ஒரு சில நாட்களுக்கு முன், ஒரு பெருநிறுவனத்தின் அதிகாரிகளின் வரிசையில் அடி மட்டத்திலுள்ள ஒரு தொழிலாளி, தன்னுடன் வேலை பார்ப்பவருடன் ஒரு இறுக்கமான சூழ்நிலையே நிலவுவதாக என்னிடம் கூறினார். “நான் எப்போதும் எதிர்மறையானவர்களையே ஈர்ப்பது போல் உள்ளது. யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“ஆனால் பின்னர் ஒரு நாள், நான் வானொலியில் அழகான ஒன்றைக் கேட்டேன். அதில் சொன்னது – வேலை தானே, வருத்தம் ஏன்? இந்த ஒற்றை வரி என் முழுப் பார்வையையும் மாற்றி விட்டது. உண்மையில் மற்றவர்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்று கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன். நான் என் வேலையை மட்டுமே செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

நான் அவரது ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இந்த ஞானக் குறிப்பை மனத்தில் இருத்திக் கொண்டேன்: “வேலை தானே, வருத்தம் ஏன்?” உண்மை தான். அது என் வேலை என்றால், அதில் வருத்தப்பட எந்தக் காரணமும் இல்லை. என்னை எந்த வேலைக்காக அமர்த்தி இருக்கிறார்களோ அந்த வேலையை நான் செய்ய வேண்டும், அவ்வளவே.

“இருந்தாலும் எனக்கு இன்னும் அறிய ஆர்வமாக இருக்கிறது, மக்களுக்கு ஏன் என்னைப் பிடிக்கவில்லை? நல்ல கருத்துக்கள் என்னிடம் உள்ள போதும், நான் ஏன் எதிர்மறையானவர்களை ஈர்க்கிறேன்?” என்றார்.

இது அவரது நிலைமை மட்டுமல்ல, நான் சந்திக்கும் அநேகமானவர்கள், அவர்களது உண்மையான நோக்கத்திற்கு நேரெதிரானதையே செய்து முடிக்கிறார்கள் (அல்லது பெறுகிறார்கள்). இந்தக் கேள்வி கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று என்று நான் உணர்கிறேன். முதலில் ஒரு சிறிய கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு சிறிய கிராமத்தில் நன்கு கற்ற பண்டிதரான ஒரு பிராமணர் இருந்தார். அவரது அறிவாற்றலுக்கு அங்கீகாரமாகப் பண்டிட்ஜி என்று கூப்பிடப்படுவதைப் போல் எப்போதும் கனவு கண்டார். அவர் பாரம்பரியமாக உடையணிந்தார், புத்திசாலித்தனமாகப் பேசினார், சமஸ்கிருதம் பேசினார். ஆனாலும் அவர் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும், ஒருவருமே அவரைப் பண்டிட்ஜி என்று கூப்பிடவில்லை. இந்த மரியாதைக் குறைவு தொடர்ந்து அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.

கலக்கமடைந்த அவர் அக்பரின் அரசவையின் மாபெரும் ஞானியான, பீர்பலை அணுகினார். மக்கள் அவரை பண்டிட்ஜி என்று அழைக்கத் தொடங்க ஏதாவது வாய்ப்பு உள்ளதா என்று கேட்டார்.

“அது சுலபமானது,” என்று பீர்பால் கூறினார். “நீங்கள் என்னுடன் இணைந்து விளையாடத் தயாராக இருந்தால், ஒரு சில நாட்களில் அனைவரும் உங்களைப் பண்டிட்ஜி என்று அழைப்பார்கள்,” என்றார். தனது திட்டத்தையும் பகிர்ந்து கொண்டார்.

முடிவு செய்ததைப் போல், அடுத்த நாள் அந்தப் பிராமணர் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பூங்காவில் காலார நடந்துகொண்டிருந்தார். பீர்பால் பின்னால் இருந்து அவரை அணுகி பண்டிட்ஜி என்று அழைத்தார். கோபத்தால் உந்தப்பட்டு, அவர் தனது கைத்தடியைத் தூக்கிக் கொண்டு பீர்பாலை அடிக்க, அவர் பின்னால் ஓடினார். குழந்தைகள் அவரது இந்த நடவடிக்கையைப் பார்த்து மகிழ்ந்தார்கள் மற்றும் பண்டிட்ஜி என்று அழைத்தால் இந்த மனிதர் வெறுப்படைகிறார் என்பதைக் கண்டறிந்தார்கள்.

விரைவில் அனைத்துக் குழந்தைகளும் அவரைப் பண்டிட்ஜி என்று அழைத்துச் சீண்ட ஆரம்பித்தனர். ஒவ்வொரு முறை அவர்கள் பண்டிட்ஜி என்று அழைக்கும் போதும், அவர் அதே முறையில் கிளர்ந்தெழுந்து கோபத்தை வெளிப்படுத்தினார். பண்டிதர் போல் உடையணிந்த ஒரு மனிதரைப் பண்டிதர் என்று அழைத்தால் கோபமடைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அவருக்கே அது தெரியும் முன், அனைவரும் பண்டிட்ஜி என்று அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர், அவர் கிளர்ந்தெழுவதை நிறுத்திவிட்டார், ஆனாலும் மக்கள் அவரைப் பண்டிட்ஜி என்றே தொடர்ந்து அழைத்தனர். முதலில் கேலி செய்வதற்காகவும், பின்னர் இயல்பாகவும், முடிவாகக் காலப்போக்கில் மரியாதையாகவும் அழைத்தனர்.

இதே போலத் தான் நாம் வாழ்க்கையில் பல விஷயங்களை ஈர்க்கிறோம் என்று நான் நினைக்கிறேன். நாம் வன்முறையை, நெருக்கடியை அல்லது வலுவான எதிர்வினையை ஏதாவது ஒன்றில் காட்டும் போதெல்லாம், இயற்கையாகவே நாம் அந்தச் சூழ்நிலைக்கு நமது கவனத்தைத் திருப்புகிறோம். எதிர்மறை உணர்வுகளுக்கு நாம் அதிக கவனத்தைச் செலுத்தும் போதெல்லாம், நாம் அதிகமான சக்தியை, நமது துரதிஷ்டங்களையும், குழப்பமான உணர்வுகளையும் உறுதிப்படுத்துவதற்கு (விரவுவதற்கு இல்லாமல்) உபயோகிக்கிறோம்.

ஒரு விருந்திற்கான கூட்டத்தில், பின்னணி இசை காதைக் கிழிக்கும் போது, அனைவரும் ஒருவருக்கு மேல் ஒருவர் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு கண்ணாடித் தம்ளரை அதிகச் சத்தமாகத் தரையில் சிதற அடித்தால் (ஒரு உதாரணத்திற்காகச் சொன்ன பரிந்துரை, நீங்கள் அதே போல் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை) உடனடியாக அனைவரின் கவனமும் உங்களிடம் திரும்பி விடும். இப்படித் தான் மனதும் வேலை செய்கிறது: பயம் ஈர்ப்பது போல் வேறு ஒன்றும் உடனடியாக ஈர்ப்பது இல்லை. உங்களைச் சுற்றி உள்ள நல்லவற்றை, உங்கள் இருப்பிற்குச் சாதகமான அம்சங்களை ஈர்ப்பதற்காக உங்களது கவனத்தைத் திருப்ப அறிகின்ற நாளிலிருந்து, நீங்கள் இனி உங்கள் வாழ்க்கையில் தவறான மக்களை ஈர்க்கமாட்டீர்கள்; நம்மைக் கட்டுப்படுத்தும் நமது சொந்த நம்பிக்கைகளால் (தன்னலமற்ற ஒரு வாழ்க்கையின் குறைபாட்டால்) மற்றவர்களிடம் இருந்து மகிழ்ச்சியைத் தேடுவதற்கு உந்தப்படும் போது இப்படித் தான் நடக்கிறது.

நமது திருப்தியானது, நம்மை எத்தனை பேருக்குப் பிடிக்கும் என்பதில் இருந்து வருவதில்லை. அதனால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற போதிலும், அனைவருக்குமே உங்களைப் பிடிக்கும் என்பது உண்மையில் முடியாததாகும். மக்கள் உங்களை விரும்புகிறீர்களா என்பதைப் பற்றி கவலைப்பட்டால், நீங்கள் வெல்ல முடியாது. அது நேர்வழி அல்ல. பெரும்பாலான மக்கள் வேறு யாரையும் பற்றி கவலைப்பட நேரமின்றி அவர்களின் வேலையிலேயே கவனமாக இருக்கிறார்கள்.

எவ்வளவு திருப்தியாக உங்களது வாழ்க்கையை நீங்கள் உணர்கிறீர்கள் என்பது, நீங்கள் உங்களது ஆற்றலை எங்கு முதலீடு செய்கிறீர்களோ அதற்கு நேர் விகிதத்தில் தான் இருக்கும். உங்களது ஆற்றலை எதிர்மறையான எண்ணங்களில் உபயோகித்தால் அழிவு எண்ணங்கள் உங்களை அழித்துவிடும். நீங்கள் படைப்பாற்றலில் முதலீடு செய்தால் நேர்மறை எண்ணங்கள், நீங்கள் நன்றாக இருப்பதற்கான உங்களது உணர்வுகளை அதிகரிக்கும். இதுவே ஈர்ப்புச் சட்டத்தின் சுருக்கமான முறை ஆகும்.

உங்கள் கனவுகள் நிறைவேறுவதற்கான பெரும் வழிமுறைகளைப் பற்றி நான் பேசவில்லை. கவனித்தல் என்ற கலையைத் தான் நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதாவது எதில் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அதில் இருந்து ஆற்றலை ஈர்க்கிறீர்கள். அதனால் தான் அறிவியல், கடவுள் என்ற கருத்துக்கு எதிர்மறையாகக் கூறினாலும் கூட, லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கைகளாலும், பாரம்பரியங்களாலும் பிரார்த்தனையின் மூலம் வலிமையைப் பெறுகிறார்கள். எவ்வளவு மற்றும் எத்தகைய ஆற்றலை நீங்கள் அடைகிறீர்கள் என்பது நீங்கள் அடைய விரும்பும் பொருளின் (அல்லது நம்பிக்கையின்) மேல் காட்டும் உங்களது கவனத்தின் தரம், செறிவு மற்றும் கால அளவை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது.

உலகத்தைச் சுற்றிப் பயணிக்கும் ஒருவருக்கு மிகவும் அரிதான மற்றும் கண்ணைக்கவரும் அழகான கிளியைக் காண முடிந்தது. இந்தப் பறவையால் முப்பது மொழிகளைப் பேச முடியும். அவர் உடனடியாக அதை வாங்கித் தன் தாய்க்குப் பரிசாக, அவள் மிகவும் விரும்புவாள் என்று நினைத்துத் தன் தாய் வீட்டிற்கு அனுப்பினார். ஒரு சில நாட்கள் கழித்து அந்த கிளியைப் பற்றித் தன் தாய் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளத் தாயை அழைத்தார்.

“அது ரொம்ப நன்றாக, சுவையாக இருந்தது!” என்று அவரது தாய் கூறினார்.
“என்ன! அதை நீங்கள் சாப்பிட்டீர்களா? அது ஏதோ ஒரு கிளி இல்லை. அது முப்பது மொழிகளைப் பேசும்!” என்று அவர் கத்தினார்.
ஒரு சில விநாடிகளுக்கு அமைதியாக இருந்துவிட்டுப் பின்னர், “ஓ, அது ஏன் பின்னர் எதுவுமே சொல்லவில்லை?” என்று அவரது தாய் கேட்டார்.

நம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், நமது ஞானம், நமது அறிவு இவற்றால் என்ன பயன்? உங்களுடைய எண்ணங்களுடன் போராடுவதை விடச் சில நேரங்களில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் மெதுவாகத் தெளிவாகப்பேசி, பண்புடன் விண்ணப்பித்துக் கொள்வதாகும். மிகவும் மெதுவாக, மிகவும் பண்பாக. பல சமயங்களில் இதுவே தேவையானதைச் செய்து விடுகிறது. நாம் கடினமான மக்களையும், சவாலான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டி உள்ளது என்பது இயற்கை தான். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும் என்கிற போது, உங்களது கவனத்தைத் திசை திருப்புதல் என்பது ஓடி ஒளிவது இல்லை. உங்களது கவனத்திற்கு உரியப் பொருளில் இருந்து உங்களது உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டு, அதில் இருந்து வலிமையை உருவாக்கி, பேசி, பிரச்சினையைத் தீருங்கள். வன்முறையைக் கையாள்வது எந்த வகையான பலனுக்கும் வழிவகுக்காது.

நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அது இருக்கும் போதே அனுபவியுங்கள். நீங்கள் விரும்பாத அல்லது அனுபவிக்காத எதையாவது செய்ய வேண்டி இருக்கும் போது, அதைச் செய்ய வேண்டியது உங்களது வேலை என்று எடுத்துக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளவும்: “வேலை தானே, வருத்தம் ஏன்?”

தொடர்ந்து செயல்பட பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email