சீனாவில் ஒரு குறிப்பிட்ட ஷவோலின் கோவிலில் ஒரு தனிப்பட்ட மண்டபம் உள்ளது. அதன் சுவர்கள் மற்றும் கூரையில் ஆயிரம் கண்ணாடிகள் பதித்து இருக்கிறார்கள், ஆகையால் அது ஆயிரம் கண்ணாடிகள் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பல துறவிகள் ஆயிரம் கோணங்களில் இருந்து தங்களைப் பார்த்து, அங்குப் பயிற்சி செய்து, தனிச்சிறப்புடைய துல்லியமான தங்களின் அசைவுகளை மிகக் கச்சிதமானதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒரு நாள் நாய் ஒன்று எப்படியோ உள்ளே நுழைந்து விட்டது.

ஆயிரம் நாய்கள் அதனைச் சூழ்ந்து கொண்டதைப் பார்த்து, அது பாதுகாப்பற்று, பயமுறுத்தப்படுவது போல் உணர்ந்தது. அது தனது பற்களைத் தவிடு பொடியாகிவிடும் படிக் கடித்தது, உறுமியது மற்றும் மற்ற நாய்களைப் பயமுறுத்துவதற்காகக் குலைத்தது. இயற்கையாகவே, ஆயிரம் நாய்களும் இதைப் பார்த்துத் திரும்பி உறுமின மற்றும் குலைத்தன. இந்த நாய் சீறிப் பாய்ந்தது. ஆயிரம் நாய்களும் அதன் மீது திரும்பிச் சீறிப் பாய்ந்தன. இந்தச் செயலால் சில கண்ணாடிகளை உடைத்து, காயப்பட்டு, இந்த நாய் மற்ற நாய்களுடன் போராட முடியாமல் விரைவில் ஆற்றலை இழந்து, குருதியில் தோய்ந்து இறந்தது.

ஒரு சில மணி நேரம் கழித்துத் துறவிகள் வந்த போது கண்ணாடிகள் நொறுங்கி, நாய் இறந்து கிடந்ததைப் பார்த்து மிரண்டு போயினர். அவர்கள் மண்டபத்தைச் சுத்தம் செய்து பழுதுபார்த்தனர். ஒரு சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு நாய், ஒரு சிறிய நாய்க்குட்டி, அந்த மண்டபத்திற்குள் நுழைந்து விட்டது. இதற்கு முன்பு வந்த நாயைப் போலவே, இதுவும் அதனைச் சுற்றி ஆயிரம் நாய்க்குட்டிகளைப் பார்த்தது. சந்தோஷம் தாளாமல் நாய்க்குட்டி தனது வாலை ஆட்டியது. ஆயிரம் குட்டிகள் தங்களது வாலை ஆட்டின. ஆயிரம் நண்பர்களைக் கண்டு கொண்டதால் நாய்க்குட்டி குட்டிக்கரணம் அடித்தது. அழகான ஆயிரம் நாய்க்குட்டிகள் அன்பாக அதையே திரும்பச் செய்தன.

ஒவ்வொரு முறையும் இந்த நாய்க்குட்டி எதாவது ஒரு நாய்க்குட்டியை நோக்கி ஓர் அடி நகர்ந்தால், கண்ணாடியில் உள்ள நாய்க்குட்டி இதை நோக்கி இரண்டு அடிகள் நகர்ந்தது. இந்தச் சிறிய நாய்க்குட்டி தனது மென்மையான கண்களால் அன்போடு பார்த்த போது, கண்ணாடியில் இருந்த ஒவ்வொரு நாய்க்குட்டியும் அதே அன்போடு இதைப் பார்த்தது.

நமது உலகம் இந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது அல்ல. நீங்கள் உறுமினால் ஆயிரம் பேர் உங்களை நோக்கித் திரும்பி உறுமுவார்கள். நீங்கள் சிரித்தால் ஆயிரம் பேர் திரும்பிச் சிரிப்பார்கள். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் திரும்பச் செய்வது, ஆரம்பிப்பதை விட எளிதானதாகும்.

நான் மீண்டும் சொல்கிறேன்: திரும்பச் செய்வது, ஆரம்பிப்பதை விட எளிதானதாகும்.

ஒரு புதிய நட்பைத் தொடங்குவதற்கும், ஒரு புதிய நடவடிக்கையை எடுப்பதற்கும் தைரியம் வேண்டும். பலர் வாழ்க்கையில் மிகவும் களைப்படைந்து, அடிபட்டு உள்ளதால், அவர்களுக்குத் தங்கள் உறவுகளைச் சரிசெய்ய, புத்துணர்ச்சி அடைய, மீட்கத் தைரியம் (அல்லது விருப்பம்) இனி மேலும் இருப்பது இல்லை. இனி மேலும் தொல்லைப்பட முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். பெரும்பாலும் அந்த நினைப்புகளுக்குப் பின்னால் நாம் மறுபடியும் நிராகரிப் படுவோமோ, மீண்டும் காயப்படுத்தப் படுவோமோ என்ற பயம் இருக்கிறது. இதன் விளைவாக, மக்கள் பல ஆண்டுகள் வரை, சில நேரங்களில் அவர்களது கடைசி மூச்சு வரை, உடைந்த உறவுகள் மற்றும் உடைந்த நட்புடன் வாழ்கிறார்கள்.

உண்மையிலேயே வலுவாக இருப்பவர்கள் மன்னிப்புக் கேட்பதற்கோ, வழங்குவதற்கோ பயப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மன்னிப்பு வழங்குவது, மன்னிப்புக் கேட்பதைப் போல் அவ்வளவு கடினமானது அல்ல. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மழையானது வறண்ட நிலத்தில் உள்ள எண்ணற்ற விதைகள் முளைப்பதற்கு உதவுவதைப் போல், மன்னித்தலானது உறவினைப் புதுப்பிக்கும் மென்மையான தூறலைப் போன்றதாகும். மன்னித்தல் இல்லாத நிலையில், உண்மையான அன்பின் உணர்வுகள், துளிர்க்கவோ, மலரவோ முடியாது.

நாம் ஒவ்வொருவரும் அவரவரது சொந்த ஆயிரம் கண்ணாடிகள் மண்டபத்தில் நின்று கொண்டிருக்கிறோம். அங்குச் சிரிப்பதோ, சிடுசிடுப்பதோ அவரவரது விருப்பமாகும். என்னவாக இருந்தாலும், நமக்குத் திரும்பக் கிடைப்பது மிகப் பெரிய அளவான, 1000 சதவிகிதம் ஆகும். நமது மண்டபம் நமது உலகமே ஆகும். இது நமது சொந்தப் பிரதிபலிப்பே ஆகும்.

புத்தாண்டுத் தொடக்கத்தில் எடுக்கும் தீர்மானத்தைத் தவிர, மன்னிப்பைக் கோரவும், அளிக்கவும் ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? ஒருவேளை யாராவது உங்களுக்குத் தவறு இழைத்திருக்கலாம், மன்னிப்பும் கேட்க விழைந்திருக்கலாம், ஆனால் நீங்கள் அதிகமாகக் காயமுற்றிருந்தால் அந்த நேரத்தில் அவர்களை மன்னிக்கும் நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம். நீங்கள் அவனை / அவளை மன்னித்து விட்டீர்கள் என்பதைத் தெரிவித்து இப்போது ஒரு குறிப்பு அனுப்பினால் எப்படி இருக்கும்? இந்த யோசனையை நிராகரிக்கும் முன் மீண்டும் சிந்தியுங்கள். மற்றும் மன்னிப்புக் கேட்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏதாவது ஒரு காலகட்டத்தில் நீங்களும் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம். ஓர் இதயப் பூர்வமான மன்னிப்புக் கடிதம் எழுதி (ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் முற்றிலும் உணர்ந்து) அவன் அல்லது அவளிடமிருந்து பதில் வரும் என்ற எதிர்பார்ப்பு கூட இல்லாமல், அவர்களுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? அவர்கள் பதில் அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏனெனில் மன்னிப்பு கோருவது என்பது, உங்கள் செயலை ஏற்றுக் கொள்வதாகும். மேலும் மற்றவர்களின் பதிலைப் பற்றி எண்ணாமல் சுதந்திரமாக, கருணையுடன் உங்கள் தவற்றை ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்களை மீட்டுக் கொள்வதாகும்.

நாம் யாரைக் காயப்படுத்தினோமோ அவர்களால் மட்டுமே உண்மையான மன்னிப்பை வழங்க முடியும். பாதிக்கப்பட்டவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்க முடியாது. ஒரு மதகுரு, போதகர், துறவி அல்லது ஒரு தீர்க்கதரிசி ஆகியவர்களால் நீங்கள் வேறு ஒருவருக்குக் கொடுத்த வருத்தத்திலிருந்து உங்களை மன்னிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர் இனி உங்கள் வாழ்க்கையில் இல்லை என்றால் அல்லது தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்று இருந்தால், அத்தகைய சமயத்தில் மதகுருமாரிடம் மனமுவந்து மன்னிப்புக் கேட்பதைத் தேர்வு செய்யலாம். இதைவிட நல்லது, வேறு யாரோ ஒருவர் உங்களைக் காயப்படுத்தி இருந்தால், அவர்களுக்கு உங்கள் இதயத்தில் மன்னிப்பு வழங்குவது.

உங்களுக்கு மன்னிப்புக் கிடைக்கவில்லை என்றாலும், நீங்கள் மன்னியுங்கள்.

முல்லா நஸூருதீன், அவரது நண்பர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து உள்ளூர்ப் பொழுதுபோக்குப் பூங்காவிற்குச் சென்றார். மற்ற அனைத்து ராட்டினங்களிலும் சவாரி செய்யாமல், முல்லா குடை ராட்டினத்தில் திரும்பத்திரும்பச் சவாரி செய்து கொண்டிருந்தார். அந்த ராட்டினம் நிற்கும் போதெல்லாம், முல்லா மயக்கத்துடன் கீழிறங்கி, ஒரு தம்ளர் தண்ணீர்க் குடித்து விட்டு மீண்டும் ஏறிக் கொள்வார். இவ்வாறு ஒரு மணி நேரம் கழிந்தது.
“ஆஹா, முல்லா! நீங்கள் குடை ராட்டினத்தை இவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது”, என்று அவரது நண்பர் கூறினார்.
“நேசிப்பதா? நான் அதை முற்றிலும் வெறுக்கிறேன்!” என்று முல்லா பதிலளித்தார். “நான் உடல்நிலை சரியில்லாமலும், எந்த நேரத்திலும் வாந்தி எடுப்பது போலவும் உணர்கிறேன்.”
“அப்படியானால் ஏன் அதில் சவாரி செய்தீர்கள்?” என்று அவரது நண்பர் கேட்டார்.
“அந்த ராட்டினத்தின் சொந்தக்காரர் எனக்கு 50 டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வது தான் அதை வசூலிக்க இருக்கும் ஒரே வழியாகும்.

ஒரு கடனைக் கழிக்கத் தேர்வு செய்யும் போது, முல்லா ராட்டினத்தில் ஏறியதைப் போல் நம்மை நாமே தண்டித்துக் கொள்கிறோம். மற்றவர், தனது குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுக்கும் போது, அவர்களை உணரச் செய்ய உங்களால் எதுவும் செய்ய முடியாது. காலப்போக்கில் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ள முடியாமலோ போகலாம். எனினும், அவர்களது நிலைக்கு நாமும் தாழ்ந்து விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு எக்காரணத்தினாலோ அதை உணர்த்த முடியாவிடினும் குறைந்தபட்சம் முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் இதயத்தில் அதை மன்னியுங்கள்.

நீங்கள் மற்றவர்களை மன்னிக்கும் போது, இயற்கை உங்களது தவறுகளுக்காக உங்களை மன்னிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதனால் எங்கே மன்னிக்க முடியாதோ, அந்தச் செயல்களுக்காக இயற்கை உங்களை மன்னிக்கின்றது. ஓர் இலகுவான இதயத்துடன் நீங்கள் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

உங்களது உறவு முறையின் ஆழம் எவ்வளவோ, அவ்வளவு அழகாகவே உங்களது வாழ்க்கை இருக்கிறது. அதாவது உங்களுடனும், மற்றவர்களுடனுமான உங்களது உறவு முறை.

நாம் மற்றவர்களிடம் முகம் சுளிக்கும் போது, நாம் தானாகவே நம்மைப் பார்த்தே முதலில் முகம் சுளிக்கிறோம். என்னை நம்பவில்லை என்றால், உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது, நாம் இயற்கையாகவே நம்மீதே முதலில் அன்பு செலுத்துகிறோம். இது மன்னிப்பது உட்பட அனைத்து உணர்வுகளுக்கும் உண்மையாக உள்ளது.

மென்மையான புன்னகையுடனும், ஓர் இதமான இதயத்துடனும் நீங்கள் இருந்தால், ஆயிரம் கண்ணாடிகளால் ஆன ஒரு மண்டபத்தில் காலடி வைக்கும் போது, உங்களது சொந்த மகிமையைக் கண்டு நீங்களே திணறிப் போவீர்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email