்கு வகையான கர்மா பற்றி நான் தெளிவுபடுத்த உள்ளேன்.

அவரவர்களது உடல், மனம் மற்றும் வாழ்க்கை மூலம் என்ன செய்கிறார்கள் என்பது அவரவர்களைப் பொறுத்ததாகும். உங்களது கர்மாவின் பரிமாற்றங்கள் உங்களுடைய பொறுப்பாகும். நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட வேலையை மட்டுமே பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது; அதிலும் குறிப்பாக, உங்கள் தொழில் உங்களுடைய சொந்த உடைமையாக இருக்கும் பொழுது. இதுவே கர்மாவின் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரே சொந்த உடைமை அமைப்பு ஆகும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email