நல்லவராக இருத்தல்

நினைத்துப் பார்த்தால் இது ஒரு தத்துவ வினாவாகும், இந்த வகையான பெரும்பாலான கேள்விகளைப் போல், இது நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிகப் பலனளிப்பது எது?: ஒரு இடைவிடா பொருள் சேர்க்கும் முயற்சியா அல்லது ஆழ்மன அமைதிப் பாதையில் நடப்பதா? அவை ஒன்றோடொன்று பரஸ்பரம் இல்லை என்றாலும், நாம் ஏதாவது ஒன்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதாவது, இரக்கமற்று நடந்து கொள்ள வேண்டும் மற்றும் உறவுகளை இழக்க வேண்டும் என்று இருந்தாலும் (வெற்றிக்காக நம்முடைய ஒழுக்க நெறிகளையும், கொள்கைகளையும் இழக்க வேண்டியதில்லை என்று நம்புகிறேன்), நாம் வெற்றி அடைவதில் கவனம் செலுத்த வேண்டுமா? அல்லது, நமது இலக்கிலிருந்து சிறிது கீழே இறங்கி வந்து, நமது குடும்பம், பேரார்வம், ஆழ்மன அழைப்பு மற்றும் இது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்து குடியேறிப் போராடிக் கொண்டிருந்த தனது பெற்றோரைப் பற்றி ஒரு அமெரிக்க போதகர் டோனி காம்போலோ, தனது பெற்றோர் எதிர் கொண்ட கஷ்டங்களைப் பற்றியும், மற்றொரு போதகர் மூலம் அவர்கள் பெற்ற உதவியைப் பற்றியும் (பின்னர் மிகவும் எதிர்பாராத விதமாக டோனி அவரைச் சந்தித்தார்) சுருக்கமாகத் தனது புத்தகத்தில் கூறி உள்ளார். மேலும் முக்கியமாக, அவர் ‘லெட் மி டெல் யூ எ ஸ்டோரி’ (Let Me Tell You a Story) என்ற தனது புத்தகத்தில், ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்.

உலகெங்கிலும் உள்ள தாய்மார்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், “உங்கள் பிள்ளைகள் வளர்ந்தபின் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டார்கள். ஜப்பானியத் தாய்மார்கள் எப்பொழுதும் போல், “எங்கள் குழந்தைகள் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்றனர்.

இதன் விளைவாக, ஜப்பான் மக்கள் உலக வரலாற்றில் மிக வெற்றிகரமான-உந்துதல் கொண்ட குழந்தைகளின் தலைமுறையை உருவாக்கினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வேலையிலும், மற்றவர்களை விட அவர்கள் கடினமாகவும், நீண்ட நேரமும் உழைக்கிறார்கள். அவர்கள் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையிலும் அவர்களால் சிறந்து விளங்க முடியும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பான் மீண்டும் தழைத்து வந்தது, அந்தக் குழந்தைகள் மீது அவர்களது பெற்றோர் திணித்த, வெற்றியை நோக்கிய பயிற்சியே காரணமாக இருந்தது.

அதே கேள்வியை அமெரிக்கத் தாய்மார்களிடம் கேட்டபோது, அவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்யலாம்: “எங்கள் குழந்தைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்!” என்றனர்.

சந்தோஷமாக?!?!?! நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், நான் பழமை வாய்ந்த ஒரு இத்தாலியக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன். நான் சந்தோஷமாக இருந்தேனா என்று என் தந்தை உண்மையில் அக்கறை கொண்டார் என்று நான் நினைக்கவில்லை. ஓ, நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், வெற்றிகரமாக வரவேண்டும் என்பதிலும் ஒருவேளை அவர் கவலையாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் என் தந்தையிடம், அதிலும் குறிப்பாக என் அன்னையிடம், “உங்கள் பிள்ளை வளர்ந்தபின், அவன் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்டிருந்தால், இருவரும், “அவன் நல்லவனாக இருக்க விரும்புகிறோம்,” என்று கண்டிப்பாகக் கூறியிருப்பார்கள்.

இந்தக் கதையைப் படித்தது எனக்கு ஒரு அழகான பழக்கமான அனுபவமாக இருந்தது (உங்களுக்கும் கூட அப்படி இருக்கலாம்). நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த போது, என் தாய் அதை (நான் நல்லவனாக இருக்க வேண்டும்) மட்டுமே வேண்டிக் கொண்டிருந்தார் என்பது எனக்கு ஞாபகம் உள்ளது. அவர் எங்களை ஞானிகளிடம் ஆசீர்வாதத்திற்காகக் கூட்டிச் செல்லும் போதெல்லாம், “அவர்கள் நல்ல மனிதர்களாக வளருவதற்குத் தயவு செய்து ஆசீர்வதியுங்கள்,” என்று எப்போதும் கூறுவார்கள். வாழ்க்கையில் நல்லவராக இருத்தலே மிக முக்கியமான விஷயம் என்று என் தாய் சொல்லுவார்கள். மற்றவையெல்லாம் ஏதாவது ஒரு வழியில் தானாகவே நடந்துவிடும் என்றும் என் தாய் சொல்லுவார்கள். “முக்கியமானவராக இருப்பது நல்லது ஆனால் நல்லவராக இருப்பது மிகவும் முக்கியமானதாகும்,” என்று நான் சிறுவனாக இருந்தபோது எங்கோ படித்திருக்கிறேன்.

சில நேரங்களில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மற்றும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை நான் மறுக்கவில்லை, நல்ல பண்பைக் கைவிடாமலும் அதைச் செய்ய முடியும். நல்லவராக இருப்பதும், மென்மையானதாக இருப்பதும் ஒன்றே என்று நினைப்பது, நல்ல பண்பைப் பற்றிய தவறான புரிதலாகும். (நான்கு வருடங்களுக்கு முன்னர், பிளாட்டோவின் யூதிஃப்ரோவின் அடிப்படையில், ‘நல்லது என்றால் என்ன?’ என்பதைப் பற்றிய கேள்விக்கு, நான் எழுதி உள்ளேன். அதை நீங்கள் இங்கே படிக்கலாம்). நன்மைக்கான மூன்று அடிப்படை பண்புக் கூறுகள் உள்ளன, என்று நான் பார்க்கிறேன்:

1. சிறந்த உள்நோக்கம்

நான் என்ன செய்யப்போகிறேனோ அதற்குப் பின்னால் உள்ள என் எண்ணத்தில் யாரையும் காயம், தீங்கு அல்லது வலியை ஏற்படுத்தும் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதே நன்மையின் அடிப்படை ஆகும். அதாவது, எவரிடத்திலும் பொறாமையோ, பகைமையோ அல்லது வெறுப்பையோ நான் என் இதயத்தில் தேக்கி வைத்திருப்பது இல்லை. சிறந்த உள்நோக்கம் உங்கள் உணர்வு நிலையைத் தூய்மை செய்யும் பொருளாகச் செயல்படுகிறது. சொல்லப்போனால் இது முதல் படியாகும், இது மட்டுமே முழுமையானது ஆகாது. உண்மையான நற்குணம் என்றால் யாரோ ஒருவருக்கு உதவுவது, வெறுமனே எண்ணத்தில் மட்டும் அல்ல, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும். நீங்கள் சாதகமான ஒன்றைச் செய்ய விரும்பும் போது, உங்களுடைய அன்புக்கு உரியவர்கள் உங்களை ஆதரிக்கவில்லை என்றால் சவால் உருவாகிறது. உங்களுடைய செயல்கள் சிலருக்கு உதவியாகவும், மற்றவர்களைத் தொந்தரவாகவும் இருந்தாலும், உங்கள் எண்ணம் இன்னமும் உன்னதமானதா? நல்லவராக இருப்பதற்குப் பின்னால் உள்ள உண்மையான கஷ்டம் இதுதான். இப்போதுதான் ஒரு தேர்வு செய்யப்பட வேண்டும். அத்தகைய ஒரு நிகழ்வில், உன்னத நோக்கத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம், தேவைப்பட்டவர்களுக்கு உதவி செய்வதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் அன்பின் அடிப்படையில், எந்த ஒரு பழி உணர்ச்சியோ அல்லது விஷமோ இல்லாமல், சரியான பாதையில் தொடர்ந்து செல்வது அல்லது நேரடியாக மற்றவருக்கு உதவுவது என்று மட்டுமே கருத்தில் கொண்டு இருந்தால், அப்போது நமது உள்நோக்கம் சிறந்த ஒன்றாகும்.

2. பிறர்க்கென வாழும் பண்பு

வாழ்க்கையில் நாம் செய்யும் பெரும்பாலானவை, நம் சொந்த வசதிகளையும், மகிழ்ச்சிகளையும் நோக்கியே இருக்கின்றன. வேகமான கார்கள், பெரிய வீடுகள், சமீபத்திய கேஜெட்டுகள், அதிக முதலீடுகள் மற்றும் இப்படிப் பல. நம் சுய நலன்களைப் பின் தள்ளி, மற்றவர்களை முதலாவதாக வைத்து, ஓரளவு தன்னலமற்ற தன்மையுடன் ஒரு முடிவை எடுக்கும்போது, நாம் நல்லவராக இருக்கிறோம். ஒரு அழகிய சூஃபி முதுமொழியை, மொழிபெயர்த்தது கீழே கொடுக்கப்பட்டு உள்ளது:

கல்யாண் தரண கோய் பஹாதுரி நஹின், லெய்கே டூபடே ந டரேன் டே தான் ஜானா.
பல்யன் நால் கர்தா ஹர் கோய் பலா யாரா, பலா புரே நால் கரேன் டே தான் ஜானா.
(நீங்கள் தனியாக நீந்த முடியும் என்பது பெரிய விஷயம் இல்லை, நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவரைக் காப்பாற்ற முடியுமென்றால், எனக்குக் காட்டுங்கள். ஒரு நல்ல மனிதருடன் இருந்தால் அனைவரும் நல்லவராக இருப்பர், ஒரு கெட்ட மனிதனுக்கு உன்னால் நல்லது செய்ய முடியுமானால் எனக்குக் காண்பி.)

பிறர்க்கென வாழும் இந்த உணர்வு என்னை அடுத்த முக்கிய விஷயத்திற்கு வழிநடத்துகிறது, ஏனெனில் சுயநலமின்றி இருத்தல் என்றால், உதவியை ஏற்க விரும்பாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் கூறவில்லை. பிறர்க்கென வாழும் பண்பு என்று நான் எதைக் குறிக்கிறேன் என்றால், எவருடனும் நமது முதல் நடவடிக்கை அவர்களுக்கு உதவுவதற்காக இருக்க வேண்டும் அவர்களை மதிப்பிடுவதற்கு அல்ல, இரக்கம் காண்பிப்பதற்காக இருக்க வேண்டும் அறிவுரை செய்வதற்கு அல்ல, அவர்களை ஆதரிப்பதற்குத் தான், கண்டனம் செய்வதற்கு அல்ல. நாம் அவர்களுக்குக் கை கொடுக்க வேண்டும், அவர்கள் அதை ஏற்க மறுத்தால், அது வேறு விஷயம்.

3. விவேகம்

நல்லவராக இருப்பது என்பது அனைவரும் ஏறி மிதிக்கும்படியாக இருப்பது இல்லை. ஒரு எச்சரிக்கையுடன் உங்களது கணிப்பைக் கையாளும் போது, அதை ஓரளவு யதார்த்தமாக மற்றும் நடைமுறைக்கு ஏற்றவாறு திறமையுடன் செய்வதே விவேகம் ஆகும். விவேகமில்லாவிட்டால் நன்மை என்பது, வேறு எதையும் விட அறியாமையின் பக்கம் அதிகமாகச் சாய்கிறது. நீங்கள் கேட்டிருக்கலாம், “ஒருபோதும் உதவி செய்வதை விட்டுவிடாதீர்கள்.” இது எப்போதும் உண்மை அல்ல, ஏனென்றால் யாரும் உதவி செய்வதை ஒருவர் விரும்பவில்லை என்றால், உங்களால் அவருக்கு உதவ முடியாது. நல்லவராக இருத்தல் என்பது எப்போது விட்டுவிடுவது என்றும், எங்குத் தேவையோ அங்கே உங்கள் சக்தியைத் திருப்பவும் அறிந்திருத்தல் ஆகும். ஞானமில்லாத நற்குணம் பெரும்பாலும் வலி மிகுந்ததாகவும் மற்றும் அரிதாகவே பயனுள்ளதாகவும் இருக்கும்.

இரண்டு இளம் சிறுவர்கள், ஜானி மற்றும் ரோனி, கிறிஸ்துமஸ்ஸூக்கு முன் தங்கள் தாத்தா-பாட்டி வீட்டில் ஒரு வாரம் கழித்தனர். ஒரு நாள் இரவு, தூங்குவதற்கு முன், அவர்கள் தங்கள் படுக்கை அருகில் மண்டியிட்டுப் பிரார்த்திக்க ஆரம்பித்தனர். இளையவர் ஜானி, மிகவும் சத்தமாகக்கத்திப் பிரார்த்திக்கத் தொடங்கினார்:
“நான் ஒரு புதிய சைக்கிளுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன் …,” பின்னர் அவர் சத்தமாக பேசினார், “புதிய சைக்கிள்! கடவுளே, எனக்கு கிறிஸ்துமஸ்ஸூக்கு ஒரு புதிய சைக்கிள் கொடுங்கள்!”
ரோனி அவனைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, ஜானி இன்னும் அதிக ஆர்வத்துடன் பிரார்த்தனை செய்துகொண்டே இன்னும் அதிகமாகக் கத்தினான், அவன் பிரார்த்தனை செய்யவில்லை, ஆனால் அக்கம் பக்கம் இருந்தவர்களை எழுப்ப முயற்சிப்பது போல் இருந்தது. “நான் ஒரு புதிய எக்ஸ்-பாக்ஸ் … எக்ஸ்-பாக்ஸ்ஸூக்காகப் பிரார்த்திக்கிறேன், இறைவா, இது ஒரு விளையாட்டுப் பொறி! எனக்கு கிறிஸ்துமஸ்ஸூக்கு ஒரு புதிய எக்ஸ்-பாக்ஸ் கொடுங்கள்!!”
“ஜானி உனக்கு என்ன நேர்ந்தது?” ரோனி அவனை உலுக்கினான். “ஏன் இப்படிக் கத்துகிறாய்? கடவுள் செவிடு அல்ல.”
“ஆனால், பாட்டி செவிடு!” என்று முணுமுணுத்துவிட்டு, சத்தமாகப் பிரார்த்தனை செய்யச் சென்றான்.

ஒரு விசுவாசிக்கு, ஒரு ‘உயர்ந்த ஆற்றல்’ அனைத்தையும் அளிக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருப்பினும் நீங்கள் அதைப் பற்றி நிஜமாகவே யோசித்தால், எப்பொழுதுமே ஊடகமாக வேறு ஒரு மனிதர் வழக்கத்தில் இருப்பார். நல்லவராக இருப்பது, இந்த உலகில் மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு நல்ல வழி. நீங்கள் எவ்வளவு நல்லவராக இருக்கிறீர்களோ, அவ்வளவு உயிர்களை உங்களால் தொட முடியும். நீங்கள் மேலும் அதிக உயிர்களைத் தொடும் போது (அல்லது ஒரு சில உயிர்களை அதிகபட்சம் தொடும் போது), உங்கள் உணர்வில் அழகான நினைவுகளின் எண்ணிக்கை அதிகமாகிறது. இந்த நேர்மறை மற்றும் அன்பான நினைவுகள், நீங்கள் தனிமையாக அல்லது வாட்டமுற்று உணரும் ஒவ்வொரு முறையும் உங்கள் மீட்புக்கு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் கவனித்தீர்கள் என்றால், உங்களுடைய நினைவுகளின் உலகில் நீங்கள் தொலைந்து போகும் போது, நீங்கள் தனியாக உணர்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பீர்கள். ஒற்றுமையான, அன்பான, கருணையுடனான தருணங்கள் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குகின்றன. வாதங்கள், தவறான கருத்துக்கள், ஆத்திரமடைதல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகிய தருணங்கள் சோகமான நினைவுகளின் கட்டுமானக் கற்களாக இருக்கின்றன. முன்னால் உள்ளது உங்களை உள்ளே கதகதப்பாகவும், மற்றும் பிந்தையது கசப்பாகவும் ஆக்குகிறது. எவர் ஒருவர், நன்மையின் உள்ளார்ந்த தன்மையைப் புரிந்து கொள்கிறாரோ மற்றும் கிரகித்துக் கொள்கிறாரோ, அவர் ஒருபோதும் தனியாக உணர மாட்டார்.

ஒரு சீடர் அவருடைய குருவிடம், “இந்தத் தீவிரமான தனிமை உணர்ச்சியை நான் எவ்வாறு வெல்வது?’’ என்று கேட்டார்.
“எதுவும் சரியான இடத்தில் இல்லை என்று ஒரு போதும் நினைக்காதே,” என்று குரு பதிலளித்தார். “வாழ்க்கையில் எல்லாமே அது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கேயே இருக்கின்றது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் எதிர்நோக்கிப் பார்ப்பதற்கு அதிக விஷயங்கள் இருக்கும்.”

நம்பிக்கைக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள். நீங்கள் நல்லவராக இருக்கும் போது, மற்றவர்களுடன் வலுவான உறவை நீங்கள் உருவாக்கிக் கொள்வது மட்டுமல்லாமல், உங்களுடனேயே ஒரு ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் மிகச் சிறந்த உறவினில் நுழைகிறீர்கள். அது என்ன என்று வியப்படைகிறீர்களா? மிகவும் மன நிறைவு தரும் உறவு, அமைதியுடனான உறவு ஆகும். நன்மைக்கான வாழ்நாள் முழுவதுமான சந்தா இல்லாமல் இது சாத்தியமில்லை, என்பதையும் நான் இத்துடன் இணைக்கிறேன்.

நல்லவராக இருப்பது காலப் போக்கில், நீங்கள் கற்பனை செய்யக்கூடிய வேறு எதையும் விடப் பலன் அளிக்கக் கூடியதாக இருக்கும். இது அதிகமான பெரிய லாபத்தைத் தருகிறது. நற்குணம், உண்மையான நம்பிக்கையின் வித்து. நீங்கள் செய்யும் எந்த ஒரு அன்பான செயலும் எப்படியும் கவனிக்கப்படாமல் போகாது, இயற்கை அன்னை பலமடங்கு அதிகமாகத் திருப்பித் தருவாள். அப்படியே எப்போதும் நடக்கிறது.

நாம் இந்தக் கிரகத்தில் இருக்கும்போது, நமக்கு, நம் அன்புக்குரியவர்களுக்கு, சமுதாயத்திற்கு மற்றும் மொத்தத்தில் உலகிற்கு, நன்மையைப் பிரச்சாரம் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. உங்களிடம் உள்ள இந்த மகத்துவத்தின் விதை, நீங்கள் அனுபவிக்க விரும்பும் அந்தத் தெய்வீக ஒளி, உங்களுக்குள் இருக்கும் அந்த நற்குணத்தின் நெருப்பை வளர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. அது குமுறும் போது, அனைத்து எதிர்மறையையும், சுய நலனையும் கபளீகரம் செய்கிறது.

அடுத்த முறை மழை பெய்தவுடன் வானத்தைக் கவனிக்கவும். எல்லா மேகங்களும் காலியான அழகிய நீல நிற வானம், எப்போதும் அமைதியாக, சுத்தப்படுத்தப்பட்ட ஒரு புதுமையுடன் இருக்கும். ஒரு நல்ல இதயமும் இதைப் போன்றதே; உங்களுடைய அல்லது மற்றவர்களுடைய, தோற்கடிக்கப்பட்ட மற்றும் எதிர்மறை உணர்வுகளுக்கான எந்தவித தடயங்களையும் சுமந்துகொண்டிராமல், அதன் சொந்த மகத்துவத்தில் அது அமைதியாக இருக்கிறது.

நல்லவராக இருங்கள், மென்மையாக இருங்கள்.

அமைதி.
சுவாமி

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்: Share on Facebook
Facebook
0Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin
Google+
Google+
0Email to someone
email