ஒருநாள் நான், சுவாமி ராகவானந்தாவிடம், நான் பொதுவாக அவரை ரகு சுவாமி என்று அழைப்பேன்(நான் அறிந்த சீடர்களுள் மிகவும் விசுவாசமுள்ள சீடர், உத்வேகம் மற்றும் பற்றின்மையுடனானவர்), எனது வலைப்பதிவில் அவரது கதைகளுள் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டேன். நம்பிக்கை மற்றும் கருணை, எளிமை மற்றும் அறநெறி பற்றியதான அழகான ஒரு கதை. ஒரு பரந்த புன்னகையுடன் அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். என்னுடைய வாழ்க்கைக் குறிப்பை (“இப் ட்ரூத் பி டோல்ட்” – If Truth Be Told – என்ற ஆங்கிலப் புத்தகம்) நீங்கள் படித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே ரகு சுவாமியைத் தெரிந்திருக்கும். நான் இமாலயக் காடுகளில் தியானம் செய்த போது என்னைக் கவனித்துக் கொண்ட பிரதீப் பிரம்மச்சாரிதான் இவர்.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு ரகு சுவாமி, 7 வயதாக இருந்த போது அவரது தந்தை ஆறு மாதங்களுக்குச் சம்பளம் பெறவில்லை. அதற்கான காரணம் தெளிவானது: அவர் வெகு தொலைவிலுள்ள ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் புதிய இடத்தில் பணியில் சேர்ந்தால், நீண்ட நாட்களுக்கு மீண்டும் திரும்பப் பழைய இடத்திற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வர முடியாது. புதிய இடத்தில் சேர்ந்தால் அங்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்தாக வேண்டும் (தற்போது இருந்த இடத்தில் ஏற்கனவே அவருக்கு ஒரு சொந்தவீடு இருந்தது), குழந்தைகளின் பள்ளிகளை மாற்ற வேண்டும், சாமான்கள் அனைத்தையும் அந்த இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் இப்படிப் பல. அரசாங்கம் வழங்கும் அவரது சொற்ப சம்பளத்தில் இதற்கான செலவை ஈடுசெய்வது சாத்தியமானதாக இருக்கவில்லை. எனவே, அனைவரும் புதிய இடத்தில் சேர வேண்டாம் என்றும், இடம் மாற்றத்திற்கான ஆணையை ரத்து செய்யக் கோரவும் அறிவுறுத்தினார்கள். அவரும் அந்த ஆலோசனையைப் பின்பற்றினார்.

எனினும் ஆறு மாதங்கள் என்பது ஒரு நீண்ட காலம் ஆகும். அந்தக் குடும்பத்தின் சிறிய சேமிப்பும் தீர்ந்து விட்டது. முதல் மூன்று மாதங்களுக்குள் கட்டணம் கட்டாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெழுகுவர்த்தியோ, விளக்குக்கு எண்ணெய் வாங்கவோ பணம் இல்லை. இவ்வளவு ஏன், சமைக்கவோ அல்லது சாப்பிடவோ சமையலறையில் எதுவும் இல்லாத ஒரு நாள் வந்தது. அரிசி அல்லது உப்பு கூட இல்லை. ஐந்து பேர் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு அடுத்த நாள், ஏன் அன்றைய மாலைப் பொழுதிற்கே எப்படி உணவு கிடைக்கும் என்ற எந்தக் குறிப்பும் இல்லை. ஊழல் மிகுந்த அரசு அதிகாரிகள் எந்த உதவியையும் அளிக்கவில்லை, அவரது கோரிக்கையை விரைவுபடுத்த அதிக பணம் தொடர்ந்து கேட்டனர். ரகு சுவாமியின் தந்தை ஏற்கனவே அவரது மனைவியின் தங்கக் காதணி மற்றும் சங்கிலியை அடைமானம் வைத்து விட்டார் (மாங்கல்யம் மற்றும் ஒரு மூக்குத்தி தவிர அவர்களிடம் இருந்த நகைகள் அவ்வளவு தான்).

சமையலறையில் இருந்த காலிப் பாத்திரங்கள் மற்றும் எடுத்து உபயோகிக்கச் சேமிப்பு எதுவும் இல்லாததைப் பார்த்து, அவர் புதிய இடத்தில் வேலைக்குச் சேர்ந்து விடலாம் என்று சிந்தித்தார். ஆனால் அங்கேயும் கூட குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்கு அவரால் சம்பளம் பெற முடியாது. ஒரு அதிசயம் மட்டுமே மாலை உணவை மேஜைக்குக் கொண்டு வர முடியும்.

ஞாயிற்றுக் கிழமையான, அந்த நாளில், ‘ராம்-சரித்-மானஸ் பாத்’ நிகழ்ச்சிக்கு அவர்கள் அழைக்கப்பட்டார்கள் (இறைவன் இராமனின் புகழைப் பாடும் ஒரு மதச் சார்புடைய நிகழ்ச்சி). இவரது மூத்த சகோதரி அங்கு செல்லத் தான் மிகவும் வெட்கப் படுவதாகக் கூறினார். குறிப்பாகப் பெற்றோர்கள் அங்கே போகப்போவதில்லை என்பதால். அவர்கள் பூஜைத் தட்டில் போட எதுவும் இல்லை என்பதால் வீட்டிலேயே தங்கத் தேர்வு செய்தனர் (சொற்பொழிவாளருக்குப் பணம் அல்லது மற்றப் பரிசுகளை வழங்குவது வழக்கம்). இறுதியில், நினைவு தெரிந்த நாள் முதல் ரகு சுவாமி ராம பக்தராக இருந்த காரணத்தால், 7 வயது ரகு சுவாமியும், 13 வயது அவரது சகோதரரும் செல்ல முடிவு செய்தனர். அது மட்டுமல்லாமல், ஒரு அற்புதமான பண்டிகை உணவும் அளிப்பார்கள் என்பதால் சென்றனர்.

அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் ஆவலுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது போகும் வழியில், ஒரு மனிதர் ஸ்கூட்டரில் அவர்களை வேகமாகக் கடந்து சென்றார். சிறிது தூரத்தில் அந்த மனிதரின் பையிலிருந்து ஒரு பொட்டலம் வெளியே விழுந்ததைப் பார்த்தனர். ரகு சுவாமியும், அவரது சகோதரரும் அந்த நபரை நோக்கி ஓடினர். ஆனால் அவர் ஏற்கனவே வெகு தூரம் சென்று விட்டார். சாலையில் கிடந்ததைப் பார்த்து அவர்களின் கண்கள் பூரிப்படைந்தன. ஒரு சிவப்பு ரப்பர் பேண்டால் கட்டப் பட்டு ஒரு மிகப் பெரிய தொகை இருந்தது. அங்கிருந்த தெருக்கள் ஒன்றில் திரும்பி, அந்த மனிதர் இவர்களது பார்வையை விட்டு அகன்று சென்றுவிட்டார். இருந்தாலும் அவர்கள் அந்தத் தெருவின் கடைசிவரைச் சென்று பார்த்தும் அந்த ஸ்கூட்டர் மனிதரைக் காணவில்லை.

நிகழ்ச்சிக்குத் தாமதமாகச் செல்ல வேண்டாம் என்பதால், அவர்கள் அந்தச் சிறிய கட்டைப் பையில் வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு விரைந்தனர். அங்கு அவர்களுக்குப் பச்சைக் காய்கறிகள், அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு கறி, பூசனிக்காய்க் கூட்டு, பூரி, ஊறுகாய், தயிர், அரிசிப் பாயசம் மற்றும் அல்வா பரிமாறினர். அவர்களுடைய மனம் நிறையும்வரை சாப்பிட்ட பிறகு, மாடிக்குச் சென்று (சுற்றி யாரும் இல்லாத போது) அந்தப் பணத்தை எண்ணினர். அதில் முழுமையாக 1500 ரூபாய்கள் இருந்தன.

அவர்கள் அருகில் இருந்த மளிகைக் கடைக்கு விரைந்து சென்று 700 கிலோ கிராம் அரிசியும், 10 பாக்கெட் உப்பும் வாங்கி, ஒரு சிறிய வண்டியில் தங்கள் வீட்டிற்குக் கொண்டு சென்றனர். குறைந்தபட்சம் அவர்கள் உப்பும், அரிசியும் கொதிக்க வைத்து ஒரு சில மாதங்கள் சாப்பிட முடியும் என்று ரகு சுவாமி என்னிடம் கூறினார். ஒரு பெரிய பரிசு கிடைத்ததைப் போல் வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். அவரது தாயாருக்கு நன்றிப் பெருக்கால் கண்ணீர் வந்தது. அன்று இரவு யாரும் பசியுடன் தூங்கவில்லை.

ஒரு வாரம் கழித்து, ரகு சுவாமியும் அவரது 10 வயது சகோதரியும் தங்கள் பள்ளி நேரத்தில் பள்ளியிலிருந்து வெளியே வந்து, தலைமை மருத்துவ அதிகாரியைச் (CMO) சந்திக்கச் சென்றனர் — அவர்கள் தந்தையின் மனுவிற்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட அதிகாரி. அவர்கள் அவரது அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்து, அவரைப் பார்க்காமல் போக முடியாது என்று வலியுறுத்தினர். ஒரு தன்மையான எழுத்தர் அவர்களை உள்ளே அனுமதித்தார். அவர்கள் அந்த அதிகாரியின் முன் அழுது அவர்களது முழுக் கதையையும் கூறினர். உடனே அந்தத் தலைமை மருத்துவ அதிகாரி (CMO) அவர்களது தந்தையின் கோப்புகளைக் கொண்டுவரச் சொல்லி, அவரது இடமாற்றத்தை ரத்து செய்யக் கோரி கொடுத்திருந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். நிலுவையில் இருந்த அவரது ஆறு மாத சம்பளத்தையும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் வழங்க உத்தரவிட்டார்.

அவரது தந்தை, அடுத்த நாளே வேலையில் சேர்ந்து ஆறு மாத ஊதியத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். சமையலறைக்குத் தேவையானதை வாங்கி வைத்தல், அடகு வைத்த நகையைத் திருப்புதல், துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்பைத் திரும்பப் பெற அதற்கான கட்டணத்தைச் செலுத்துதல் ஆகியவற்றைச் செய்வதற்கு முன், கடவுளின் பீடத்தின்முன் முழுத் தொகையையும் வைத்துப் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் ரகு சுவாமியை அழைத்து 1500 ரூபாய் கொடுத்தார்.

“ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் இந்தப் பணத்தைப் போட்டுவிட்டு வா,” என்று அவர் கண்ணீர் சிந்தியபடிக் கூறினார். “நமக்குத் தேவைப்பட்ட போது கடவுள் உதவினார், நாம் அதை இப்போது திருப்பித் தர வேண்டும்.”

இந்தக் கதையை நினைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு முறையும் என் உணர்ச்சிகள் பொங்கும். நம்பிக்கை உதவாது என்று யார் கூறியது? அருள் கிடைக்கச் சிறிது காலம் ஆகலாம், ஆனால் அது நிச்சயமாக வரும். நமது உலகத்தில் மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்கும் மற்றும் காயப்படுத்தும் கொடூரமான மக்கள் இருக்கலாம் ஆனால் அதிலேயே மற்றவர்களுக்கு எப்போதும் உதவ ஆர்வமாக இருக்கும் சில அழகான மக்களும் இருக்கிறார்கள். எவர் ஒருவர் உண்மையாக, நேர்மையாக, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறாரோ, அவரை இயற்கை ஏமாற்றுவதில்லை. முழுப் பிரபஞ்சமும் இத்தகைய மனிதருக்குத் திட்டமிட்டு வழி வகுக்கும். அது சரியான நேரத்தில் சரியான நபர்களை உங்களுடன் இணைக்கிறது.

இந்தக் கதையின் மிகவும் அழகான பகுதி ரகு சுவாமியின் தந்தை பணத்தைத் திரும்பத் தந்தது. இதுவே உண்மை மற்றும் ஒழுக்கம் இவற்றின் உயர்ந்த வடிவம், ஏனெனில் இதுவே சுத்தமான நேர்மை ஆகும். பதிவிற்காக, இங்கே ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் படி நேர்மை என்பதன் விளக்கம்: ஏமாற்றுத்தனம் இல்லாதிருத்தல்; உண்மையான மற்றும் நேர்மையான.

நேர்மையான வாழ்க்கை நடத்துகிற எவருமே கருணையின் சுற்றுப்பாதைக்கு வெளியே இருப்பதில்லை. அனைத்து விஷயங்களும் எப்போதும் அந்த நபர் நினைத்தபடி நடக்காமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் வீழ்ச்சி அடைவதும் இல்லை. உங்களது எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகள் நேர்மையாக இருந்தால், நீங்கள் ஒரு தெய்வீகப் பிரகாசத்தைப் பரப்புவீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். உங்களது பார்வையால் மக்களுக்கு அமைதியை அளிப்பீர்கள்.

எந்த நேரத்திலும், உங்களது உள்ளம் பொறாமை, எரிச்சல் மற்றும் பேராசைகள் இவற்றால் எரிவதை விட, உண்மை மற்றும் இரக்கம் ஆகிய நெருப்பைப் பற்ற வைப்பது மிகவும் பலனளிப்பதாகும். இது அனைத்து இன்னல்களையும் எரிக்கிறது.

நேர்மையான மனிதரின் இதயத்தில் பேரின்பத்தின் விளக்குகள் மிகவும் அற்புதமாக ஒளிர்கின்றன.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email