என் முந்தைய இடுகையைத் தொடர்ந்து, இரண்டு வகையான கோபத்தைப் பற்றி இன்று நான் விரிவாக விளக்குவேன். கோபம் இயற்கையான ஒரு மனித உணர்வு ஆகும். எவரிடம் அன்பு, இரக்கம், கருணை ஆகிய உணர்வுகள் உள்ளனவோ அவர்களைச் சுற்றி கோபம், வெறுப்பு மற்றும் அவைகளது சுற்றமும் சூழ்ந்திருக்க முடியும். எனினும், கண்டிப்புடன் இருத்தல் என்பதற்குக் கோபமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, ஒழுக்கத்திற்கான ஒரு செயல் தேவையினால் செய்யப்படுகிறது, கோபத்தினால் அல்ல, என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? கோபமானது அதிகமான எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துகிறது, அது உடனடியாக உங்களைப் பலவீனமாக ஆக்குகிறது, அனைத்திற்கும் மேலே, கோபம் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், கோபம், எதிர்பாராமலும், திடீரென்றும், அநேகமாகக் கட்டுப்பாடற்றும் வருவதாகும்.

ஒரு முறை ஒரு இளைஞனும் அவனைச் சுற்றி உள்ளவர்களும் அவனது கோபத்தினால் சோர்வடைந்தனர். மிகவும் முக்கியத்துவமற்ற விஷயங்களில் எல்லாம் கோபம் அடைவான், பின்னர் மன்னிப்புக் கேட்பான். அவனது அடுத்தடுத்த செயல்கள் இன்னும் மோசமாகி அவன் கேட்கும் மன்னிப்புக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றானது. அவனது கோபம் அவனது கட்டுப்பாட்டையும் மீறி, அவனுக்குள் நன்கு ஆழமாகப் பதிந்து விட்டதாக நம்பினான். தன்னைச் சுற்றியுள்ள பிரியமானவர்களால், தான் உள்ள நிலையைப் பார்த்து, ஏன் தன்னை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று வியந்தான். அவன் தனது குருவை அணுகி இதனை விளக்குமாறு வேண்டினான்.

“ஒரு மரப் பலகையை எடுத்துக் கொள். நீ கோபப்படும் ஒவ்வொரு முறையும், அதில் ஒரு ஆணியை அடி. அந்தப் பலகை நிரம்பியதும் திரும்பி வந்து எனக்குத் தெரியப்படுத்து,” என்று குரு கூறினார்.

அந்த மனிதன் திரும்பிச் சென்று மிகவும் கவனத்துடன் குருவின் ஆலோசனையைப் பின் பற்றத் துவங்கினான். விரைவில் சில வாரங்களிலேயே அந்தப் பலகை ஒரு ஆணி கூட அடிக்க இடமில்லாமல் ஆணிகளால் நிரம்பிவிட்டது. பலகையின் இந்த நிலை கண்டு அவன் வெட்கப்பட்டான். பலகை ஆணிகளால் நிறைந்து விட்டது என்று கூற அவன் குருவிடம் திரும்பவும் சென்றான்.

“இப்போது, விழிப்புணர்வுடன் கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய். கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி அடையும் ஒவ்வொரு முறையும் ஒரு ஆணியைப் பிடுங்கி எடுத்துவிடு. பலகையில் ஆணியே இல்லாத போது மீண்டும் அதை இங்கே கொண்டு வா,” என்று குரு கூறினார்.

அவன் அதற்கு இசைந்தான். அந்தப் பலகையிலிருந்து அனைத்து ஆணிகளையும் எடுக்கப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவன் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்தும் உணர்வை அனுபவபூர்வமாக உணர்ந்தான். மறுபடியும் அந்தப் பலகையின் சுத்தமான நிலை கண்டு நிம்மதியடைந்து, மீண்டும் குருவைச் சந்திக்கச் சென்றான்.

குரு அந்தப் பலகையைக் கையில் எடுத்துக் கொண்டு, “ஆஹா! பலகையில் உள்ள ஆணிகளை அகற்றிவிட்டாய். ஆனால் இதிலுள்ள துளைகளை அடைத்து முன்பு போல் அதன் அசல் நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம் என்று மனமார விரும்புகிறேன். கோபத்தினால் உண்டான சேதத்தை முதலில் ஆணியை அடித்து, பின் அதை வெளியே எடுத்ததைப் போல் திரும்பப் பெறலாம். எனினும், முன்பிருந்த பலகையைப் போல் திரும்பப் பெறவே முடியாது. தழும்பு நிரந்தரமாகத் தங்கிவிடும்,” என்றார்.

கோபத்தை வெளிப்படுத்தி விட்டால், அது நம்மை லேசாக உணர வைக்கும் என்ற தவறான கருத்து ஒன்று, பொதுவாக உள்ளது. இது எந்த அளவு உண்மையோ அதே அளவு பொய்யானதும் ஆகும், ஏற்பட்ட சேதத்தைச் சீர்ப்படுத்த முடியாது. உங்கள் கோபத்தை அடக்கி வைத்துக் கொள்வதும் பெரிய தவறு தான். உங்களது கோபத்தை, உணர்வு நிலையை, அன்பு, இரக்கம், அனுதாபம் அல்லது வேறு ஏதாவது வலிமையான, நல்ல உணர்ச்சி நிலைக்கு மாற்றும் சக்தியுள்ள உயர்ந்த நிலையே தேவைப்படுகிறது.

நீங்கள் கோபத்தை உணர்வதும் வெளிப்படுத்துவதும், பெரும்பாலும் உங்களது உணர்வு நிலை, உங்களது மன அமைப்பு, உங்களது வளர்ப்பு முறை, உங்களது வீட்டுச் சூழல், வெளிச் சூழல், கலாச்சாரம் மற்றும் மதம் மூலம் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் ஆகிய இவற்றைச் சார்ந்து இருக்கிறது. கோபத்திற்கான இரண்டு ஒப்பு உவமைகளை உங்களுக்குக் கூறுகிறேன்:

1. எரிமலை (Volcano)

சிலர் கோபம் வந்ததும் எரிமலை போல் வெடிக்கிறார்கள், கஷ்டங்கள் மூலம் அழுத்தப்படும் போது, நிரப்பப்பட்ட பலூனைப் போல் வெடிக்கிறார்கள். அவர்கள் தங்களது கோபத்தை உணர்ச்சிக் கொந்தளிப்பாக, ஆத்திரமாக வெறித்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார்கள். தன்னை மீறி மிக வேகமாக ஆவேசமாகிறார்கள், பின்னர் அமைதியாகிறார்கள், அதே வேகத்தில் சாதாரண நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். தங்கள் நடவடிக்கைகளுக்காகப் பின்னர் வருந்துகிறார்கள், மன்னிப்பு கூடக் கேட்கலாம், மீண்டும் கோபப்படுவது இல்லை என்று சபதம் செய்கிறார்கள். இதெல்லாம் வீணானதாகவும், உபயோகமற்றதாகவும் நிரூபணமாகிறது. அடுத்த முறை இவ்வாறான உராய்வு அல்லது எதிர்ப்பு போன்ற கோபச் சூழல் வரும்போது இவர்கள் முற்றிலும் முன்போலவே நடந்து கொள்கிறார்கள்.

ஏன்? கோபத்தில் வெடிப்பது அவர்களுக்குத் தப்பிக்கும் ஒரு வழியாகும். ஏனெனில், இது அவர்களின் சமாளிக்கும் வழிமுறையாக ஆகிவிட்டது, அவர்களது உடலில் தாங்க முடியும் சக்தி உள்ளவரை, தொடர்ந்து அனைத்துக் கடினமான சூழ்நிலைகளையும் கத்தியே சமாளிக்கிறார்கள். அவர்கள், ஒரு விரும்பத்தக்கச் சூழ்நிலையில் சந்தோஷமாக உணர்வது போல், அனைத்து விரும்பத்தகாத சூழ்நிலைகளிலும் தொடர்ந்து கோபமாக இருக்கிறார்கள்.

எந்த ஒரு எதிர்மறைச் செயலையும், உங்களது சமாளிக்கும் வழிமுறையாக ஏற்றுக்கொண்டால், அந்த உணர்ச்சியை நேர்மறையானதாக மாற்றும் திறனை உடனடியாக நீங்கள் இழக்கிறீர்கள். கோபத்தில் வெடிப்பது சரியான வழியல்ல. அது மரப்பலகையில் அடித்த ஆணித் துளைகள் போல் நிரந்தர அடையாளத்தை விட்டுச் சென்றுவிடும்.

கோபத்தைத் தொடர்வது உங்கள் கோபத்தைக் குறைக்காது. அது உங்களை அமைதியாக இருக்கவிடாது. கேள்வி என்னவென்றால், இது தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும், ஏன் சிலர் கோபத்தில் கொதித்து எழுகிறார்கள்? அவர்கள் விரும்பாத போதும் எது அவர்களைக் கட்டாயப் படுத்துகிறது? மேலே படிக்கவும்.

2. கொதிப்பவர் (Brewer)

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் காபியைத் தொடர்ந்து கொதிக்க வைத்தால் என்னவாகிறது? கசப்பாகிறது, குடிக்கத் தகுதியற்றபடி கசப்பாகி விடுகிறது. தேனாலும் கூட அதை இனிப்பாக்க முடியாது. இதேபோல், ஒருவர் தங்களது எதிர்மறை உணர்வுகளைப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தால், அந்த உணர்வே உள்ளூரக் கொதித்து அந்த நபரைக் கசப்பானவராக்கி விடுகிறது. எதிர்மறை உணர்வுகளை எவ்வளவு அதிகமான நாட்கள் பிடித்து வைத்திருக்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு கசப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கோபத்தில் கொதிப்பது, எளிதாக ஆத்திரத்திற்கு வழிவகுக்கிறது. ஏனெனில் கத்துவது என்பது காரணத்தை விட, ஒரு அறிகுறி, ஒரு விளைவு ஆகும். நீங்கள் உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளைப் பிடித்து வைத்திருப்பதன் ஒரு அறிகுறியாகும். இது ஆவிபறக்கும் வேகவைத்த உருண்டைகளை, மைக்ரோவேவில் சூடு படுத்துவதைப் போன்றதாகும். உருண்டைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கே வெப்பத்தைத் தாங்கும், அதற்கு மேல் அது வெடித்துச் சிதறுகிறது. அது இனி பரிமாறுவதற்கும், சாப்பிடுவதற்கும் தகுதியற்றதாகி விடுகிறது.

கொதித்தல், உண்மையிலேயே மெதுவாக உயிரை எடுக்கக் கூடிய ஒரு விஷம் ஆகும். எரிமலையைப் போல் அல்லாமல், இது இதயத்தில் வைக்கப்படுகிறது. பலர் கோபத்தையும், மற்ற எதிர்மறை உணர்வுகளையும், கைவிட முடியாமல் தேக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு அறையைச் சூடாக்கும் கணஅடுப்புப் பகுதியை யோசித்துக் கொள்ளுங்கள். அதில் பயன்படுத்தப்படும் கட்டை முழு அறையையும் சூடாக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கட்டையைச் சரியாக வைக்காவிடில் அது வீட்டையே எரித்துவிடுகிறது. இதேபோல், மக்களுக்குத் தங்களது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்தத் தெரியாவிட்டால், அது ஒரு பயங்கரமான வடிவத்தை எடுக்க முடியும். மோசமாக வழிப்படுத்தப்பட்ட உணர்வுகளின் விளைவே கோபம் ஆகும். உண்மையில் இது அவர்களது ஆற்றப்படாத சொந்த வலியின் வெளிப்பாடே ஆகும். அது கிட்டத்தட்ட ஒரு எதிர்மறை உணர்வு வடிவை எடுத்துள்ள தவறான காதலைப் போன்றது. அவர்களுக்குள் உள்ள அரவணைப்பு இப்பொழுது கொதித்து, எதிர்மறை உணர்வு வடிவில் இவ்வாறு உருகவைக்கிறது.

உண்மையிலேயே உங்களுக்குள் இருக்கும் இந்த கோபத்தைப் போக்க விரும்பினால், நீங்கள் உங்களையே ஆற்றிக் கொள்ள உழைக்க வேண்டும். நீங்கள் உங்கள் சொந்த சரணாலயத்தைக் (ஆழ்மன அமைதி மற்றும் நிம்மதி) கண்டறியும் நேரம் வரை கோபம் வரக்கூடும். நீங்களே அறியாத நிலையில் உங்களைப் பிடித்துக் கொள்ளும். அது விரைவில் உங்களைச் சமநிலையில் இருந்து தூக்கி எறிந்து விடும்; குறிப்பாகத் தூண்டப்படும் அல்லது எதிர்க்கப்படும் போது.

அடுத்த ஒன்றிரண்டு பதிப்புகளில், மூன்று வகையான கோபம் கொள்ளும் மக்கள், அதைத் தொடர்ந்து, கோபத்தைக் கடக்க வழிகள் பற்றி எழுதப் போகிறேன்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email