ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் வணிகத்திற்காக ஒரு வளாகத்தை வாடகைக்கு எடுத்தோம். இது ஒரு நான்கு மாடிக் கட்டிடம், நாங்கள் அதை எங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி சரி செய்தோம். அதன் பராமரிப்பிற்காக, எங்களுக்குச் சரியான ஊழியர்களை அளிக்க வீட்டு பராமரிப்பு நிறுவனம் ஒன்றை நாங்கள் நியமித்து இருந்தோம். எங்கள் வணிகத்தின் மையத்தில் இல்லாத விஷயங்களைச் செய்யும் ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்தல், அவர்களைத் தக்கவைத்தல் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்பட அவசியம் இல்லை என்று நாங்கள் சந்தோஷப்பட்டோம். ஒரு சிறிதளவு கூடுதல் பணம் கொடுத்ததால், ஒரு வெளிப்புற நிறுவனம் அனைத்திற்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இருந்தது. நான் என் அலுவலகத்தைத் தூசி இல்லாமல் வைத்துக் கொள்ளப் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்த ஒருவருடன் (அவரை ‘ஏஜே’ என்று நாம் அழைக்கலாம்) அமர்ந்து, அவர் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பதை அவரிடம் விளக்கினேன். இங்கே சுத்தம் செய்யும் கருவியைப் (swiffer) பயன்படுத்தவும், அங்கே ஈரத்துணியால் துடைக்கவும், இங்கே ஒரு மென்மையான துணியை உபயோகிக்கவும் என்று இன்னும் பலவற்றைக் கூறினேன்.

ஏஜே முழுவதும் தலையை ஆட்டி ஒப்புக் கொண்டு, தனது பணியை முழுமையாக நிறைவேற்றினார். இந்த இளைஞர் என்னைக் கவர்ந்தார், இருபது வயதிற்குள் தான் அவர் இருந்தார், ஆனால் ஒரு மூத்த மேலாளரின் முதிர்ச்சியை அவர் வேலையில் காட்டினார். ஒரே ஒரு பிரச்சனை மட்டும் இருந்தது. ஒவ்வொரு முறை அவர் என் அலுவலகத்தைச் சுத்தம் செய்த போதும், அறை முழுவதும் மிக வலுவான உடல் வாசனை அடித்தது. என்னால் அதைத் தாங்கமுடியவில்லை. ஏஜே, நான்கு பணியாளர் தோழர்களில் ஒருவராக இருந்தார், அவருக்குப் பதிலாக அவரது சக ஊழியர்களில் ஒருவரை மாற்றலாம் என்று நினைத்தேன், ஆனால் அவரைப் புண்படுத்தவும் விரும்பவில்லை.

அவரைப் புண்படுத்தாமல் இதைப்பற்றி எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. வேலைக்கு வருவதற்கு முன் ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு வரவேண்டும் என்ற விஷயத்தை எனது மேலாளர்களில் ஒருவர் மூலமாக நாசூக்காக உணர்த்தினேன். ஏஜே தலையை மட்டும் அசைத்தார். ஒரு சில நாட்களுக்குப் பிறகும் இதே பிரச்சினை தொடர்ந்தது. அவரது இந்த மொத்தப் புறக்கணிப்பு எனக்குள் கோபத்தை உருவாக்கியது. மீண்டும் ஒருமுறை எங்கள் செயல்பாட்டு மேலாளர் அவருடன் பேசியபோது, ஏஜே தனது நிறுவனம் தனக்கு இரண்டு சட்டைகளே கொடுத்துள்ளனர் என்று அவரிடம் கூறினார். அந்த நிறுவனம் எங்களிடம் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியருக்கும் ஐந்து சட்டைகளை வழங்கினால், அந்த நிறுவனத்திற்கு இன்னும் அதிகமான தொகை அளிப்பதாக உடனடியாக நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

ஒரு சில நாட்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. ஆனால் பின்னர் அது மீண்டும் தலை தூக்கியது. எங்கள் அலுவலகம் முழுமையாகக் குளிரூட்டப்பட்டிருந்தது, அதனால் கதவுகள் பெரும்பாலும் மூடியே இருந்தன, ஒவ்வொரு முறையும் அவர் என் அறைக்கு வந்த போதும், அதன் பிறகும் பல நிமிடங்கள் எனக்கு மூச்சுவிடுவதற்குக் கடினமாக இருந்தது. நாங்கள், எல்லோருக்கும் நாற்றம் நீக்கிகளை (deodorants) வாங்கிக் கொடுத்தோம், ஆனால் என்னைப் பொறுத்தவரை அது இன்னும் மோசமாகத் தான் ஆனது. முதலில் அந்த டியோவின் (deo) வலுவான வாசனை என் அலர்ஜியைத் தூண்டிவிடும், பின் எனக்கு ஆஸ்த்துமா ஆரம்பித்துவிடும். இரண்டாவதாக டியோவும், அவரது உடல் நெடியும் இணைந்து, இந்த உலகில் இல்லாத அன்னியமான, ஒரு அசாதாரணமான நெடி வீசியது. நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இறுதியாக, நானே அவரிடம் பேசவேண்டும் என்று நினைத்தேன். இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது என்பதால், நான் (தவறுதலாக) இந்தப் பிரச்சினையின் ஆழம் பற்றி என்னுடன் இருப்பவர்களுக்குப் புரியவில்லை என்று உணர்ந்தேன். நான் ஏஜே-வை அழைத்தேன். அவர் பயத்துடன் காணப்பட்டார்.

“உங்கள் வேலையின் திறனில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஏஜே,” என்று நான் அவரிடம் சொன்னேன். “நாங்கள் எல்லோருமே.”
ஒரு பெரிய புன்னகை அவரது முகத்தில் தோன்றியது. “நன்றி,” என்று அவர் கூறினார்.
“அனைவருக்கும் உடலில் ஒரு வாசனை உள்ளது,” நான் விளக்க முயற்சித்தேன். “நீங்கள் ஒவ்வொரு நாளும் குளித்து, அன்றாடம் துவைத்த ஆடைகளை அணிகிறீர்களா?”

உடனடியாக அவரது புன்னகை மறைந்தது, அவர் தன் தலையைத் தாழ்த்தினார். அவரைப் பேச வைப்பதற்கு முன்பாக ஓரளவு முகஸ்துதி செய்யவும், தட்டிக் கொடுக்கவும் வேண்டி இருந்தது. நான் அவர் மேல் கோபமாக இல்லை என்றும், அவரை வேலையைவிட்டு எடுக்கப் போவதில்லை என்றும் திரும்பத் திரும்பக் கூறினேன். நான் இந்த விஷயத்தைப் புரிந்து கொண்டு, சரி செய்ய மட்டுமே விரும்புகிறேன்.

“நான் விரும்பினாலும், தினமும் ஒரு சுத்தமான சட்டையை அணிய முடியாது என்றும், நான் இங்கு வரும்போது தினமும் என் முகத்தைக் கழுவுகிறேன் என்றும்,” அவர் கூறினார்.
இந்தியாவில் விரைவில் வெப்பமாகிவிடும், அனைத்தும் சூடாகிவிடும், மிக அதிகமாக வியர்த்துவிடும். அவரது முழுமையான சுகாதாரமின்மை என்னை மிரளச் செய்தது.
“மன்னிக்கவும் ஏஜே, ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது குளித்து விட்டு வர வேண்டும். இதில் எந்த மாற்றத்திற்கும் இடம் இல்லை,” என்று நான் உறுதியுடன் சொன்னேன்.
“ஆனால், எனக்கென்று ஒரு வீடு இல்லை, ஐயா,” என்று அவர் கூறி விம்மி அழ ஆரம்பித்தார்.
“என்ன கூறினாய்?” என்று குழப்பத்துடனும், நடுக்க உணர்வுடனும் கேட்டேன்.

“எனக்கு ஒரு வீடு இல்லை, நான் ஒரு குடிசையில் வாழ்கிறேன். இது தார்பாலினால் தயாரிக்கப்பட்டதாகும், அதில் ஒன்பது பேர் வாழ்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
“என்ன?”
“50 குடிசைகளில் வாழும் 500 க்கும் அதிகமான மக்கள் வாழும் எங்கள் குப்பத்தில் ஒரே ஒரு தண்ணீர்க் குழாய் தான் உள்ளது. காலையிலும், மாலையிலும் இரண்டு மணி நேரம் தான் அதில் தண்ணீர் வரும். இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்தால் கூட, அங்கு உள்ள முரட்டு மனிதர்கள் என்னை அடித்துத் துரத்துவார்கள். அவர்கள் தான் எப்போதும் முதலில் குளிப்பார்கள். அவர்களுக்கு முன்னால், குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் வாளிகளில் நிரப்பிக் கொள்வதற்குப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் முடிப்பதற்குள் தண்ணீர் தீர்ந்துவிடும்.”
“இது ரொம்பக் கொடுமையானது,” என்று நான் அதிர்ச்சியடைந்தேன். “ஆனால், நாங்கள் கொடுக்கும் சம்பளத்திற்கு ஒரு நல்ல இடத்தை அல்லது குறைந்தபட்சம் பகிர்ந்து வாழக்கூடிய சரியான இடத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியுமே? உங்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் விடுமுறை மற்றும் ரூ.9000 சம்பளம் கிடைக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த வாழ்க்கை முறையை நிர்வகிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”

சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவருக்குக் கிடைக்கிறது என்றும், அவருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைப்பது கூட மிகவும் அரிது என்றும், இங்குக் கிடைக்கும் விடுமுறை நாட்களில், அவரது வீட்டு பராமரிப்பு நிறுவனம் அதன் உரிமையாளரின் வீட்டில் அல்லது வேறு இடங்களில், வீட்டைச் சுத்தம் செய்யும் மற்றும் தோட்டத்தைப் பராமரிக்கும் வேலையைக் கொடுக்கிறார்கள் என்றும் சொன்னார்.

நான் வீட்டு பராமரிப்பு நிறுவனத்தைத் தொலைப்பேசியில் கூப்பிட்டுத் திட்டினேன்.
“வேலைவாய்ப்புச் சட்டங்கள் என்பதைப்பற்றி எப்போதாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நீங்கள் ஒரு நிறுவனத்தை இயங்கவில்லை, ஆனால் ஒரு முறையற்ற வணிகக் கூட்டமைப்பை நடத்துகிறீர்கள்,” என்று நான் அதன் உரிமையாளரைத் திட்டினேன்.

உரிமையாளர் எந்தத் தவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை, இதில் ஏதோ சில குழப்பங்கள் நடந்து இருக்கக்கூடும் என்று கூறினார். விரக்தியடைந்து நான் தொலைப்பேசியை வைத்தேன். அந்த நிறுவனத்திலிருந்து எங்களிடம் பணிபுரியும் அனைவரையும் கூப்பிட்டு, அந்த நிமிடமே அவர்களுக்கு எங்கள் நிறுவனத்தில் நேரடியாக வேலையைக் கொடுத்தோம். அவர்களின் கல்விக்குப் பணம் கொடுக்கவும், அவர்களது பணி நேரங்களைக் குறைத்து அவர்கள் பள்ளிக்கூடம், கல்லூரி அல்லது எங்கு வேண்டுமானாலும் செல்லவும் நான் வழி செய்வதாகவும் சொன்னேன். அவர்களில் ஒருவருக்கும் படிப்பில் ஆர்வமும் இல்லை, மற்றும் கல்வியின் மதிப்பை அவர்கள் உணரும்படி என்னால் செய்யவும் முடியவில்லை. மொத்த சுரண்டல் மற்றும் மனிதநேயமற்ற நிலைமைகளைத் தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நிலை தவிர, கல்வியின் மேல் அவர்களுக்கு இருந்த முழுமையான விருப்பமின்மை ஒரு சோகமான பகுதியாகவே இருந்தது.

ஒரு நல்ல காரியம், உடல் நெடிப் பிரச்சினை இறுதியில் தீர்க்கப்பட்டது. இருந்த போதிலும், ஊழியர்களுக்கான ஒரு குளியலறையையும் நாங்கள் ஏற்பாடு செய்தோம். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஏஜே ஒரு வாடகை இடத்திற்குக் குடி போனார். அவர், ஏழு குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இருக்க விரும்பியதால், அவருக்கு வாடகைக்கு இடம் கொடுக்கும் உரிமையாளரைக் கண்டு பிடிக்க எல்லோருடைய முயற்சியும் தேவையாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொண்டேன்: இன்னொரு நபரைப் பார்த்து, அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் அனுபவிக்கிறார்கள் என்பதை நம்மால் ஒருபோதும் சொல்ல முடியாது. நம்மைச் சுற்றியுள்ள பலர் மிகவும் கடினமான, சவாலான அல்லது மோசமான சூழல்களில் வாழ்ந்து வருகின்றனர், பெரும்பாலும் அது அவர்களது தவறுகளால் அவ்வாறு இருப்பதில்லை. கர்மாவின் சட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இத்தகைய மோசமான சூழ்நிலையில் ஏஜே எப்போதும் பிறக்க விரும்பியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை, அல்லது அவர் வளரும் போது இது போன்ற ஒரு வாழ்க்கை தமக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கற்பனை கூடச் செய்திருக்கமாட்டார். தவிர, ஒருவர் என்ன செய்திருந்தாலும், யாரும் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது.

எனவே, என் தாழ்மையான பார்வையில், எவரிடத்தும் நமது முதல் உணர்ச்சி கருணையாகத் தான் இருக்க வேண்டும், அவர்களுக்குச் சந்தேகத்தின் அடிப்படையில் நல்லதையே கொடுப்போம். நமது வளர்ப்பு முறை மற்றும் நமது மூளையின் செயல்பாட்டின் காரணமாக, நாம் மக்களை எடை போடுவதைத் தவிர்க்க முடியாது. அது இயற்கையாகவே நமக்கு வருகிறது. சாலையோரத்தில் படுத்திருக்கும் ஒரு மனிதனைப் பார்த்து அவன் குடித்திருப்பான் என்று நாம் நம்புகிறோம், ஆனால் அவன் மாரடைப்பால் கூடப் பாதிக்கப்பட்டிருக்கலாம். இனம், தோற்றம், உடைகள், பேச்சு மற்றும் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு, நாம் விரைவாக மற்ற நபரைப் பற்றி ஒருமுத்திரையை இடுகிறோம். நமது சூழல்களையும், நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் புரிந்துகொள்ளும் இந்தத் தவறான வழி, ஆன்மீகமற்றது மற்றும் நியாயமற்றது.

ஆன்மீகத்தில் முன்னேற நீங்கள் ஆசைப்படுகிறீர்களானால், கருணை மற்றும் நன்றியுணர்வு, பரிவுணர்வு மற்றும் பணிவு ஆகிய நல்லொழுக்கங்களை ஏற்புடையதாக்கிக் கொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும். வேறு வழி எதுவும் இல்லை. நீங்கள் உறுதியாக இருக்க முடியும், நீங்கள் மாட்டேன் என்று சொல்ல முடியும், நீங்கள் ஒரு கோரிக்கையை நிராகரிக்க முடியும், நீங்கள் கருணையைக் கைவிட்டுவிடாமல் இவை எல்லாவற்றையும் மற்றும் இதற்கு மேலும் செய்ய முடியும். இந்த வலைப்பதிவை ஒரு தொலைப்பேசி, டேப்லெட் அல்லது கணினி போன்றவற்றிலோ அல்லது வேறு எங்காவது படிக்கும்படியாக இயற்கையானது உங்களை மிகவும் ஆசீர்வதித்து இருந்தால், இந்த உலகத்தை இன்னும் அழகிய இடமாக மாற்ற உதவி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் ஆடம்பரங்களை, உங்களது கடின உழைப்பினால் தான் நீங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை. மற்றவர்களுக்கு ஏதாவது செய்ய இந்தக் காரணமே போதுமானதாகும். நீங்கள் இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், நீங்கள் எளிதாக இன்னும் கொஞ்சம் அதிகம் செய்ய முடியும்.

ஒரு முறை ரயிலில் ஏறும்போது காந்தியின் ஒரு காலணி அவரது காலில் இருந்து விழுந்துவிட்டது. அவர் நிரம்பி வழிந்த அந்த ரயிலில் எப்படியோ ஏறிவிட்டார், ஆனால் அவரது ஒரு காலணி அது விழுந்த இடத்திலேயே இருந்தது. ஒரு சில கெஜ தூரப் பயணத்திற்குப் பின், அவர் விரைவாக மற்றொரு காலணியையும் கழற்றி நடைபாதை மேடையில் விட்டெறிந்தார்.
“ஏன் நீங்கள் இவ்வாறு செய்தீர்கள்?” என்று அவருடன் பயணித்த ஒருவர் கேட்டார்.
“குறைந்த பட்சம், அதைக் கண்டுபிடிப்பவருக்கு அது ஜோடியாகக் கிடைக்கும். ஒரு காலணி மட்டும் இருந்தால் அதனால் யாருக்கு என்ன பயன்?” என்று காந்தி பதிலளித்தார்.

நம்முடைய நற்குணத்தைக் கைவிட்டுவிடுவதற்கும், ஆசீர்வாதங்களை மதிக்காமல் இருப்பதற்கும், மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கும், மென்மையாக இல்லாமல் இருப்பதற்கும் எந்தக் காரணமும் இல்லை. நம்மிடம் எத்தகைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை உள்ளது, மற்றவர்களையும் நம்முடைய மகிழ்ச்சி மற்றும் வளங்களில் மூழ்கச் செய்வோம். அறிவொளியைத் தேடுகிறவருக்கு நற்குணத்தின் பாதை மிகவும் பலன் அளிக்கிறது.

நல்லவராக இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email