எனக்குக் கிடைத்த மின்-அஞ்சல்களில் ஒரு பெரும் சதவிகிதம் நிலையற்ற உறவுகளைப் பற்றியவையாகவே இருக்கின்றன. சில சமயங்களில் உறவில் இணைந்த இருவருமே தங்களது உறவைச் சரிப்படுத்த விரும்புகின்றனர். ஆனால் பல சமயங்களில் ஒருவரே தனது பிரச்சனை என்ன என்று கண்டுபிடிக்க முயல்கிறார். மேலும் பெரும்பாலான சமயங்கள் குழம்பிப் போன நிலையைப் பற்றியதாகும். மற்றொரு நபர் உண்மையிலேயே நேசிக்கிறாரா அல்லது அக்கறை மட்டும் காட்டுகிறாரா என்பது புரியாமல் குழப்பத்தில் இருப்பதாக எனக்கு எழுதுகிறார்கள். இதை அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என்று கேட்கின்றனர். அன்பு என்பது எப்போதும் ஒரு கணிதமேதையின் தொகுப்பாக இருந்ததில்லை. அது வட்டத்தைத் தொட்டுச் செல்லும் ஒரு தொடுகோட்டைப் போன்றதாகும். அதனால் எப்பொழுதும் வட்டத்தின் வெளியிலேயே இருந்து விடுகிறது.

பெரும் ஞானக்கவியான கோஸ்வாமி துளசிதாசர் “ராமச்சரிதமானஸா”வில் ஒரு அழகான வரி எழுதியுள்ளார்: ப்ரீதி ப்ரணய பினு மத தே குனி நாசஹி பேகி நீதி அஸ சுனீ, அதாவது கௌரவம் இல்லாத அன்பும், ஆணவம் நிறைந்த திறமையும், விரைவில் அழிந்துவிடும். ஆகையால், விதிமுறைகள் கருப்பும் வெள்ளையுமாகக் கல்லில் பொறிக்கப்படாமல் இருந்தாலும் அன்பெனும் கோட்டையானது குறிப்பிட்ட தூண்களின் மேல் நிற்கிறது. இருப்பினும், இதைப்பற்றி அடித்தளம் அமைப்பதற்கு முன்னால் ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமாக அன்பு செலுத்துகிறார்கள் என்றும், வெவ்வேறு விதமாக ஆசை கொள்கிறார்கள் என்றும், வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்றும் நான் சொல்ல விழைகிறேன். வேற்றுமைகள் எவையாக இருப்பினும் அன்பின் நான்கு தூண்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இவை மூடநம்பிக்கையின் அடிப்படையினால் ஆனவையில்லை. அந்த நான்கு தூண்களாவன:

1. பரஸ்பர கவனிப்பும் மரியாதையும்

அன்பின் மிகவும் முதன்மையான, மேலான, எல்லாவற்றையும் விட மகத்துவம் நிறைந்த அடையாளம், தகுதி, தூண் எப்படி வேண்டுமானாலும் நீங்கள் இதை அழைக்கலாம். நாம் யாரையாவது நேசிக்கும் பொழுது, அவர்கள் மிகவும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதைப் பார்க்க விரும்புகிறோம். அவர்களுக்கு மகிழ்ச்சியும் சுகமும் கொடுக்கும் செயல்களையே செய்யவும் விரும்புகிறோம். உறவு முறையில், அன்பே முக்கிய காரணமாக உள்ள, எந்த உறவுமுறையிலும் பரஸ்பர பராமரிப்பும் மரியாதையும் இருப்பதே, இருவரிடையில் அன்பு இருக்கிறது என்பதற்கான தெளிவான அறிகுறிகள் ஆகும். நீங்கள் நினைக்கும் விதத்தில் உங்களின் துணைவர் தன் அன்பை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். என்றாலும், அவர்களுடைய சைகைகளில் பராமரிப்பும், மரியாதையும் தெரிந்தால், நீங்கள் அன்பான உறவு முறையில் இருக்கிறீர்கள் என்பதாகும். அந்த பராமரிப்பும் மரியாதையும் அவர்களிடம் மட்டும் இல்லாமல் அவர்கள் செய்யும் செயல்களிலும் வெளிப்படும். ஒருவர் செய்யும் செயல்களில் அவர் என்ன செய்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால், நீங்கள் அறிவில்லாதவர் என்றோ அவர் முட்டாள் என்றோ பொருளல்ல. அடுத்தவரையும் அவரது செயல்களையும் மதிப்பதும், பராமரிப்பதும், அன்பின் உணர்வை ஊட்டி வளர்க்கிறது.

2. பரஸ்பரம் ஒருவரைஒருவர் சார்ந்திருத்தல்

நீங்களும் உங்கள் துணைவரும் ஒருவர் மற்றவரின் வார்த்தைகள், வாக்குறுதிகள் இவற்றைச் சார்ந்திருந்தால் உங்களுக்குள் அன்பு தழைத்து உயிர்பெற்று உள்ளது என்று அர்த்தம். ஒருவரை ஒருவர் சார்ந்திராமல் வெறும் இனிமையான பேச்சுக்களையே கொண்ட அன்பு சிறிதளவும் உபயோகமற்றதாகும். கவர்ச்சியை விட நம்பிக்கை தான் இறுதியில் நீடித்து நிற்கிறது. கவர்ச்சியாக இருப்பதால் மட்டும் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையைக் கட்ட முடியாது, உணவை சாப்பிடத் தயாராக வைக்க முடியாது. ஒருவரை ஒருவர் ஆதரிப்பதற்காக, ஒருவரோ அல்லது இருவருமோ வாழ்க்கை நடத்தச் சம்பாதிக்க வேண்டியுள்ளது. சார்ந்திருப்பது என்பது ஒரு கருவியின் சக்கரங்களைப் போன்றது. ஒரே லயத்துடன் செயலாற்றவேண்டியுள்ளது. ஒன்று செயலாற்றவில்லை என்றாலும், அது செயல்பாடு முழுவதையும் நிறுத்தி விடுகிறது. நீங்கள் சார்ந்திருப்பதில் நம்பிக்கை உள்ளவராக இல்லாமல், உங்கள் துணைவரிடம் மட்டும் அதை எதிர் பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் நடைமுறைக்கு ஒத்துவராதவராக இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் பலஹீனத்தையும் காட்டுகிறது. ஒழுக்கத்தில் அல்ல, உணர்ச்சியில். நீதி நெறிப்படி இல்லை என்றாலும் அது உணர்வு பூரணமாக இருக்கும். ஏன் என்றால் அன்பு செலுத்துவதற்கு உள்மனதில் சக்தி அவசியம். இந்தச் சக்தியின் வலிமைக்கு ஏற்ப அதிகம் அன்பு செலுத்தும் திறனும் இருக்கும். சக்தி பலகீனமாக இருந்தால் எப்பொழுதும் சார்ந்திருப்பவராக மட்டுமே இருக்கிறார்கள். அதையே அவர்கள் அன்பு என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஒருகொடி தன் வாழ்விற்காக மரத்தை சுற்றிப் படர்கிறது. ஆனால் மரத்தின் தயையைப் புரிந்து கொள்வதில்லை என்றால் அது கொடியின் அறியாமையைக் காட்டுகிறது.

3. பரஸ்பர நம்பிக்கை

உறவு முறையில் பராமரிப்பும் மரியாதையும் இருந்தாலும், அதிக அளவில் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தாலும் பரஸ்பர நம்பிக்கை இல்லை என்றால், எல்லாமே சரியில்லை என்றாகும். ஒருவர் மற்றவரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு உங்களின் உறவு போதுமான அளவு உறுதியாக உள்ளது என்றால் நம்பிக்கை இருப்பதாக அர்த்தம். அதாவது உங்களுக்கு உங்கள் மீதும், உங்கள் வாழ்க்கைத் துணை மீதும், உங்கள் உறவு முறையின் மீதும் நம்பிக்கை இருப்பதாக அர்த்தம். உங்களால் வாழ்க்கையின் பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியும் என்பதாகும். தவறு செய்வது மனிதனின் குணம். நீங்கள் சார்ந்திருப்பவரானால், வாழ்க்கை உங்களைக் காயப்படுத்தும்படியான, பலஹீனமான தருணங்களில், குழப்பங்களில், இட்டுச் செல்வது இயற்கை. உங்கள் உறவு முறை திடமாகவும், நீங்கள் ஆன்மீகம் மற்றும் உணர்வுகளில் வலிமையானவராகவும் இருந்தால் நீங்கள் வெற்றிவீரராகத் தோன்றுவீர்கள். உங்களால் அமைதியாக உறங்க முடியும். உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்து புன்முறுவல் பூக்க முடியும். கர்வமில்லாத நன்னடத்தையின் துணையுடன் தலை நிமிர்ந்து நிற்கமுடியும். மற்றவரின் அன்பைத் தமது உரிமை என்று எடுத்துக் கொள்வது நம்பிக்கையை முறிப்பதாகும். அடிக்கடி இவ்வாறு முறிப்பது, தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் சாதனம் என்னும் நூலால் கோர்க்கப்பட்ட எலும்புகளின் சேர்க்கையாக உறவு முறை ஆகி விடும். அன்பு என்பது ஒரு கதகதப்பான, சுகந்தமான, ஈர்ப்பு சக்தி கொண்ட உணர்வு என்பதற்கு எதிர்ப்பதம் ஆகிவிடும்.

4. பரஸ்பர தியாகம்

அன்பு என்பது பரஸ்பர தியாகத்தால் வளர்கிறது. அது உண்மையில் பரஸ்பரமாக இருக்குமானால், அடுத்தவர் எது செய்தாலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் உணர்வீர்கள். ஆனால் அதில் ஒருவர் தியாகம் செய்வதாகவும், மற்றவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் நினைத்தால் அது பரஸ்பர தியாகம் இல்லை. இது ஒரு மிகச் சங்கடமான நிலை. இதனால் உறவு கெட்டுவிடும். சங்கடம் என்னவென்றால் இருவருமே தனித்தனியாக நான் தான் தியாகம் செய்கிறேன் என்றும், அடுத்தவர் செய்வதில்லை என்றும் பெரும்பாலும் நினைப்பதுதான். இவ்வாறு நினைக்கும் பொழுது, இருவரும் அமர்ந்து நிலமையை அறிவுடனும், யதார்த்தத்துடனும் சிந்தியுங்கள். ஒருமுறை ஒரு பெண், அவள் கணவர் அவளுடன் அதிகநேரம் செலவழிப்பதில்லை என்றும், அவர் தன் கடமையைச் செய்கிறார் ஆனால் அவளிடம் அன்புகாட்டுவதில்லை என்றும் எனக்கு எழுதி இருந்தாள். உன் கணவன் வேலையை விட்டு விட்டு உன்னருகிலேயே இருக்கவேண்டுமா என்று நான் அவளைக் கேட்டேன். அவளுடைய கணவனுக்கும், நீங்கள் உங்கள் மனைவி மற்றும் குடும்பத்தைவிட உங்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்று கடிதம் எழுதினேன். அவர்கள் இருவரும் புத்திசாலிகள். சிந்தித்துச் செயலாற்றினர். ஏன் அன்பில் எழுதல் அல்லது நிற்றல் என்பதற்கு எதிர்மறையாக ‘விழுதல்’ என்கிறோம் என்று எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

இருவருக்கும் பொதுவான செயல்கள் இருந்தால் அதைச் செய்வதில் ஒருவருடன் ஒருவர் இருக்கும் நேரம் அதிகரிக்கும், அது உங்களுடைய உறவின் தன்மையை அதிகரிக்கும். அன்பு நீங்கள் சுகமாக இருக்க வழி செய்கிறது. அதை உங்களின் உரிமையாக எடுத்துக் கொண்டால் அது உங்களுக்குத் தண்டனையை அளித்து விடுகிறது. அன்பு என்பதே அடுத்தவரைப்பற்றித் தெரிந்து கொள்வதும், தன்னைப்பற்றித் தெரிந்து கொள்வதும், என்ன உள்ளதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், ஒருவர் மற்றவருடன் இணைந்து வேலைகளைச் செய்வதும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதும், ஒருவர் மற்றொருவருக்காக வாழ்வதும் ஆகும்.

சார்ந்திருக்கும் தன்மையின், அதாவது அன்பென்று மாறுவேடத்தில் இருக்கும் சுயநலத்தின், அந்த நான்கு தூண்கள் என்ன என்று அறிய ஆவலாக உள்ளதா? அவையாவன: நான், எனது, எனக்கு மற்றும் என்னுடையது ஆகும்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email