மன்னிக்கும் தன்மையைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. ஒரு தெய்வீக குணமாக இது கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, உலகின் அனைத்து மதங்களும் இதை ஊக்குவிக்கின்றன. மன்னிப்பது பெரும்பாலும் மிகப் புனிதமான செயலாகும். உங்கள் சுமையைக் குறைத்து உங்களை அது லேசாக ஆக்குகிறது. ஆனாலும் அது எப்போதும் எளிதானதல்ல. என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன், ஒரு கதையைச் சொல்ல என்னை அனுமதியுங்கள்.

ஒரு மடத்தில் ஒருமுறை மடாதிபதி மன்னிப்பு பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். ஒரு சில சீடர்கள் விட்டு விடுவது மிகச் சிறந்த செயல்தான் ஆனாலும் அது மிகக் கடினமானது என்று வாதிட்டனர். குறிப்பாக அவர்களின் தியான நிலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றால், சில உணர்வுகளை நினைவில் பிடித்து வைத்திருப்பதால் என்ன தீங்கு நேரும் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். மடாதிபதி பொறுமையுடன் அனைத்தையும் கேட்டார். ஒரு கையில் நிறைய உருளைக்கிழங்குகளை எடுத்து, அதில் அவர்களால் மன்னிக்க முடியாத அல்லது மன்னிக்க விரும்பாத மனிதர்களின் துவக்க எழுத்தை, ஒரு நபருக்கு ஒரு உருளைக்கிழங்கு விகிதம் செதுக்கச் சொன்னார். ஒரு பையில் எல்லா உருளைக்கிழங்குகளையும் போட்டு, தினமும் வகுப்பறைக்குக் கொண்டு வந்துவிட்டு மீண்டும் அவர்களின் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிட்டார்.

சீடர்கள் அந்த உத்தரவுகளைப் பின்பற்றினார்கள். அடுத்த நாள் ஒவ்வொருவரும் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வந்தனர். சிலர் மற்றவர்களை விடப் பெரிய பையைத் தூக்கிக் கொண்டு வந்தனர். ஒரு வாரமான பின் துறவிகள் இந்தச் சாக்குப் பைகளைச் சுமந்து கொண்டு சுற்றித்திரிவதை நகைப்பிற்குரியதாக உணர்ந்தனர். உருளைக்கிழங்குகள் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின. எவ்வளவு காலம் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் மடாதிபதியிடம் கேட்டனர். துர்நாற்றத்தை எங்களால் தாங்க முடிவில்லை. மேலும் இது தேவையற்ற சுமையாகவும் தோன்றுகிறது என்றனர்.

இப்பொழுது, நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று மடாதிபதி வினவினார்.
உருளைக்கிழங்கு நமது எதிர்மறை உணர்ச்சிகளைக் குறிக்கின்றது. அதைப் பிடித்து வைத்துக் கொண்டே இருப்பது சுமை மற்றும் நாற்றத்தைத் தூக்கிக் கொண்டிருத்தலைப் போன்றதாகும் என்றனர்.
சரியாகச் சொன்னீர்கள். ஆனால், பையில்லாமல் உருளைக்கிழங்குகளைத் தூக்கிச் செல்ல முடியுமா என்று அவர் கேட்டார். உருளைக்கிழங்கு நமது எதிர்மறை உணர்ச்சியைக் குறிப்பதானால், பை எதைக் குறிக்கிறது என்றார்.
அனைவரும் அமைதியாக இருந்தனர். ஞானம் உதயமாகும் பொழுது இவ்வாறு நடக்கிறது. இங்குப் பை என்பது நமது மனதைக் குறிக்கிறது என்று புரிந்து கொண்டனர்.

நன்றி, கவனம் மற்றும் நேர்மறை போன்ற பல மற்ற நடைமுறைகளைப் போல் மன்னிப்பையும் கூட வாழ்க்கையின் ஒரு நடைமுறையாகப் பார்க்கலாம். விழிப்புணர்வுடன் உங்கள் பையில் அழுகிய உருளைக்கிழங்கைப் போடுவதில்லை என்று நினைவூட்டிக் கொள்ளுங்கள். காலப்போக்கில் இது உங்கள் பழக்கம், உங்கள் இயல்பாகிவிடும். மற்றவர்களை அல்ல, உங்களையே மன்னித்துக் கொள்வது என்பதில் எனது இன்றைய கவனம் உள்ளது. மற்றவர்களை மனதில் நினைக்காதிருக்கும் பொழுதும், பார்க்காதிருக்கும் பொழுதும் நீங்கள் அவர்களை மன்னித்தோ மறந்தோ விடுவீர்கள். கொஞ்சக் காலத்தில் அவர்களால் ஏற்பட்ட வலி குறைந்து விடலாம். ஆனால் உங்களை விட்டு நீங்கள் விலகிச் செல்ல முடியாது. உங்களிடமிருந்து நீங்கள் ஓடிப் போக முடியாது. நீங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கிறீர்கள். உங்கள் செயல்களை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது. விழிப்புணர்வுடனோ ஆழ்மனதிற்குள்ளோ ஒவ்வொரு முறை நீங்கள் பிழைசெய்யும் போதும் உங்களுக்கு நீங்களே உருளைக்கிழங்கு ஒன்றை கொடுத்துக் கொள்கிறீர்கள்.

தன்னிடமிருந்தே பெரிதாக எதிர்பார்ப்பது மனித இயல்பு. இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் நம்மைச் செயல்பட, வழி நடக்க, அப்படியே இருக்க மற்றும் இவ்வாறாக முன்னேறத் தூண்டுகின்றன. மற்றவர்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதை விட நாம் நம்மிடமிருந்தே எதிர்பார்க்கும் நம் சொந்த எதிர்பார்ப்புகளைச் சீரமைப்பது மிகவும் கடினமாக உள்ளது. நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் சொந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத் தவறும் பொழுதும் இன்னொரு உருளைக்கிழங்கை உங்களுக்குக் கொடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் எல்லாம் இருந்தும் ஏதோ இல்லாதது போன்ற ஒரு உணர்வு, வெளிப்படையான காரணமில்லாத எதிர்மறையான ஒரு உணர்வு, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு உணர்வு, சுகமான நிலைமையில் நீடித்திருக்க இயலாத ஒரு உணர்வு இவை யாவும் உங்கள் மேல் நீங்களே மிகவும் கடினமாக இருப்பதற்கான மற்றும் உங்களின் சொந்த தவறுகளை நீங்களே மன்னிக்காத இயற்கைத் தன்மையின் அறிகுறிகளாகும்.

நீங்களே உங்களை மன்னிக்கத் தொடங்கும் போது மற்றவர்களை மன்னிக்கும் தேவை வியக்கத்தக்க அளவு குறைகிறது. உங்களுக்கு எதிராகத் தவறு இழைக்கப் பட்டுள்ளது என்று நீங்கள் நம்பும் போது மன்னிப்பு என்ற கேள்வி எழுகிறது. மற்றவர் செய்தது தவறானது என்று நீங்கள் நம்பவில்லை என்றாலோ அல்லது நீங்கள் பாதிக்கப்படாமல் இருந்தாலோ மன்னிக்க எதுவுமோ எவருமோ இல்லாமல் ஆகிறது. நீங்கள் எவ்வளவு அதிகம் உங்கள் சொந்த நடவடிக்கைகளை மன்னிக்கக் கற்றுக்கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகம் மற்றவர்களின் செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறீர்கள். முரண்பாடானதா? தவறான செயலைத் தொடர்ந்து செய்வதற்கான உரிமம் என்று மன்னிப்பைத் தவறாக எடுத்துக் கொள்ளாத வரை.

உங்களை மன்னிப்பது எப்படி? எளிமையான இரண்டு கட்ட பயிற்சியினைப் பகிர்ந்து கொள்ள நான் விழைகிறேன்:

1. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

நிம்மதியாக அமர்ந்து உங்களை நீங்களே மன்னிக்க விரும்பும் அனைத்தையும் எழுதி ஒரு பட்டியல் தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் பட்டியலில் உங்கள் செயல்களை மட்டுமல்லாமல் உங்களால் சாதிக்க முடியாததையும் சேர்க்க வேண்டும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகள், நீங்கள் அனுபவித்த விரும்பத்தகாத சம்பவங்கள் அனைத்திற்கும் நீங்களே உங்களை மன்னிக்க வேண்டும். உங்களை மன்னியுங்கள். உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள். அதை நடக்க அனுமதியுங்கள். உங்களுக்கு நடந்த அல்லது நடக்கிற ஒவ்வொரு தவறான விஷயத்திற்கும் உங்களின் தவறுதான் எப்படியோ காரணம் என்ற உங்கள் நம்பிக்கையை நழுவ விடுங்கள். இந்தக் குற்ற உணர்வை நிராகரித்து விடுங்கள். சில நேரங்களில் நேர்மையான தேர்வுகள் மற்றும் சரியான நோக்கங்கள் கடினமான விருப்பங்களை மற்றும் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த நேரத்தில் எது சரியாகத் தோன்றியதோ, எது சரியென்று உணர்ந்தீர்களோ அதைச் செய்தீர்கள். இது சரியில்லை என்று அறிந்தே செய்திருந்தாலும், மீண்டும் அதைச் செய்ய மாட்டேன் என்று தீவிரமாக இருந்தால், நீங்கள் உங்களை மன்னித்தே ஆக வேண்டும். ஏன்? ஏனெனில், நடந்து முடிந்ததை மாற்றிச் செய்ய முடியாது, மேலும் இது நிகழ் காலத்தைத் தண்டிக்கவும், எதிர்காலத்தை அழிக்கவும் போதுமான நல்ல காரணமும் ஆகாது. உண்மையில், நீங்களே உங்களை மன்னித்தால் மறுபடியும் அச்செயலைச் செய்யாமல் தவிர்க்கும் உறுதியையும், வலிமையையும் பெறுவீர்கள்.

2. வெளிப்படையாக மன்னித்தல்

ஒரு கண்ணாடியின் முன் நின்று ஒவ்வொரு குறிப்பாகப் படித்துச் சில கணங்கள் அதைப் பற்றிச் சிந்தித்து, இதற்காக நான் என்னையே மன்னிக்கிறேன் என்று சத்தமாகச் சொல்லுங்கள். நீங்கள் அதை வலுப்படுத்துவதற்காக மாற்று உறுதிச்சான்றுகள் அல்லது வார்த்தைகளையும் பயன்படுத்தலாம். அந்தக் குறிப்பை அடித்து விட்டு அடுத்தக் குறிப்பிற்குச் செல்லுங்கள். உங்கள் பட்டியல் தீரும் வரை இதைச் செய்யுங்கள். நீங்கள் இதைச் சரிவரச் செய்தால், உங்களின் இந்தப் பயிற்சியானது அழுதுகொண்டோ அல்லது சிரித்துக்கொண்டோ முடிவடைவதாக இருக்கலாம். எல்லாக் குறிப்பும் முடிந்தவுடன் அந்தப் பட்டியலை அழித்து விடுங்கள். அடுத்த முறை ஒரு புதிய பட்டியல் தயாரித்து இதே பயிற்சியைச் செய்யுங்கள். அதிலும் நீங்கள் எழுதிய முந்தையக் குறிப்புகளும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பட்டியல் தயாரித்து, உபயோகித்து முடிந்தவுடன் அழித்து விடுங்கள்.

அடுத்தவர் வருத்தம் தெரிவிக்கும் போது நாம் அதற்கென்ன பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் எத்தனை முறை நீங்களே அவ்வாறு உங்களுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே இந்தப் பயிற்சியினால் பெரும் நன்மைகளைப் பெற விரும்பினால் இரண்டு சம நீளப் பட்டியலைத் தயார் செய்யுங்கள். முதலாவதில் நீங்கள் உங்களை மன்னிக்க விரும்புவதையும், இரண்டாவதில் நீங்கள் மற்றவர்களை மன்னிக்க விரும்புவதையும் குறித்துக் கொள்ளுங்கள். உங்களின் ஒவ்வொரு தவறையும் நீங்கள் மன்னிக்கும்போது மற்றொருவரின் தவறுக்கு அவரை மன்னியுங்கள். நீங்கள் உருளைக்கிழங்கு இல்லாதவராக விரைவில் ஆகி விடுவீர்கள்.

முல்லா நஸூருதீன் ஒரு கல்லறை வழியாக நடந்து கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட கல்லறை அவர் கவனத்தை ஈர்த்தது. அதன் மேல், ‘இறக்கவில்லை, தூங்கிக் கொண்டுதான் இருக்கிறேன்’ என்ற வாசகம் இருந்தது. ஒரு கணம் அந்தச் சொற்றொடரைப்பற்றிச் சிந்தித்துப் பின்னர், அவர் யாரையும் ஏமாற்றவில்லை, ஆனால் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார் என்று ஆச்சர்யமடைந்தார்.

தவறான உறுதிகளால் வெகு தூரம் பயணிக்க முடியாது. உங்களுடைய சுமையை மறுக்காதீர்கள். உங்களின் பிரதிபலிப்பைப் பார்க்கும் போது, உங்களுடைய சுமை எவ்வளவு பெரியதென்றும், எவ்வளவு பழைய உருளைக்கிழங்குகள் என்றும், எவ்வளவு பாரமானதென்றும் பார்க்க முடியும். அதைக் காலி செய்ய வாய்ப்பு கிடைக்கும் பொழுது, இறகுகளைப் போல் லேசாகவும், சுதந்திரமாகவும், சந்திரனில் இருப்பது போலவும் உணர்வீர்கள்.

ஆழமான மூச்சு ஒன்றை எடுங்கள். அதைப் போக விடுங்கள். மன்னிப்புப் பயிற்சியை உங்களிடமிருந்து தொடங்குங்கள். உங்களை இரக்கத்துடனும், அன்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை இதையே சார்ந்துள்ளது.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email